Published : 17 Jan 2019 10:17 AM
Last Updated : 17 Jan 2019 10:17 AM

360: பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டைவிடுகிறதா அமேசான்?

அமேசான் (இந்தியா) நிறுவனத்தின் மூலம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர்களின் வணிக வரி அறிக்கை, பிற வணிகர்களாலும் பார்க்கப்படும் வகையில் வெளியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2018 டிசம்பர் வணிக வரி அறிக்கையைப் பதிவிறக்கம் செய்த சுமார் 4 லட்சம் பேர், தங்கள் அறிக்கையுடன் பிறரது அறிக்கையும் அமேசான் தளத்தில் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அமேசான் இணையதளம் மூடப்பட்டது. தங்கள் வணிகம் தொடர்பான முக்கியமான தகவல்கள் பிறர் பார்வைக்குச் சென்றதில் விற்பனையாளர்களுக்குக் கடும் அதிருப்தி. ஆனால், மொத்தமுள்ள விற்பனையாளர்களில் வெறும் 0.2% பேரின் தகவல்கள்தான் வெளியாகியிருக்கின்றன என்று அமேசான் விளக்கமளித்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவைச் சேர்ந்த சில ஊழியர்கள் சேர்ந்து தரவுகளைக் கசியவிடும் வேலைகளில் ஈடுபடுவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது. 2018 நவம்பரில், அமேசான் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது!

லட்சியத் தம்பதி!

இத்தாலியின் கோமோ ஏரிப் பகுதியில் கோலாகலமான திருமணம் மூலம் இல்லற வாழ்வில் நுழைந்த தீபிகா படுகோன் - ரண்வீர் சிங் தம்பதி அடுத்தடுத்து முன்னுதாரணமான செய்திகளுக்காகப் பாராட்டுக்களை அள்ளிவருகிறது.

இருவரும் தத்தமது பெயரின் ‘சர்நே’மை மாற்றப்போவதில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் தீபிகா கூறியிருந்தார். கடும் முயற்சிகள் மூலம் தங்கள் பெயருக்கென்ன தனித்த அடையாளத்தைப் பெற்றிருக்கும் நிலையில் சர்நேம் மாற்றம் அவசியமில்லை என்று விளக்கமும் அளித்தார். இந்நிலையில், தீபிகாவின் சர்நேமை ஏற்றுக்கொண்டு ‘ரண்வீர் சிங் படுகோன்’ என்று பெயர் மாற்றம் செய்யவும் தயார் என்று கூறியிருக்கிறார் ரண்வீர். வாழ்க!

ரூ.2,140 கோடி கடனுதவி: இலங்கையைக் குறிவைக்கும் சீனா

இலங்கைக்கு சீனா ரூ. 2,140 கோடி கடனுதவி வழங்குவதாக, இலங்கை அமைச்சர் எரான் விக்ரமரத்னே தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தொகை, ரூ.7,000 கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனா இந்தக் கடனுதவியை அளிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரூ.2,800 கோடி மதிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பரஸ்பர ஒப்பந்தம் போட்டிருக்கும் இலங்கை, அந்தத் தொகையை ரூ.7,000 கோடியாக அதிகரிக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.

குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா: எதிர்ப்பாளர்கள் மீது பாயும் அடக்குமுறை!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதாவை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அசாமில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மசோதாவை விமர்சித்த கல்வியாளர் ஹிரேன் கோஹேன் (80), செயற்பாட்டாளர் அகில் கோகோய்(42), பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா(50) ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஜனவரி 7-ல் குவாஹாட்டியில் ‘அசாமைக் காப்போம்’ எனும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்மூவரும் சுதந்திர அசாம் கோரிக்கைகளை முன்வைத்ததாக லாட்சில் பகுதி காவல் துறையினர் தாமே முன்வந்து வழக்குப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

மூவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கை எடுத்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மூவரும் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல், இம்மசோதாவை விமர்சித்து, கேலிச்சித்திரங்கள் வரைந்த அசாமைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட்டும் முன்னாள் பத்திரிகையாளருமான நிதுபர்ணா ராஜ்போங்ஷி (38) மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று கருதப்படுகிறது. டிசம்பர் 31 முதல் ஏழு கேலிச்சித்திரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் நிதுபர்ணா. இதையடுத்து, அந்தப் பதிவில் அசாம் காவல் துறையை ‘டேக்’ செய்து ட்விட்டரில் பாஜகவினர் பதிவிட்டனர். கேலிச்சித்திரத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டதாக, பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின்பேரில் தின்சுகியா மாவட்டத்தின் திக்போய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x