Published : 09 Jan 2019 09:03 AM
Last Updated : 09 Jan 2019 09:03 AM

மாநில அரசுகள் சிபிஐக்குத் தடைவிதிப்பது ஆரோக்கியமான விஷயமா?

இந்தியாவின் கூட்டாட்சி அரசியலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரண்டு நிகழ்வுகளைக் கடந்த ஆண்டு பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் எவ்வளவு தீவிரமானவை என்பதை முழுதாக உணராத நிலையில் இருக்கிறது இன்றைய அரசியல் வர்க்கம். உரிய காலத்தில் சரி செய்யப்படாவிட்டால் நிர்வாக அமைப்பில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

முதலாவது ஆபத்து, தேசியப் புலனாய்வு முகமைகள் தங்களுடைய தனித்த அடையாளங்களான தொழில்நேர்த்தி, நடுநிலை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதைப் போலத் தெரிவது. மாநிலங்களுக்குள் செயல்படும் விசாரணை முகமைகள் இதைவிட மோசமாகக்கூட இருக்கலாம். சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் விசாரணைகளை சிபிஐ மேற்கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருப்பது மோசமான அரசியல் விளைவாகும்.

வலுவான சமிக்ஞைகள்

சிபிஐ நடுநிலையான அமைப்பு அல்ல என்று கருதுவோரின் கருத்துக்கு வலு சேர்ப்பதைப் போல, கோவிந்த் பன்சாரே (2015), கவுரி லங்கேஷ் (2017) கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ சேர்த்து விசாரிக்கக் கூடாது என்று அவ்விருவரின் குடும்பத்தார் கூறிவிட்டனர். படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்கி ஆகியோரின் குடும்பத்தாரும் அதே மனநிலையில் உள்ளனர்.

செல்வாக்குள்ள நபர்கள் தொடர்புடைய எந்த ஊழலாக இருந்தாலும், குற்றச்செயலாக இருந்தாலும் அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிய காலம் மலையேறிவிட்டது. தங்களுடைய நிர்வாக எல்லையில் எந்த வழக்கையும் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று மாநில அரசுகள் தடை விதிப்பதற்கு அரசியல் உள்நோக்கம்தான் காரணம் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், அதன் திறமை, நடுநிலைமை மீது மக்களுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுவருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

நம்முடைய அரசியல் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு ஆபத்து, இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றையொன்று ஏதாவதொரு வழக்கில் சிக்கவைத்து நீதிமன்றத்துக்கும் சிறைச்சாலைக்கும் அலையவிட வைப்பதில் காட்டும் போட்டியாகும். பிரச்சினை எதைப் பற்றியது என்பது பற்றிக் கவலையில்லை, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றஞ்சாட்டி சிபிஐ மூலம் விசாரிக்கவைத்து சிறைச்சாலை நீதிமன்றம் என்று அலையவிட வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

மத்திய - மாநில விளைவுகள்

தங்கள் மாநிலங்களில் புதிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஏற்கெனவே அமலில் இருந்த ‘பொது அனுமதி’யை விலக்கிக்கொண்டுவிட்டதாக 2018 நவம்பரில் முதலில் ஆந்திரமும் பிறகு மேற்கு வங்கமும் அறிவித்தன. இனி ஒவ்வொரு விசாரணையின்போதும் ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சிபிஐ தகவல் தெரிவித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே விசாரிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டளையின்படி சிபிஐ செயல்பட்டுவிடாமல் தடுக்கவும், தன்னுடைய அரசியலை மத்திய அரசு புகுத்திவிடாமலிருக்கவும் இது உதவும். ஏற்கெனவே விசாரித்துவரும் வழக்குகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று கூறினாலும், அது வெறும் பேச்சளவில்தான் சாத்தியம். மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சிபிஐயோ அல்லது வேறு எந்த முகமையோ புலன் விசாரணைகளை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது.

கடந்த காலங்களில் சில வழக்கு விசாரணைகளில் மட்டும் மாநிலங்கள் தலையிட்டுத் தடுத்துள்ளன. இப்போது ஆந்திரமும் மேற்கு வங்கமும் வழக்கின் தன்மை கருதி தடை விதிக்கவில்லை. அரசியல்ரீதியாக மத்திய அரசு பெரியதா, மாநில அரசு பெரியதா என்ற போட்டியில் தடுத்துள்ளன.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இந்தப் பூசலால் சிபிஐ மட்டுமல்ல மத்திய வருவாய்த் துறையின் அமல்பிரிவு இயக்குநரகம் (இ.டி.), தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஆகியவையும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கு எதிரான கட்சி ஆளும் மாநிலங்களில் இந்தத் தடைகளை எதிர்கொள்ள நேரும்.

