Published : 18 Jan 2019 08:48 AM
Last Updated : 18 Jan 2019 08:48 AM

முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள்- எப்போதுதான் தீர்வு?

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியின்போது உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட ‘குறைந்தபட்சக் கல்வித் தகுதி’ என்ற கட்டாய நிபந்தனையை நீக்கியிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு. ராஜஸ்தான் முதல்வரான பின்னர் அசோக் கெலோட் எடுத்திருக்கும் முதல் நடவடிக்கை இது. ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி தேர்தல்களில் போட்டியிட பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் பாஜக அரசு நிபந்தனை விதித்திருந்தது. வீடுகளில் கழிப்பறை கட்டாதவர்களும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அது அனுமதி மறுத்தது. ராஜஸ்தானைப் பின்பற்றி ஹரியாணா பாஜக அரசும் இதே நிபந்தனைகளை விதித்தது.

ராஜஸ்தான், ஹரியாணா அரசுகளின் முடிவுகள் பலமாகக் கண்டிக்கப்பட்டதுடன், நீதிமன்றங்களிலும் இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 2015 டிசம்பரில் இவ்வழக்குகளை விசாரித்து, ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. ‘உள்ளாட்சி மன்றத்தைச் சிறப்பாக நிர்வகிக்க கல்வித் தகுதியை நிர்ணயிப்பது ஏற்கத்தக்கதுதான்,  அரசியல் சட்டத்தில் கூறியுள்ள அடிப்படை சமத்துவ உரிமையை இது மீறவில்லை’ என்று நீதிபதி ஜே. செலமேஸ்வர் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அசோக் கெலோட்டின் புதிய முடிவு, இத்தகைய நிபந்தனைகள் நியாயம்தானா என்கிற விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி அவசியமா?

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம் என்பது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். முதலாவதாக, தேர்தலில் போட்டியிட ஒருவருக்குள்ள உரிமையை இது தேவையில்லாமல் கட்டுப்படுத்துகிறது. ஜனநாயகக் குடியரசு நாட்டில் தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் சம உரிமை அவசியம். இரண்டாவது, ஏதாவது ஒரு தகுதியைக் காரணம் காட்டி, அந்தத் தகுதி உள்ளவர்தான் போட்டியிட வேண்டுமென்றால், அப்படிப்பட்ட தகுதி இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்காளருக்கு உள்ள உரிமையும் மறுக்கப்படுகிறது. கல்வித் தகுதி வலியுறுத்தப்படுவதால் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவர். அதைவிட முக்கியம் பெண்கள், ஏழைகள், பட்டியலினத்தவர்களைச் சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் ஆகியோரை இந்தத் தடை, தேர்தலிலிருந்து ஒதுக்கி வைத்துவிடும். கல்விபெற அனைவருக்கும் சம வாய்ப்பற்ற இந்தியா போன்ற நாட்டில் - அந்தக் கடமையை அரசு நிறைவேற்றாத நிலையில் - ‘படிக்காதது உன்னுடைய தவறு’ என்று ஏழைகளை, கிராமவாசிகளைப் பார்த்து கூறுவது கொடூரமானது. எனவே, கெலோட்டின் நடவடிக்கை அநியாயத்தைத் திருத்தும் ஒரு நியாயமான நடவடிக்கைதான்!

நியாயமற்ற காரணங்கள்

கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் முடிவு சரியா, தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். சட்ட மன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட அப்படியொரு தடை இல்லாதபோது, உள்ளாட்சி மன்றங்களுக்கு மட்டும் விதிப்பது நியாயமே இல்லை அல்லவா? இப்போதைய மக்களவையில் 13% உறுப்பினர்கள் பள்ளியிறுதி வகுப்பைக்கூட முடிக்காதவர்கள். மொத்தமுள்ள பெண் உறுப்பினர்களைவிட அவர்களின் எண்ணிக்கை அதிகம்.

உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதித்துவ அமைப்புகள். பஞ்சாயத்துகளைச் சிறப்பாக நிர்வகிக்க கல்வித் தகுதி அவசியம் என்று ராஜ்பாலா (ஹரியாணா) வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ளது. படித்தவர்களால்தான் பஞ்சாயத்துகளைச் சரியாக நிர்வகிக்க முடியும் என்ற தவறான அனுமானம் இதில் வெளிப்படுகிறது. இவற்றில் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதைவிட, பிரதிநிதிகளுக்குக் கல்வித் தகுதி அவசியம் என்று பார்க்கப்படுகிறது.

இந்த அணுகுமுறை அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 73-வது, 74-வது திருத்தங்களின் உணர்வுகளுக்கும் நோக்கங்களுக்கும் எதிரானது; பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அவசியம் என்பதற்காக அந்தச் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. உள்ளாட்சி மன்றங்கள் இந்தியாவின் அரசியல் சட்ட கட்டமைப்பில் ஓரிடத்தைப் பெற்றிருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்

படுத்துவதற்கான கரமாகத்தான் அது பார்க்கப்படுகிறது. வீட்டில் கழிப்பறை இல்லாதவருக்குத் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என்பது, மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்குத்தான் முன்னுரிமை என்பதை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் ஒத்திவைப்பு

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் மட்டுமே, உள்ளாட்சி மன்றங்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதில்லை. வேறு சில நடவடிக்கைகளும் பட்டவர்த்தனமாக மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைத்து அவை முக்கியமானவை அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர். 2011-க்குப் பிறகு தமிழ்நாட்டில் நகர மன்றங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் மாநகராட்சி தேர்தல் கடைசியாக நடந்தது 2007-ல். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலும், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவையாக இல்லாமலும் தனி அதிகாரிகளின் பொறுப்பில் இவை செயல்படுகின்றன.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் குறிப்பிட்டகால இடைவெளியில் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாலும், தனியதிகாரிகளின் பொறுப்பில் காலவரம்பின்றி நிர்வகிக்கப்படுவதாலும்தான் ஐந்தாண்டுகளுக்கொரு முறை தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய 73-வது 74-வது சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும் ஊராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அந்தத் திருத்தங்கள் கட்டாயமாக்கின. உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் தொகுதி வரையறையை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வதற்குப் பதிலாக, மாநில அரசால்தான் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்துவதைத் தாமதப்படுத்த இது முக்கியக் காரணமாக அமைகிறது. ஆட்சியில் இருக்கும் கட்சி, தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று அச்சப்பட்டால், ‘தொகுதிகள் மறு வரையறை செய்யப்படுகின்றன’ என்று கூறி தேர்தலை ஒத்திப்போட்டுவிடுகிறது.

உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம் நிலவுவதாக இந்தியா பெருமைப்பட்டுக்கொள்கிறது. சட்ட மன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது, அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடப்பது ஆகியவற்றை வைத்து இப்படிப் பெருமை பாராட்டிக்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளே இல்லை என்பது யாருக்கும் கவலையையோ, எச்சரிக்கை உணர்வையோ ஏற்படுத்தவில்லை. உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்துவதும், தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள் விதிப்பதும் உண்மையான பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயல்களாகும்!

மேத்யூ இடிகுல்லா,

ஆராய்ச்சி ஆலோசகர், சட்டம் மற்றும் கொள்கை ஆய்வு நிறுவனம், பெங்களூரு.

தி இந்து ஆங்கிலம்.

தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x