Last Updated : 23 Jan, 2019 11:11 AM

 

Published : 23 Jan 2019 11:11 AM
Last Updated : 23 Jan 2019 11:11 AM

காந்தியைப் பேசுதல்: இருபத்தோராவது முறையும் காந்தி மன்னிப்பார்!

“ஜெனரல் ஸ்மட்ஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடன் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தின்படி நாமாக முன்வந்து பதிவுசெய்த பிறகும் ஆசியர்கள் மீதான நிறவெறிச் சட்டம் விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றால் என்ன செய்வது?” என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள சக இந்தியர்கள் கேள்வி எழுப்பியபோது காந்தி இப்படிப் பதிலளித்தார்:

“ஒரு சத்தியாகிரகி தனது எதிர்த் தரப்பை (‘எதிரி’ என்ற சொல்லை காந்தி பயன்படுத்தவில்லை) நம்புவதற்கு அச்சப்படவே கூடாது. ஒரு சத்தியாகிரகியை அவரது எதிர்த் தரப்பு இருபது முறை ஏமாற்றினாலும் இருபத்தியோராவது தடவையும் தனது எதிர்த் தரப்பை நம்புவதற்கு சத்தியாகிரகி தயாராக இருக்க வேண்டும்” என்றார் காந்தி.

ஆசியர்களை அடிமைகளாக்கும் நிறவெறிச் சட்டத்துக்கு எதிராகத் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாகிரகம் துளிர்விட்டபோது, உடனடியாக அவரும் ஏனைய இந்தியர்களும் போராட்டத்தில் இறங்கிவிடவில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து சென்று அங்குள்ள ஆட்சியாளர்கள், ஏனைய ஆங்கிலேயர்கள், இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் என்று பலரையும் சந்தித்தார்.

வெற்றிகரமான சந்திப்புகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா திரும்பும் வழியில் இந்தியர்களுக்கு எதிரான சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டது என்ற தந்தி கிடைக்கவே காந்திக்கும் அவரது நண்பருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

காந்தி தென்னாப்பிரிக்கா திரும்பிய பிறகுதான் இந்தியர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுவரை ஆங்கிலேய அரசரின் பிரதிநிதியின் கீழ் ஆட்சியில் இருந்த ட்ரான்ஸ்வால் பகுதி ஜனவரி, 1, 1907-லிருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கிலேயர்களின் சுயாதீன ஆட்சிக்குள் வந்தது. ரத்துசெய்யப்பட்ட சட்டத்தைப் புதிய அரசின் கீழ் மறுபடியும் அமல்படுத்தினார்கள்.

காந்தியும் பிற இந்தியர்களும் இந்தச் சட்டத்தைத் துளியும் மதிக்கப்போவதில்லை என்றும் சத்தியாகிரகத்தை அதன் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். பதிவுசெய்யத் தவறியவர்கள் ட்ரான்ஸ்வாலை விட்டு வெளியேறும்படி எச்சரித்தும், வெளியேறாவிட்டால் கைதுசெய்யப்படுவார்கள் என்று எச்சரித்தும் மக்கள் அதற்கு அடிபணியவில்லை. இதனால் கைதுப் படலம் ஆரம்பித்தது.

சிறை என்றொரு உத்தி

காந்தி உட்படப் பலரும் தாமாக முன்வந்து கைதானார்கள். காந்தி தனக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கும்படி நீதிபதியை வேண்டிக்கொண்டார். நீதிபதியோ இரண்டு மாதச் சிறைத் தண்டனையை மட்டும் வழங்கினார்.

அதுதான் காந்தி முதன்முறையாகச் சிறை சென்ற தருணம். அப்போதிலிருந்து 1942 வரை மொத்தம் 13 முறை சிறைசென்றார். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் 6 ஆண்டுகள், பதினோரு மாதங்கள் காந்தி சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். தனது சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாகவே சிறைக்குச் செல்வதை காந்தி மாற்றிக்கொண்டார். சிறை மட்டுமல்ல, எதுவும் ஒரு சத்தியாகிரகியை அச்சுறுத்தாது என்று காட்டவே இதை ஒரு போராட்ட உத்தியாக வகுத்தார். அதை மற்றவர்களும் உற்சாகமாகப் பின்பற்றினார்கள்.

காந்தி உள்ளிட்டோரின் கைதுகளைப் பார்த்த பின் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படும் என்று முதலில் ஆங்கிலேயர்கள் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். போகப் போக, திருவிழாவுக்குச் செல்ல ஆர்வத்துடன் புறப்படும் குழந்தைகளைப் போலக் கூட்டம் கூட்டமாக வந்து கைதானார்கள். சிறைகள் நிரம்பி வழிந்தன.

சிறைக்குள் காந்தி சமையல்காரர், தோட்டக்காரர், ஆசிரியர், மாணவர், சிறைக்குள் இருந்தபடியே போராட்டத்தை வழிநடத்தும் தலைவர் என்று பல பாத்திரங்களை வகித்தார். சிறையில் கிடைத்த நேரத்தில் புத்தகங்களை வாசித்தார். குறிப்பாக, அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொரோவின் எழுத்துகளை இந்தச் சிறைவாசத்தின்போதுதான் காந்தி வாசித்தார்.

