போலியோ தடுப்பு மருந்து: அரசின் அலட்சியம் ஆபத்தானது!

Published : 12 Feb 2019 08:45 IST
Updated : 12 Feb 2019 10:02 IST

குழந்தைகள் நலனில் மத்திய சுகாதாரத் துறை எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்பதைக் குழந்தைகளுக்கு இலவசமாக இளம்பிள்ளைவாத (போலியோ) தடுப்பு மருந்து கொடுக்கும் விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. முதல் விவகாரம் சமீபத்தில் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்தது.

“குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காதீர்கள். அதில் நச்சு கலந்துள்ளது” என்று ஒரு குறுஞ்செய்தி சில மாதங்களுக்கு முன்பு மேற்சொன்ன மாநிலங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அங்கு குழந்தைகளின் மலப் பரிசோதனைகளில் ஏற்கெனவே இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த இளம்பிள்ளைவாதக் கிருமிகள் காணப்பட்டன என்பதும், அந்த மாநிலங்களில் அரசுகளின் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் இளம்பிள்ளைவாதச் சொட்டு மருந்தில் அந்தக் கிருமிகள் கலந்திருந்திருந்தன என்பதும்தான் அதற்குக் காரணங்கள் எனப் பின்னர் தெரியவந்தன.

இதனால் என்ன பிரச்சினை?

இளம்பிள்ளை வாதம் மூன்று வகை ‘போலியோ வைரஸ்’களால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முடமாக்கும் நோய். இந்தக் கிருமிகள் நோயாளியின் மலத்தில் வெளியேறி, மற்றவர்களுக்குப் பரவுகின்றன. இதைக் குணப்படுத்துவதற்கு மருந்து கிடையாது. தடுத்துக்கொள்வதற்கு மட்டும் சொட்டு மருந்தும் ஊசி மருந்தும் இருக்கின்றன.

2015 செப்டம்பரில் ‘இந்தியாவில் போலியோ இல்லை’ எனும் நிலைமை உறுதியானது. என்றாலும் பாகிஸ்தான், நைஜீரியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இந்த நோய் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் வழியாக நாட்டில் நோய் பரவிவிடக் கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வில் இப்போதும் இந்தியக் குழந்தைகளுக்குத் தடுப்புச் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மருந்து வகை முக்கியம்!

தடுப்புச் சொட்டு மருந்தில் இரு வகை உண்டு. மூன்று வகை போலியோ வைரஸ் கிருமிகளை வீரியமிழக்கச் செய்து, அவற்றில் தடுப்பு மருந்து தயாரித்துப் பயன்படுத்தியது பழைய முறை. இதற்கு மும்முனை (Trivalent) மருந்து என்று பெயர். முதலாம் வகை மற்றும் மூன்றாம் வகை வைரஸ் கிருமிகளைக் கொண்டு தயாரிப்பது இப்போதைய முறை. இதற்கு இருமுனை (Bivalent) மருந்து என்று பெயர். இந்த மருந்தைக் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்தாக வாய் வழி கொடுப்பது செயல்முறை. இப்படிப் பயன்படுத்தும்போது, அந்தக் குழந்தைகளுக்கு போலியோ வருவது தடுக்கப்படும்.

அதேவேளையில் அந்தக் குழந்தைகளின் மலத்தில் இந்தக் கிருமிகள் வெளியேறி மற்றவர்களுக்கும் பரவும். ஆரோக்கியமுள்ள குழந்தைகள் உடலுக்குள் இந்தக் கிருமிகள் புகுந்தால், அவர்களுக்கு போலியோ வராமல் தடுக்கும். இதற்கு ‘சமூக நோய்ப் பாதுகாப்பு’ (Herd immunity) என்று பெயர். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த, ஊட்டச்சத்தில்லாத, வேறு தடுப்பூசிகளே போடப்படாத குழந்தைகளுக்குப் பரவினால், நோயைத் தடுப்பதற்குப் பதிலாக இது நோயைக் கொடுத்துவிடும். அப்படியொரு அச்சம்தான் இப்போது அந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது.

2016 வரைக்கும் இந்தியாவில் மும்முனை மருந்துதான் பயன்பாட்டில் இருந்தது. 2016 ஏப்ரலில் உலக சுகாதார நிறுவனம் இரண்டாம் வகை போலியோ வைரஸ் உலகில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் மும்முனை சொட்டு மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், இருமுனை சொட்டு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்தியாவிலும் 1999-க்குப் பிறகு இரண்டாம் வகை போலியோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானதால், மத்திய சுகாதாரத் துறை 2016-க்குப் பிறகு இருமுனை சொட்டு மருந்தை மட்டுமே பயன்படுத்தும்படி வலியுறுத்தியது. ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் மும்முனைத் தடுப்பு மருந்தை அழித்துவிடும்படியும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது அறிக்கை அனுப்பியது.

