Last Updated : 14 Jan, 2019 09:13 AM

 

Published : 14 Jan 2019 09:13 AM
Last Updated : 14 Jan 2019 09:13 AM

தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன?

இந்தியாவுக்கு வரலாறு இல்லை என்று சொல்வார்கள். அது பழைய கதை. “ஒவ்வொரு குக்கிராமத்திலும், பழங்குடிகள் வாழும் மலைப்பகுதிகளிலும் இந்தியாவின் வரலாறு நுட்பமான முறையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாக அல்லாமல் தொல்லியல் எச்சங்களாக வரலாறு இருக்கிறது. தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர சிறப்புத் திறன்கள் தேவை. மொழியியல், கட்டிடக் கலை,மானுடவியல், சமூகவியல் திறன்களுடன் உரிய வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால் அவற்றை வெளிக்கொணர முடியும்” என்பார் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. நவீன இந்திய வரலாறு எழுதுதலில் அறிவியல் பார்வையைத் தொடங்கி வைத்தவர் அவரே. அவரைத் தொடர்ந்து இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சுமார், 40 ஆயிரம் ஆண்டுகால தொல்லியல் எச்சங்கள் கொண்ட தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. மாற்றாந்தாய் மனப்பான்மையே பின்பற்றப்படுகிறது!

இப்படியான சூழலில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரனும் முன்னெடுத்துவரும் முயற்சிகள் நம்பிக்கைக்கான ஒளிக்கீற்றுகள். ஜனவரி 8 முதல் 10 வரை சென்னை தமிழ் இணையப் பல்கலைக்கழகக் கூட்ட அரங்கில் நடந்த கருத்தரங்கம் புதிய நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையைப் புத்தாக்கம் செய்து அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டப்பணிகளை அடையாளம் காணும் வகையில் சிந்தனையைக் கிளர்த்தும் அமர்வுகள், உரையாடல்கள், ஆலோசனைகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

எதிர்காலத் திட்டங்கள்

பழைய கற்கால, பெருங்கற்கால, புதிய கற்கால, நுண் கருவிகள் கால, இரும்புக் கால அகழ்வாய்வுகள், கடல்சார் அகழ்வாய்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், கல்வெட்டியல், ஓலைச்சுவடிகள், ஆவணப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் கீழ் சுமார் 50 தொல்லியலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கணினிவழிக் காட்சிகள் துணையுடன் தமிழக தொல்லியல் துறையின் எதிர்காலச் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனும் அடிப்படையில் உரைகளை வழங்கினர். அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பல்லாண்டு கால மானுட வாழ்க்கையைக் கொண்டுள்ள தமிழகத்தில் 5% தொல்லியல் ஆய்வுகள்கூட நடைபெறவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடப்பதற்குத் தமிழகத் தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது அவசியம். மாவட்டம்தோறும் தொல்லியல் அலுவலர் நியமிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாற்று மையங்களை உருவாக்குவதுடன், அந்தந்த மாவட்டங்களில் தொல்லியல் அருங்காட்சியங்களாகவும் அவற்றை இயக்க வேண்டும். அகழ்வாய்வுகளில் தொடர்புடைய பல துறைகளை ஒருங்கிணைப்பது விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். உலக அளவில் பயன்படுத்தப்படும் நவீனத் தொழில்நுட்பங்களைக் கைகொள்வது அவசியம்.

ஒரு தொல்லியல் கொள்கை உருவாக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதில் தொல்லியல் அடையாளங்கள் காணும் பகுதிகளை, அப்பகுதி மக்கள் பெருமைகொள்ளும் வகையில் வரலாற்றுத் தொன்மைமிக்க பகுதியாக அறிவிக்க வகை செய்வது பலன் தரும். அதேசமயம், நிலம் அளிப்பவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

அகழ்வாய்வுகளில் உள்ளூர் மக்களையும் இணைத்துக்கொள்வது எல்லாத் தரப்புகளுக்கும் பலன் தரும். உள்ளூர் வரலாறுகள், கடல், வனப் பகுதிகளை நன்கு அறிந்த அப்பகுதி முதியோர்கள், சான்றோர்கள், எழுத்தாளர்கள், மீனவர்கள், பழங்குடியினர், நாடோடிகள் ஆகியோர் தொல்லியல் இடங்களை அடையாளம் காண்பதில் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சோதனைக்கூடங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் இணைக்கப்பட வேண்டும்.

