Published : 17 Jan 2019 10:13 AM
Last Updated : 17 Jan 2019 10:13 AM

இலக்கியப் பொங்கல்

நீதிபதியின் சுயபரிசீலனை

முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரியுடன் ‘தி இந்து’ என்.ரவி ‘மேக்கிங் இந்தியா வொர்க்’ என்ற அமர்வில் கலந்துரையாடல் நிகழ்த்தினார். பெரும்பாலும் நீதித் துறையின் மந்தமான, குழப்பமான நடைமுறைகளைச் சுற்றி இந்த உரையாடல் அமைந்தது. ஒரு வழக்கின் தீர்ப்புகள் பெரும்பாலும் முந்தைய நீதிபதிகளின் அவதானிப்புகளையும் தீர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிடுவதால் முந்தைய நீதிபதிகளின் குழப்பமான அவதானிப்புகள் இறுதித் தீர்ப்பின் குழப்பங்களுக்கு அடித்தளம் அமைத்துவிடுகின்றன என்றார் அருண் ஷோரி. ரஃபேல் ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பின்போது நடந்த நிகழ்வுகளையும் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். எனினும், நீதிபதிகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நீதிபதியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அருண் ஷோரி பகிர்ந்துகொண்டார். ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அருண் ஷோரி விமர்சித்து எழுதப்போக, அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியிடமிருந்து அருண் ஷோரிக்குக் கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், ‘நான் வழங்கிய தீர்ப்பு குறித்து மிகவும் பெருமிதம் கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர்களும் நீதித் துறை சார்ந்தவர்களும் என்னுடைய தீர்ப்பை மிகவும் பாராட்டினார்கள். ஆனால், உங்களுடைய விமர்சனத்தைப் படித்த பிறகு நான் எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது’ என்று எழுதியிருக்கிறார். எழுதியதுடன் மட்டுமல்லாமல் தன் தீர்ப்பால் ஏற்பட்ட விளைவுக்குப் பரிகாரமும் தேட முயன்றிருக்கிறார்.

இந்தியா என்பது அரசு அல்ல

லிட் ஃபார் லைஃப் – ஒரு விளக்கம்

இந்தியாவின் முக்கியமான இலக்கியக் கொண்டாட்டங்களில் ஒன்றான ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கிய விழாவின் விவாதங்களில் அரசை விமர்சிப்பவர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் என்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் சமநிலை பேணப்படவில்லை என்றும் ஒரு விமர்சனம் திரித்துவிடப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ‘தி இந்து’ குழும இயக்குநர்களில் ஒருவரும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இயக்குநருமான நிர்மலா லக்‌ஷ்மண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது:

“தி இந்து லிட் ஃபார் லைஃப் மூன்று நாள் இலக்கிய விழாவில் பெற்ற செறிவூட்டும் அனுபவத்தை அடுத்து, நான் அந்த விழா ‘ஒருதலைப்பட்சமாக’ இருந்தது என்றும் ‘இன்னொரு தரப்பு’க்கு இடமளிக்கப்படவில்லை என்றும் முன்வைக்கப்பட்ட விமர்சனத்துக்குப் பதிலளிக்க விரும்புகிறேன். முக்கியமான தார்மீக விவகாரங்கள் என்று நாங்கள் கருதும் விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கே இந்த விழா. மத வெறிக்கும், வெறுப்புக்கும், ரவுடித்தனத்துக்கும் சமமான இடம் அளிக்க வேண்டும் என்று சொல்வது தவறான சமன்பாட்டின் அடிப்படையில் ஒரு அமைப்பை முன்வைப்பதாகிவிடும்.

ஒருவரின் வீடு பற்றியெரியும்போது வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று இந்த விஷயத்தைச் சரியாக அடையாளம் கண்ட அருண் ஷோரி தொடங்கி ஒவ்வொரு பேச்சாளரும் அனைத்தையும் உள்ளடக்கிய ஜனநாயக இந்தியா என்ற உண்மையான லட்சியத்தைப் பேணுவதற்கு ஆதரவாகப் பேசினார்கள். எப்போதும் ஆட்சியில் இருக்கும் அரசுதான் இந்தியா என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்தியா என்பது மக்களும் சமூகங்களும்தானே தவிர ‘அரசு’ அல்ல.

