Published : 23 Jan 2019 11:15 AM
Last Updated : 23 Jan 2019 11:15 AM

360: வறட்சியின் பிடியில் குடகு

காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் கடுமையான வறட்சியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய இடமா இது என்று வருந்தும் அளவுக்கு நிலம் காய்ந்து வெடித்திருக்கிறது. வெள்ளநீரால் சூழப்பட்டுத் தத்தளித்த 40 கிராமங்கள் குடிக்கக்கூட நீரில்லாமல் தவிக்கின்றன. இந்தக் கிராமங்களுக்கு நீராதாரங்களாகத் திகழ்ந்த ஓடைகளில் தூர் படிந்து நீரூற்றுகள் அடைபட்டுவிட்டன.

பெருமழை வெள்ளத்துக்கு முன்னால் இப்பகுதியில் முதலில் லேசான நில அதிர்வும் அதன் பிறகு ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அப்போது புரண்டு ஓடைகளை அடைத்த மண் இதுவரை அகற்றப்படவில்லை. இதன் விளைவாக ஓடைகளில் நீர்வரத்து இல்லாமல் ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிட்டன. கோடைகாலத்தில் இந்த ஊற்றுத் தண்ணீரைத்தான் தோட்டப்பயிர்களுக்குப் பயன்படுத்துவார்கள். குடிக்கவும் பாசனத்துக்கும் நீரில்லாமல் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அடுத்த பருவமழைக் காலத்துக்குள் தூர் வாரப்படாவிட்டால், மழைக்காலத்தில் வெள்ளம் ஆற்றின் கரையைத் தாண்டி கிராமங்களுக்குள் பாயும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள் கிராமவாசிகள். நிலத்தடி நீர்மட்டமும் வெகு ஆழத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. குடகு மாவட்டத்திலுள்ள ஹேரங்கி அணையில் 2 டிஎம்சி அளவுக்குத்தான் தண்ணீர் இருக்கிறது. சாகுபடியைக் காப்பாற்ற முடியுமா என்று கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் குடகு விவசாயிகள்.

சூரிய ஒளி மின் உற்பத்தி: விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்பு

விவசாய நிலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்க உதவ முடிவுசெய்திருக்கிறது குஜராத் அரசு. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கு அரசு கொள்முதல் செய்யும். ஒவ்வொரு விவசாயியும் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 வருவாய் பெற முடியும். இப்போது விவசாயிகளுக்காக 15 மின்னூட்டு நிலையங்கள் செயல்படுகின்றன.

ஜனவரி இறுதிக்குள் மேலும் 20 மின்னூட்டு நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார் மாநில மின்சாரத் துறை அமைச்சர் சௌரவ் படேல். இவற்றைப் பயன்படுத்தி ‘சூரியசக்தி கிஸான் யோஜனா’ மூலம் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலையில் மாறுதல் இருக்கும். சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களைப் பொருத்த மானியம் கிடையாது. என்றாலும், விவசாயிகள் விற்கும் மின்சாரத்தின் வழியாக அவர்களுக்குச் சிறிய அளவிலேனும் நிரந்தர வருவாய்க்கான ஒரு புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

விபத்துக் குறைவுக்கு ‘மெட்ரோ’ ஒரு காரணம்!

மும்பை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாகச் சாலை விபத்துகள் குறைந்துவருகின்றன. அதற்கு மெட்ரோ ரயில்தான் காரணம். ஏராளமானோர் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு மெட்ரோவில் பயணிக்கின்றனரா? அப்படியெல்லாம் இல்லை. மெட்ரோ ரயில் உயர்பாலங்கள் சாலையில் கணிசமான இடத்தை அடைத்துக்கொள்வதால் எஞ்சிய இடத்தில் வாகனங்கள் ஊர்கின்றன. எனவே வேகமும் இல்லை, விபத்தும் இல்லை! மும்பை மாநகர மக்கள்தொகை 1.24 கோடி. வாகனங்களின் எண்ணிக்கை 33.52 லட்சத்துக்கும் மேல்.

ஒரு கி.மீ.க்கு 1,684 வாகனங்கள். அன்றாடம் 821 வாகனங்கள் புதிதாகப் பதிவுசெய்யப்படுகின்றன. சாலைகள் பெரும்பாலும் குண்டும்குழியுமான பல்லாங்குழிகள். மழை பெய்தால் தண்ணீர் வடிய மணிக்கணக்கில் ஆவதால் சாலைகளின் மேற்பரப்புப் பெயர்ந்துவிடுகிறது.

வாகன நெரிசலால் சாலைகளைச் சரியாகச் செப்பனிட முடிவதில்லை. 2018-ல் 374 விபத்துகள். 2017-ல் 467, 2016-ல் 529 விபத்துகள். சிமென்ட் சாலை போடுவதைவிட தரமான தார்ச்சாலையைப் போட்டு, போக்குவரத்துக்குத் தடையாக உள்ளவற்றை அகற்றினாலே மும்பை பொலிவுபெறும் என்கின்றனர் நகர திட்டமிடல் நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x