தொடர் ஆய்வுகளின் அவசியம்

அகழ்வாய்வுகளை மேம்போக்காக மேற்கொள்ளாமல் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பரப்பைத் தேர்வு செய்து, குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரையான மானுட வாழ்வின் எச்சங்களைக் காணும் வகையில் பன்முகப்பட்ட பார்வைகளுடன் அந்த ஆய்வுகள் அமைய வேண்டும். சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள், பெயர்கள், விலங்குகள், தாவரங்கள் பொருட்களை அடையாளம் காணும் வகையில், அவை தொடர்பான அறிமுகங்கள் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு இருப்பது ஆய்வுகளின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கும்.

நிலத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, கள ஆய்வுகள் அவசியம். செயற்கைக்கோள் ரேடார், ஜி.பி.எஸ், லிடார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நிலத்துக்குக் கீழ் உள்ள பகுதிகளை ஆராய்ந்து ஒரு தொல்லியல் வரைபடம் தயாரித்துக்கொள்ள முடியும். கடல்சார் அகழ்வாய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டால் விரிவான, ஆழமான ஆய்வுகளை உறுதிசெய்ய முடியும். கடல்சார் ஆய்வுகளை நடத்தாமல், சங்க காலம், மற்றும் அதற்கு முந்தைய கால வரலாற்றுத் தடங்களைக் கண்டுபிடிப்பது கடினம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வுகளின் முடிவுகள்கூட தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை. தமிழகத் தொல்லியல் துறை தொல்லியலாளர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து, கடல்சார் அகழ்வாய்வுகளில் ஈடுபடுத்துவது வரலாற்றாய்வில் புதிய திறப்புகளுக்கு வழிவகுக்கும்.

மானுடத் தொல்லியல் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் தொல்லியல், மண்ணியல், உயிரியல், தாவரவியல்,விலங்கியல் தொல்லியல் பார்வைகளுடனும் அகழ்வாய்வுகள் அமைய வேண்டும். இந்தியாவிலேயே கல்வெட்டு ஆவணங்கள் அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். அதேசமயம், சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளில் இன்னமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியிடப்படாமல் உள்ளன. கிடைத்திருக்கும் கல்வெட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல் அழியும் நிலையில் உள்ளன.

தமிழின் தொன்மை

மேலும், தமிழகத் தொன்மை வரலாற்றை வெளிக்கொணர்வதில் நடுகல்களுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், அவை கவனிப்பாரற்று அழிந்துவருகின்றன. போர்க்கால அடிப்படையில் இவற்றை மீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான உள்ளூர் கோயில்களில் உள்ளூர் வரலாறுகள் புதைந்துள்ளன. குறிப்பாக, மத்திய காலம் (சோழப் பேரரசு) குறித்த தொல்லியல் ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்பட்டுவருகின்றன. உள்ளூர் மக்களை இணைத்துக்கொண்டு இக்கோயில்களும் அங்குள்ள கல் வெட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆவணங்களை மின் உருவாக்கம் செய்தல், அவற்றை மின்னணு ஆவணங்களாக மாற்றுதல் அவசியம். வரலாற்று தொல்லியல் தளங்களை முப்பரிமாண அருங்காட்சியகங்களாக அமைப்பது, தொன்மையான விஷயங்கள் குறித்த ஆர்வத்தை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தும்.

கல்வெட்டாய்வுகள், ஓலைச்சுவடி ஆய்வுகள் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளைப் பல் துறை வல்லுநர்கள் அணுகும் வண்ணம் பரவலாக்க வேண்டும்.  குறிப்பாக, இந்த முடிவுகள் வரலாற்றாய்வாளர்களால் மறுவாசிப்பு செய்யப்பட்டு வரலாறு எழுதப்பட்டால், எதிர்கால ஆய்வுகளுக்கு நம்பகமான சான்றுகள் உறுதிப்படுத்தப்படும். ஆய்வு முடிவுகளைப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் உடனுக்குடன் சேர்ப்பது தொல்லியல், வரலாறு ஆகியவை பற்றிய புதிய புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

தமிழக மக்களின் தொன்மை வரலாறு மக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர்க்கும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு சுற்றுலாத் திட்டங்களில் தொல்லியல் முக்கியத்துவம் உள்ள இடங்களைச் சேர்ப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். இதுபோன்ற திட்டங்கள் மூலம் தமிழக தொல்லியல் வரலாற்றை நிரந்தர ஆவணமாக நிலைநிறுத்த முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x