யார் ஆட்சியில் இருந்தாலும் அரசு என்பது இந்தியா ஆகிவிடாது. அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி உண்மையைப் பேசும் முயற்சியே இங்கு நிகழ்த்தப்பட்டது. ஆரம்பக் காலத்திலிருந்தே ‘தி இந்து’வின் விழுமியங்களாக இவை கடைபிடிக்கப்பட்டுவருகின்றன. இவற்றையே இலக்கிய விழாவிலும் நாங்கள் பிரதிபலித்தோம்!”

ஜீன்களெல்லாம் சமையல் குறிப்பைப் போன்றவைதான்

வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் வெங்கடராமன் ராமகிருஷ்ணனின் திரை விளக்கத்துடன் கூடிய உரை பெரும் வரவேற்பு பெற்றது. உரை ஆரம்பிப்பதற்கு முன்பே உட்கார இருக்கை தேடி பலரும் அலைந்துகொண்டிருந்தார்கள். ‘ஜீன் மெஷின்: தி ரேஸ் டு டிஸைஃபர் தி சீக்ரெட்ஸ் ஆஃப் தி ரைபோசோம்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே தன் உரையை அமைத்திருந்தார்.

1. ரைபோஸோம், 2. வெளிநாட்டு மண்ணில் ஒரு அந்நியராகத் தனது வாழ்க்கை, 3. அறிவியலில் மனிதர்கள் ஏற்படுத்தும் அலங்கோலம், 4. தனது அறிவியல் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் பாடங்கள் என்று நான்கு கருப்பொருள்களை மையமிட்டு அந்தப் புத்தகத்தை அமைத்திருக்கும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் தனது உரையையும் அப்படியே அமைத்திருந்தார். முதலில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, பிறகு துறையை மாற்றிக்கொள்ளும் முடிவை எடுத்தது பற்றி அவர் பேசியது சுவாரசியம், எல்லோருக்கும் ஒரு பாடமும்கூட. அவர் இயற்பியல் பயின்ற காலத்தில் (எழுபதுகளில்) அந்தத் துறையில் மிக மிக அரிதாகவே மாபெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஆகவே, அதில் தனக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கருதிய வெங்கடராமன் உயிரியலைத் தேர்ந்தெடுத்தார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்த அவர், இன்னொரு துறையைத் தேர்ந்தெடுத்ததும் அதை முறையாகப் பயில வேண்டும் என்பதால் இன்னும் கீழே சென்று இளங்கலை அறிவியல் பயின்றார். இயற்பியல், உயிரியல் என்று செயல்பட்ட வெங்கடராமனுக்கு வேதியியலில் நோபல் பரிசு கிடைத்தது ஆச்சரியம் அல்ல. அவருடைய பல துறைச் செயல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம். ஜீன்களெல்லாம் ப்ளூபிரிண்ட் போன்றா என்று ஒருவர் கேட்டதற்கு, இல்லையில்லை சமையல் குறிப்பைப் போன்றவைதான் ஜீன்கள். ஒரே சமையல் குறிப்பை வைத்து நான்கு பேர் சமையல் செய்தால் வேறு வேறு மாதிரி இருக்குமல்லவா! அப்படித்தான் ஜீன்களும் என்றார் வெங்கட்ராமன்!