வணிகக் குற்றம்

அண்மையில் உத்தர பிரதேச அரசுக்குத் தனியார் நிறுவனம் விநியோகித்திருக்கும் ஒன்றரை லட்சம் சொட்டு மருந்துக் குப்பிகளில் இரண்டாம் வகை போலியோ வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரத் துறையின் எச்சரிக்கையை மீறும் செயலாகும். நிகழ்ந்தவற்றைப் பார்த்தால், இது கவனக்குறைவால் நேர்ந்த தவறாகத் தெரியவில்லை. இந்த நிறுவனம் முன்பே தயாரித்து வைத்திருந்த மும்முனை தடுப்பு மருந்தை அழிக்காமல் வைத்திருந்து, இப்போது விநியோகித்திருக்கக்கூடும் என்றே இதைச் சந்தேகப்பட வைக்கிறது. இது மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடத் துணிந்த, அறம் மறைந்த வணிகக் குற்றம். இதற்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது மத்திய அரசின் கடமை.

இந்தப் பிரச்சினையில் மத்திய சுகாதாரத் துறையின் அலட்சியத்தையும் புறந்தள்ள முடியாது. மருந்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் மருத்துவச் சங்கிலி அமைப்புகள் ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால், இந்தத் தவறு நேர்ந்திருக்காது. அவர்கள் தடுப்பூசியின் தரம் மற்றும் கலப்படத்தைச் சோதிக்கத் தவறிவிட்டதால்தான், ஒழிக்கப்பட்டிருந்த இரண்டாம் வகை போலியோ கிருமிகள் இந்தியாவில் மறுபடியும் தோன்றுவதற்கு வழி செய்துவிட்டது. இந்தக் கிருமிகள் வீரியம் இல்லாதவை என்பதால், போலியோ நோய் இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றாலும், தடுப்பூசிகள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவதற்கு இது வழி கொடுத்துவிட்டது.

தேதிகளில் மாற்றம் ஏன்?

இதேபோல தடுப்பூசிகள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவதற்கு இப்போதும் ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. இது இரண்டாவது விவகாரம். ஆண்டுக்கு இரண்டு முறை நாடு முழுவதிலும் ஒரே நாளில் குழந்தைகளுக்கு இலவசமாகத் தடுப்பு மருந்து கொடுக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டில் பிப்ரவரி 3-ல் கொடுக்கப்பட வேண்டிய தடுப்பு மருந்து மார்ச் 10-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் காரணங்களைச் சொல்கிறார்கள். விளக்கம் தர வேண்டிய மத்திய சுகாதாரத் துறை அமைதி காக்கிறது. எதுவாக இருந்தாலும் இது அரசு இயந்திரத்தின் அலட்சியத்தின் விளைவு என்பது கண்கூடு.

முன்பெல்லாம் இதே சுகாதாரத் துறைதான் குறிப்பிட்ட நாட்களில் குழந்தைகளைக் கூவிக்கூவி அழைத்துத் தடுப்பு மருந்து கொடுத்தது. அப்படிக் கொடுக்கப்படவில்லை என்றால் இளம்பிள்ளை வாதம் வந்துவிடும் என்றும் எச்சரித்தது. இப்போது அதன் விருப்பத்துக்கு தேதியை மாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கான தகுந்த முன்னறிவிப்போ, மருத்துவம் சார்ந்த விளக்கங்களோ மருத்துவர்களுக்கும் தரப்படவில்லை; மக்களுக்கும் வழங்கப்படவில்லை. இதனால், ஊடகங்களில் தவறான கருத்துகள் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

தேசத்தின் பொது ஆரோக்கியம் தடுப்பூசிகளை நம்பியே உள்ளது. இந்தியாவில் இன்றைக்கும் 35% குழந்தைகள் தடுப்பூசி போடப்படாத காரணத்தால் நோய்த்தொற்றுகளுடன் போராடுகின்றனர். இந்த நோய்த்தொற்று அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நாட்டில் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளால் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மக்கள் குழம்பியிருக்கின்றனர். அரசின் அலட்சியப்போக்கால் இப்போது ஏற்பட்டுள்ள அவலத்தால், மக்களின் குழப்பம் இன்னும் அதிகரித்திருக்கிறது. ‘மக்களுக்காக நாங்கள்’ என முழக்கமிடும் அரசுகள் இனிமேலாவது விழித்துக் கொண்டு, முறையான முன்னறிவிப்புகள் மூலமும் தடுப்பு மருந்து சரியான நேரத்தில் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்கான முன்னெடுப்புகள் மூலமும் தடுப்பூசிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

More In
This article is closed for comments.
Please Email the Editor