1980-களில் வருமானவரித் துறையின் சிறப்புக் குழு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த விரும்பியது; அதை உள்ளூர் காவல் துறைக்குத் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள் என்று அஞ்சி, தகவல் சொல்லாமல் சென்றது. அதற்காக அந்தக் குழு பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பிறகு சந்திக்க நேர்ந்தது.

இந்திய அரசியல் சட்டப்படி சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது மாநிலங்களுக்கு மட்டுமேயான தனிப்பெரும் பொறுப்பாகும். ரயில்வே சொத்துகள், பயங்கரவாதச் செயல்கள், தேசவிரோதச் செயல்கள், கள்ளநோட்டு அச்சடிப்பு ஆகியவை தொடர்பாக மட்டும் மத்திய அரசு உரிய துறைகள் மூலம் தனது அதிகாரத்தைச் செலுத்தலாம். இவை தொடர்பான வழக்குகளில்கூட மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய முகமைகளால் தங்களுடைய கடமைகளைச் செய்துவிட முடியாது.

பேச்சுவார்த்தை அவசியம்

நம்முடைய கூட்டாட்சி அமைப்பில் தேசியப் புலனாய்வு முகமைகள் இரண்டு காரணங்களால் இதுவரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்துள்ளன. முதலாவதாக, மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தவரையில் ‘அரசியல் தலையீடு’ என்ற பிரச்சினை எழவில்லை. இரண்டாவதாக, இந்த அமைப்புகள் தொழிலில் நேர்மையாகவும் பாரபட்சம் பாராமலும் செயல்பட்டதும் அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

இனி மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய வரையில் சாத்தியமே இல்லை. அதேசமயம், இந்த முகமைகளும் போற்றும் வகையில் இல்லை. ஆனால், ஒரு வாய்ப்பு இருக்கிறது.

ஒரே கட்சி ஆதிக்கம் செய்த காலம் மாறிவிட்டது என்பதால், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒன்றையொன்று குறிவைத்துச் செயல்படுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 2003-ல் மலிமத் கமிட்டி பரிந்துரை செய்தபடி, கூட்டாட்சிக் குற்றங்கள் எவை என்பதைத் தெளிவாக அடையாளம் கண்டு வரையறுக்க வேண்டும். குற்றங்களை வரிசையாகப் பட்டியலிட்டுவிட்டு அவற்றுக்கு ‘கூட்டாட்சி’ என்று அடைமொழி கொடுத்து பட்டியலிட்டுவிடக் கூடாது. தேசியப் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களையும் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரசின் வெவ்வேறு அடுக்குகளைத் தரப்படுத்தி, குற்ற வழக்குகளை விசாரிப்பதில் பொதுக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ளபடி மத்திய, மாநில அரசுகள் கடமையாற்றவும், உரிய காலத்தில் பணிகளைச் செய்துமுடிக்கவும் வழி காண வேண்டும்.

இந்த வகையில் முதல் நடவடிக்கையாக பாஜகவும் காங்கிரஸும் தங்களுடைய போட்டியால் பரஸ்பரம் ஏற்படுத்திக்கொள்ளும் ஆபத்துகளையும், அரசியல் துறைக்கே ஏற்படுத்தும் வினைகளையும் உணர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய குற்ற வழக்குகளைக் கண்காணிக்கும் நிர்வாக நடைமுறையிலிருந்து விலகி நிற்க வேண்டும். குற்ற வழக்கு விசாரணை அனைத்து நிலையிலும் நீதித் துறையால் கண்காணிக்கப்பட வேண்டும். அதிகாரவர்க்கம் எவர் பக்கமும் சாராமல் நடுநிலையாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

விசாரணை அமைப்புகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமான செயல் அல்ல. அப்படிச் செய்வது எல்லா அரசியல் கட்சிகளின் சுயநலனுக்கும்கூட அவசியம். அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், நம்முடைய கூட்டாட்சியை வலுப்படுத்தும் சிந்தனைகளுக்கு உரமூட்டுவது பொருத்தமாக இருக்கும். சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகள் வெளிப்பட்டு அது பலன் தருவதற்கு உரிய சூழலும் கருத்தொற்றுமையும் மிகவும் அவசியம்!

- டி.ஷியாம் பாபு,

மூத்த ஆய்வாளர்,

கொள்கை ஆராய்ச்சி மையம், டெல்லி.

இந்து ஆங்கிலம், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x