சாதி என்பது சமூகம் பூசிக்கொள்ளும் அவமானம்

தமிழ் அமர்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுடன் நாடக ஆளுமை பிரளயன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். இந்த அமர்வானது ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ என்ற நாவலையும் சாதியையும் மையமிட்டு நகர்ந்தது. ‘சாதி என்பது ஒரு நாகரிக சமூகம் தனக்குத் தானே நிகழ்த்திக்கொள்ளும் அவமானம்’ என்பதை ஆதவன் தீட்சண்யா அழுத்தமாகச் சொன்னார். நிகழ்காலத்தை எழுதுவதில் பலருக்கும் பெரிய அச்சம் நிலவுகிறது, ஆகவே பால்யப் புனைவுகளிலோ புராணங்களை மறுஉருவாக்கம் செய்யும் புனைவுகளிலோ ஈடுபடுகிறார்கள் என்றார். கடந்த காலத்தை எந்த விசாரணையும் செய்யாமல் பொற்காலமாய்க் கொண்டாடும் மனநிலை அகல வேண்டும் என்றார் அவர். சாதித் தூய்மைவாதம் பற்றிப் பேசியபோது, ‘நீங்கள் குடியிருக்கும் வீட்டில் ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு சாதி ஆட்கள் உருவாக்கியது. நீங்கள் சாப்பிடும் சாப்பாடு வெவ்வேறு சாதியினரின் வியர்வை, ரத்தம், மலம் எல்லாம் பட்டுத்தான் உங்கள் உணவுத் தட்டுக்கு வருகிறது. இப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி சாதித் தூய்மைவாதம் பற்றிப் பேச முடியும்’ என்ற அவருடைய கேள்வி பெரும் அதிர்வை உண்டாக்கியதை உணர முடிந்தது.

உங்கள் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் எது?

விழா வளாகத்தின் உள்ளே பெரிய வெண்ணிறப் பலகையொன்று வைத்திருந்தார்கள். ‘உங்கள் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் எது?’ என்ற கேள்வி அதன் உச்சியில் இடம்பெற்றிருக்க பலரும் தங்கள் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்களின் பெயர்களை எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு விதம். இளைய தலைமுறையினர் பலரின் வாழ்க்கையை சேத்தன் பகத் மாற்றியிருக்கிறார் எனும் உண்மை அச்சத்தை ஏற்படுத்தியது. ரோண்டா பிரயன் எழுதிய ‘தி சீக்ரெட்’, பாலோ கொய்லோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ போன்ற புத்தகங்கள் அதிகம் குறிப்பிடப்பட்டன. கடைசி நாள்தான் அந்தப் பலகையில் தமிழ் தென்பட்டது. ஒரு ஆபத்பாந்தவன் ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ என்று எழுதியிருந்தார். பிறகு வந்து பார்த்தபோது அதிர்ச்சியை ஏற்படுத்திய இன்னொரு தமிழ் தலைப்பு: ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி - கோணங்கி’. ஆனால், போட்டியில் வென்றவர், மார்க்கர் கிடைக்காமல் பேனாவைக் கொண்டு பலகையின் உச்சியில் ‘பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்’ என்று எழுதியவர்தான். நல்ல உயரமான மனிதராக இருக்க வேண்டும்!

ப.சிங்காரம் என்றொரு உலக எழுத்தாளர்

இரண்டே நாவல்கள் எழுதினாலும் தமிழில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் ப.சிங்காரத்தைப் பற்றிய அமர்வு முக்கியமானது. வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி நெறியாள்கை செய்த இந்த அமர்வில் ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வரும் கவிஞர் சேரனும் கலந்துகொண்டனர். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வை ப.சிங்காரம் மட்டுமே எழுதியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தின் பொருளாதார வலைப்பின்னல் எப்படி இயங்கியது, நாடு கடந்த நிலையிலும் தமிழர்கள் எந்தெந்த மூட்டைகளைத் தூக்கியெறியாமல் வைத்திருந்தார்கள், தற்போதைய பன்மைக் கலாச்சாரம் தனித்தனி சமூகங்களாக இருக்கும் நிலையில் அப்போதைய பன்மைக் கலாச்சாரம் ஒன்றுடன் ஒன்று எப்படி உறவாடியது என்பதை மூவரும் சுவாரசியமான தகவல்களுடன் பேசினார்கள்.

