Published : 14 Jan 2019 09:16 AM
Last Updated : 14 Jan 2019 09:16 AM

360: நிலையான அரசைவிட பொறுப்பான அரசுதான் தேவை!

இந்தியாவின் முக்கியமான இலக்கியக் கொண்டாட்டங்களில் ஒன்றான ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கிய விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் கான்சர்ட் ஹாலில் ஜனவரி 12-ல் தொடங்கியது.

‘தி இந்து’ குழுமம் சார்பில் நடத்தப்படும் இலக்கிய விழாவின் 9-வது ஆண்டு இது. வெவ்வேறு அமர்வுகளில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்கள்:

அருண் ஷோரி,முன்னாள் மத்திய அமைச்சர்:

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஆணைகள், தீர்ப்புகளை ஊடகங்களும் மக்களும் ஊன்றிக் கவனித்து வர வேண்டும், அப்போதுதான் அவற்றை அவற்றின் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியும். நீதித் துறையில் உள்ள கண்ணியவான்களை அடையாளம் காண தீர்ப்புகளையும் ஆணைகளையும் எல்லோரும் வாசிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்:

பெரும்பான்மைவாதிகள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றிவிட முடியும். அப்படிச் செய்யக் கூடாது என்ற பொறுப்பு இருப்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே நிலையான அரசைவிட பொறுப்பான அரசுதான் தேவை. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது அரசியல்சாசனத்தில் உள்ள சமூகநீதியின் ஆன்மாவைச் கொல்வதைப் போன்றது. நாம் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்ற உளவியலைத் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும் இந்த சமூகம் பன்னெடுங்காலமாகச் சுமத்தியிருக்கிறது. அந்த உளவியலிலிருந்து விடுபட ஒருவருக்கு கல்வி அவசியம். நான் பெற்ற கல்வியால் அந்த உளவியலிலிருந்து விடுபட்டுவிட்டேன். அனைவரும் இந்த உளவியலிலிருந்து வெளியேறினால்தான் சமத்துவமும் சுதந்திரமும் கிடைக்கும். சாதி மத வேறுபாடுகளைத் துறந்து அனைவரும் ஒன்றான பிறகுதான் சகோதரத்துவம் மலரும்.

தேவகி ஜெயின், பெண்ணியப் பொருளாதார நிபுணர்:

காந்தி நூல் நூற்கும் சக்கரத்தைப் பெண்களிடம் அளித்தார். அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டினார்கள். காந்தியின் பொருளாதாரம் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் வளர்ச்சியை முன்வைத்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூலி கிடைக்கும் வேலை வழங்கப்பட்டு அதன் மூலம் உழைக்கும் பெண்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வெண்டும். இதனால் அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைக்கு வருவார்கள். அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும் என்பதே காந்தி முன்வைத்த பொருளாதாரம். ஆனால், இன்று வளர்ச்சி மேலிருந்து திணிக்கப்படுகிறது. முதலீட்டைக் கொண்டுவரும் அந்நிய நிறுவனங்களே சந்தையில் என்ன விற்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன.

கனிமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர்:

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் சாதியின் பெயரால்தான் வாய்ப்புகளும் உரிமைகளும் மறுக்கப் பட்டனவே தவிர அவர்கள் ஏழைகள் என்பதால் அல்ல. சாதியின் பெயரால் மறுக்கப்பட்டதை சாதியின் பெயரால் திரும்பிக் கொடு என்பதுதான் சமூக நீதி. ஏழை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை மேம்படுத்துவது உதவித் தொகை அளிப்பது தொழில், வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். இந்த இடஒதுக்கீட்டால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒரு ஏழை கோயில் அர்ச்சகரின் மகனுக்கு  இடம் கிடைக்கப் போவதில்லை!

ஜேம்ஸ் கிராப்ட்ரீ, தெற்காசிய புவி-அரசியல் நிபுணர், எழுத்தாளர்.

சீனா பெரிய நாடாக தலையெடுப்பதற்கு அமெரிக்கா உதவிக்கொண்டிருக்கிறது. இருபதாவது நூற்றாண்டில் எப்படி ஐரோப்பா முக்கியத்துவம் பெற்றிருந்ததோ அப்படி இந்த நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியா முக்கியத்துவம் பெறுகிறது. செல்வாக்குக்காக இந்தியா போட்டியிடப் போகிறது. நட்பு நாடுகளுடனான உறவை – அதிலும் குறிப்பாக கொரியாவுடன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குலைத்துவிட்டார். கொரியா நம்பத்தகுந்த நாடல்ல என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x