சமரசமே நல்ல தொடக்கம்

ஒருகட்டத்தில் ஜெனரல் ஸ்மட்ஸுடனான சமரசப் பேச்சுவார்த்தைக்கு காந்தி அழைக்கப்பட்டார். அவர் அழைக்கப்படுவதற்கு முன்பு சமரசத் தீர்மானம் காந்தியின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. ‘இந்தியர்கள் கட்டாயத்தின் பேரில் இல்லாமல் தாமாக முன்வந்து பதிவுசெய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ‘ஆசியப் பதிவுச் சட்டம்’ விலக்கிக்கொள்ளப்படும்’ என்பதுதான் அந்தச் சமரசத்தின் சாராம்சம்.

இந்த சமரசத்தின் வாசகங்கள் குழப்பமாக இருந்ததால் காந்தியும் அவரது நண்பர்களும் முதலில் தயங்கினாலும் இந்த சமரசமே ஒரு நல்ல தொடக்கம் என்று கருதியதால் ஒப்புக்கொண்டார்கள். அதன்படி காந்தியும் ஏனையோரும் விடுவிக்கப்பட்டனர். வெளியில் சென்றதும் சமரசத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, எல்லோரும் தங்கள் விவரங்களைத் தாமாகப் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

gandhi-2jpg

காந்தியின் வாக்கை மீற முடியாமல் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்வதற்குப் பலரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், சில பதானியர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். காந்தி, தான் முதல் ஆளாகப் பதிவுசெய்யப்போவதாகச் சொன்னதற்கு, அப்படிச் செய்தால் அவரைக் கொன்றுவிடுவோம் என்று பதானியர்கள் அச்சுறுத்தினார்கள். பதிவுசெய்வதற்காகக் குறிக்கப்பட்ட தினத்தன்று காந்தி முதல் ஆளாகச் சென்றார். அவரைப் பதானியர்கள் கடுமையாகத் தாக்கியதில் உதடு கிழிந்துபோய், முகமெல்லாம் காயத்தோடு காந்தி மயக்கமடைந்தார்.

எனினும் மயக்கம் தெளிந்ததும் பதிவேட்டில் தன் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று காந்தி வேண்டுகோள் விடுத்தார். பதிவு அதிகாரியான சாம்னீ, “இப்படி அடிபட்டுக் கிடக்கும்போது பதிவுசெய்வதற்கு ஏன் இந்த அவசரம்?” என்று கேட்டும் காந்தி விடாப்பிடியாக இருந்தார். பதிவேடுகளை எடுத்துக்கொண்டு திரும்பும் சாம்னீயின் கண்களில் நீரைக் கண்ட காந்தி இப்படி எழுதுகிறார்: “நான் அவரைக் கடுமையாகத் தாக்கிப் பல முறை எழுதியிருக்கிறேன்; ஆனால் சில நிகழ்வுகளின் தாக்கம் மனிதனின் இதயத்தை எப்படி மென்மையாக ஆக்குகிறது என்பதை இதன் மூலம் உணர்ந்தேன்.”

சத்தியாகிரகத்தின் பெருவலிமை இது. நம்முடன் உடன்படாமலும் நம்மை ஒடுக்கியும் வந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவருக்கும் உண்மையில் மெல்லிய இதயம் இருக்கும்; அந்த மென்மை எங்கேயோ ஒளிந்திருக்கும். அந்த மென்மையை வெளிக்கொண்டுவருவதற்காக எந்த வித வன்மையையும் ஒரு சத்தியாகிரகி சந்திப்பது சத்தியாகிரகத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்று.

எதிர்கொண்ட சோதனை

காந்தியைத் தொடர்ந்து பலரும் பதிவுசெய்தார்கள். எனினும், ஜெனரல் ஸ்மட்ஸ் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. ஆசியர்கள் மீதான நிறவெறிச் சட்டத்தைத் திரும்பப் பெறாததுடன் அதை மேலும் கடுமையாக்கினார். காந்தி தளரவில்லை. தனது சத்தியாகிரகத்துக்கு விடுக்கப்பட்ட சோதனையாகவே இதையெல்லாம் எடுத்துக்கொண்டார்.

சத்தியாகிரகத்தின் நற்பண்புகளில் ஒன்று, அது எதிராளியின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்தி உண்மையை உலகறியச் செய்வதுதான் என்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்தியாவில் நடத்திய சத்தியாகிரகங்கள் எல்லாவற்றிலும் காந்தி இந்த உத்தியைப் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம்.

எதிராளியை முழு மனதுடன் நம்புதல், அவருக்கு அவகாசம் கொடுத்தல், அவர் தவறினால் மேலும் மேலும் வாய்ப்புகள் கொடுத்தல் இவை எல்லாவற்றையும் மேலோட்டமாக ஒருவர் நோக்கும்போது எதிராளிக்கு காந்தி துணைபோவதைப் போன்ற தோற்றமே ஏற்படும். ‘காந்தி ஒரு துரோகி’ என்ற கோஷம், காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எழுப்பப்படுவதற்கு காந்தியின் இந்த உத்தியைப் பிறர் தவறாகப் புரிந்துகொண்டதும் ஒரு காரணம். ஆனால், வரலாற்றைத் திறந்த மனதுடன், ஆழமாகப் படித்துப் பார்த்தால் காந்தியுடன் மாறுபட்டவர்களின் உத்திகள் சாதித்ததைவிட காந்தியின் உத்தி அதிகம் சாதித்திருப்பது தெரியவரும்.

(காந்தியைப் பேசலாம்)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x