Published : 18 Jan 2019 08:51 AM
Last Updated : 18 Jan 2019 08:51 AM

360: மாதவிடாய்: பெண்களை அடைத்துவைத்த கிராமத் தலைவர்!

உத்தராகண்டில், மாதவிடாய் காலத்தில் பெண்களும் சிறுமிகளும் அரசுக் கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பாவத் மாவட்டத்தின் குர்சும் கிராமத்தில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். கிராமத் தலைவர் உத்தரவின்பேரில், அரசுக் கட்டிடம் ஒன்றிலேயே ஒரு முகாம் போல் அது நடத்தப்பட்டுவந்திருக்கிறது. கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்ட பெண்கள், வெளியாட்களுடன் பேசவோ தொடவோ அனுமதிக்கப்படவில்லை என்றும், உணவும் அடிப்படைத் தேவைகளும் வெளியிலிருந்தே அவர்களுக்கு வழங்கப்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியருக்கு இந்த விஷயம் தெரியவந்ததே தற்செயலாகத்தான். சமீபத்தில், குறைகேட்பு முகாமில் கலந்துகொண்ட ஆட்சியரிடம் அந்த முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒருவர் கோரியிருக்கிறார். அதன் பின்னர்தான், அப்படி ஒரு முகாம் நடத்தப்படுவருவது ஆட்சியருக்குத் தெரிந்திருக்கிறது. மாதவிடாய் தொடர்பான மூட நம்பிக்கைக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் உதாரணமாக அமைந்திருக்கும் சம்பவம் இது என்று பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லத்துக்குச் செல்ல விரும்பும் முதியோர்?

இந்தியாவில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளுவது நிராதரவாகக் கைவிடுவது என்பன போன்ற கொடுமைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, உயர் நடுத்தரவர்க்கத்தினரிடையே பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை தற்சார்புடன் கழிப்பதைப் பற்றித் திட்டமிடும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி ஓய்வுபெற்றோருக்கான வசிப்பிடங்களும் புற்றீசல் போல் பெருகிவருகின்றன. பொழுதுபோக்கு முதல் மருத்துவ உதவி வரை 55 வயதைக் கடந்தவர்களுக்குத் தேவையான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு வீடுகள் கிடைக்கின்றன. தற்போது, இந்திய மக்கள்தொகையில் 25 வயதுக்குட்பட்டவர்கள் 50% என்றும் 2050-ல் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்துவிடும் என்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. ஆகவே, முதியோருக்கான இல்லங்களை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. பராமரிக்க ஆளின்றி, அதேசமயம் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க விரும்புகிறவர்களுக்கு வீடுகளுக்கே வந்து மருத்துவ சேவை அளிக்கும் பணிகளையும் சில நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. பிள்ளைகளைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்கிறார்கள். என்னதான் இருந்தாலும் உறவுகளின் அரவணைப்பைவிட உன்னதமான விஷயம், முதியவர்களுக்கு இருக்குமா என்ன?

தேயிலைத் தொழிலாளர்களுக்கு வேதனை தரும் உறைபனி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக அதிகக் குளிர் நிலவிவரும் நிலையில், நீலகிரி, கோவை மாவட்டத்தில் உறைபனி காரணமாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பது கவலையளிக்கிறது. உறைபனியின் காரணமாக, தேயிலைகள் கருகிவிடுவதால், அவற்றைப் பறிப்பது பலன் தராது என்று தேயிலைப் பறிப்புப் பணிகளைத் தோட்ட நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றன. இதனால், கடந்த மூன்று வாரங்களாகத் தேயிலைப் பறிப்பு வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வருமானமிழந்து தவிக்கிறார்கள் தொழிலாளர்கள். உறைபனியை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன!

ஆப்களில் ஆதிக்கம் செலுத்தும் சீனா

உலகளாவிய செயலி சந்தையில், 50% தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், 2018-ல் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றன சீன ஆண்ட்ராய்டு நிறுவனங்கள். நுகர்வோர் செலவழித்த தொகையில் 40% சீன ஆண்ட்ராய்டு நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறது. ‘ஆப் ஆனி’ என்ற அமைப்பின் ’ஸ்டேட் ஆஃப் மொபைல் 2019’ நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு ஒன்பது மாத காலம் சீனாவில் மொபைல் கேம்களுக்கான உரிமங்கள் தருவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. செயலி வர்த்தகச் சந்தையில் சீனா அசத்தினாலும், குறைவான சேகரிப்பு சக்தியைக் கொண்ட மலிவான ஸ்மார்ட்போன்களையே பெரும்பாலான சீனர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும், சராசரியாக 50 செயலிகளுக்கு மேல் வைத்துக்கொள்வதில்லை என்பதும் ஒரு சுவாரஸ்யமான முரண்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x