காந்தி தேவைப்படுவதற்கான 10 காரணங்கள்

இந்த இலக்கியத் திருவிழாவின் இறுதி அமர்வு காந்தியைப் பற்றியதாக அமைந்தது முத்தாய்ப்பு. ‘இன்று காந்தி ஏன் தேவைப்படுகிறார் என்பதற்கான பத்து காரணங்கள்’ என்ற தலைப்பில் ராமசந்திர குஹா விரைவு ரயில் வேகத்தில் உரை நிகழ்த்தினார். 1.அதிகாரத்தை அகிம்சை மூலம் எதிர்த்தல். அதன் மூலம் உலக நாடுகள் பலவற்றுக்கும் மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பல அகிம்சைப் போராளிகளுக்கும் வழிகாட்டியாகத் திகழ்வது. 2. இந்தியாவின் நிறைகளை அடையாளம் கண்டதுபோல் குறைகளையும் அடையாளம் கண்டு அதைக் களைய முயன்றது. இந்த வகையில் தேசத்தின் கடந்த காலத்தைக் குறைகளற்றதாகக் கட்டமைக்கும் தீவிர தேசியவாதத்துக்கு எதிரான ஒரு குரலாக காந்தி இருந்தது.

3. மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடிமையுரிமையை மறுத்தது. எல்லா மதங்களுக்கும் உரிய நாடாக இந்தியாவை முன்னெடுத்தது. இதற்கு விலையாக தனது உயிரையே இறுதியில் கொடுத்தது. 4. பன்மைக் கலாச்சாரத்தில் விளைந்த அரசியல் பார்வையை காந்தி கொண்டிருந்தது. முதலில் இங்கிலாந்து, பிறகு தென்னாப்பிரிக்கா என்று புலம்பெயர்ந்த வாழ்வுதான் காந்தியை நமக்கு உருவாக்கிக்கொடுத்தது. 5. ஒரே சமயத்தில் தேசப் பற்றாளராகவும் சர்வதேசப் பற்றாளராகவும் காந்தி இருந்தார். தன்னுடைய தேசத்தை உருவாக்குவதற்காக இன்னொரு நாட்டை எதிரியாக அவர் முன்வைக்கவில்லை. 6. சுற்றுச்சூழல் மீதான காந்தியின் அக்கறை அவரது நாடி நரம்பெல்லாம் இயல்பாகவே ஊறியிருந்தது.  ‘தொழில்மயமாதலை ஐரோப்பியா தழுவிக்கொண்டதுபோல் இந்தியாவும் தழுவிக்கொண்டால் வெட்டுக்கிளிகளால் சூறையாடப்பட்ட வயல்களைப் போல ஆகிவிடும் இந்த உலகம்’ என்றார் காந்தி. 7. தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருந்தது. காந்தி முன்னே அப்படிச் சொன்னார் இப்போது இப்படிச் சொல்கிறாரே என்று கேட்டால், தற்போதைய உண்மைகளுக்குத்தான்தான் விசுவாசமாக இருக்க முடியுமே தவிர தனது கடந்த கால வார்த்தைகளுக்கல்ல என்று பதிலளிப்பார். தன்னைத் தானே மறுத்துக்கொள்ளும் நேர்மை மற்ற தலைவர்களிடம் காண்பதரிது. 8. தனக்குப் பின்னால் நல்ல தலைவர்களை உருவாக்கியது. நேரு-இந்திரா-மோடி ஆகிய மூவருடன் காந்தியை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உண்மை நமக்கு உறைக்கும். 9. எதிர்த்தரப்பின் பார்வைக் கோணத்தையும் பார்க்க முன்வருகிற இயல்பு. எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது வெறுப்பு கொள்வதோ தன்னுடைய தரப்பு என்பதால் ஒருவருக்குச் சலுகை காட்டுவதோ அவரிடம் கிடையாது. 10. திறந்த புத்தகம் போன்ற வாழ்க்கை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர்தான் உலகிலேயே மிகவும் பிரபலமாக இருந்த மனிதர். ஆனால், அவரை யாரும் மிக எளிதாகச் சந்தித்துவிட முடியும், அவரை மிக எளிதாகக் கொன்றுவிட முடியும் என்ற நிலையில்தான் அவர் தன்னை வைத்திருந்தார். தன்னை இந்த அளவுக்கு உலகத்திடம் திறந்து காட்டிய வேறொரு ஆளுமை கிடையவே கிடையாது.

தொகுப்பு: ஆசை, கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x