Published : 04 Jan 2019 08:57 AM
Last Updated : 04 Jan 2019 08:57 AM

ஹெச்ஐவி பாதிப்பு: இன்னும் மாறாத மக்கள் மனநிலை

எய்ட்ஸ். இந்த வார்த்தை 15 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுவெளியில் ஏற்படுத்தியிருந்த அசூயையை, அச்சத்தை, வெறுப்பை மறக்கவே முடியாது. ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களைக் கிட்டத்தட்ட மனிதகுலத்திலிருந்தே விலக்கிவைப்பதுபோல் நடந்துகொண்டது நமது சமூகம். துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் அந்த மனநிலையில் பெரிய மாற்றம் இல்லை. எய்ட்ஸ் என்பது நோயல்ல, குறைபாடு எனும் அளவுக்கு ஒரு புரிதல் உருவாகியிருக்கிறது. ஆனால், அதற்கே 10 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களின் துயரம் இன்றும் தொடரவே செய்கிறது. இதோ, கர்ப்பிணிக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்ஐவி வைரஸ் கலந்திருந்த சம்பவத்தில் ரத்த தானம் செய்த இளைஞர் மனவுளைச்சலில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பொதுவெளியில் நடந்த அபத்த உரையாடல்களெல்லாம் ஹெச்ஐவி பற்றிய விழிப்புணர்வின்மைக்குச் சான்றுகள்.

உலகம் முழுவதும் சுமார் 3.69 கோடிப் பேர் ஹெச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்துவருகிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 21 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருக்கிறது. சமூகவெளியில் பிறருக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமைகள், சிகிச்சை உள்ளிட்டவற்றைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் விவரிப்பில் அடங்காதவை.

புறக்கணிப்பின் வலி

மற்ற நோயாளிகளைப் போல் அவர்களை அணுகும் வகையில் நமது பொதுப்புத்தியில் மாற்றம் ஏற்படவில்லை. அறிவியல்பூர்வமாகவும் மனிதநேயத்துடனும் அணுகும் மனநிலை நம்மிடம் இன்னும் உருவாகவில்லை. பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் சொந்த வீடுகளிலும்கூட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்கள் என்றாலே ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே பலரும் கருதிக்கொள்கிறார்கள். பெண்கள், குழந்தைகளின் நிலைமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சிந்தாத கண்ணீராக உறைந்துவிட்ட துயரம் அவர்களுடையது.

மிகவும் அவல நிலையில், துயர நிலையில் உள்ள சக மனிதர்கள் மீது ஏவப்படுகிற சமூக வன்முறை, அரசு வன்முறை, மனித உரிமை மீறல்கள் கணக்கற்றவை. நகரங்களுக்கு வெளியே ஆள் நடமாட்டமே இல்லாத தனிமைப் பகுதியில் தென்படுகிற எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான ஆதரவு இல்லங்களே இந்தச் சமூக வன்முறைக்குச் சாட்சியம் கூறுகின்றன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் (1966), பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் (1966), சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் (1948) ஆகியவை பாகுபாடுகளுக்கு எதிரான உரிமையை அனைவருக்கும் அளிக்கின்றன. போதுமான வாழ்க்கைத் தரம், உதவிகள், மருத்துவ உதவிகள், சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளை மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு 25 (1) அளிக்கிறது. இவை அனைத்தும் எய்ட்ஸ் பாதிப்புடையவர்களுக்கும் பொருந்தும்.

எய்ட்ஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், எய்ட்ஸ் பாதிப்புடையவர்களின் தனிமை ரகசிய உரிமை, மருத்துவ உரிமை, வாழ்வுரிமை, பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை உத்தரவாதப்படுத்தத் தேவையான சட்டங்களை ஒவ்வொரு நாடும் இயற்ற வேண்டும் என்கிறது ஐநா எய்ட்ஸ் வழிகாட்டி (1996). இதன்படி பல மேலை நாடுகள் சட்டம் இயற்றியுள்ளன. இந்தியா அதுபோல சட்டம் இயற்ற 20 ஆண்டுகள் பிடித்தது!

எய்ட்ஸ் பாதிப்புடையவர்களின் உரிமைகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமை, பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை, வாழ்வுரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானோருக்குக் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்குப் போதுமான வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். பணியிடங்களில் நியாயமான, மனிதாபிமான சூழல் இருப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுமக்கள் ஆரோக்கியத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என்கிற அரசுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளும் எய்ட்ஸ் பாதிப்புடையவர்களுக்கும் பொருந்தும். இந்த உரிமைகளின்படி வேலைவாய்ப்பில், பணியிடங்களில், பொது இடங்களில், மருத்துவச் சிகிச்சையில் எய்ட்ஸ் பாதிப்புடையவர்களுக்கு எதிராகப் பாகுபாடுகள் காட்டக் கூடாது என்றும் அவர்களுடைய தனிமை ரகசியம், விவரங்கள் காக்கப்பட வேண்டும் என்றும் பல வழக்குகளில் நமது நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபாட்டுக்கு எதிர்க்குரல்!

இந்திய சட்டத் துறை வரலாற்றில் முதன்முறையாக, எய்ட்ஸ் பாதிப்புடையவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக 2007-ல் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இது பொதுவெளியில், தனியிடங்களில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பயணம், காப்பீடு, குடியிருப்பு, சொத்து, அடிப்படை வசதிகள் போன்றவற்றில் எய்ட்ஸ் பாதிப்புடையவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளைத் தடுக்கிறது. அவர்களின் ரகசியம், தனிமையுரிமை, வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும். எய்ட்ஸ் பாதிப்புடையவர்களின் விவரங்களை அவர்கள் சம்மதமில்லாமல் அல்லது நீதிமன்ற உத்தரவில்லாமல் வெளியிடக் கூடாது. ஒருவர் சம்மதமில்லாமல் எய்ட்ஸ்/ஹெச்ஐவி மருத்துவப் பரிசோதனை செய்யக் கூடாது. அவர்களுக்குச் சிகிச்சையளிப்பது அரசின் கடமை. அவர்களின் புகார்களை விசாரிக்கத் தனி அமைப்பு ஏற்படுத்துவது போன்றவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த மசோதா நிறைவேறவில்லை.

மீண்டும் 2014-ல் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதா நிறைவேறுவதற்குள் மக்களவையின் காலம் முடிந்துவிட்டது. இதே மசோதாவைச் சில திருத்தங்களுடன் தற்போதைய அரசு 2017 ஏப்ரல் 12-ல் இயற்றியது. வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் கொண்ட மசோதா இது. எய்ட்ஸ் பாதிப்புடையவர்கள், அவர்களுடைய சங்கங்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஜனநாயக அமைப்புகளின் நெடிய போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகவே இதைச் சொல்ல வேண்டும்.

உடனே நிறைவேற்றுக!

இந்தச் சட்டத்தின்படி ஹெச்ஐவி பாதிப்புடையவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்பவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அரசு இச்சட்டத்தை உணர்வுபூர்வமாக அமல்படுத்த வேண்டும். அதேசமயம், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களைச் சகமனிதர்களாகத் தாயுள்ளத்தோடு அணுகுகிற ஆரோக்கியமான மாற்றம் நமது பொதுச் சமூகத்தில் இயல்பாக நிகழ வேண்டும். ஹெச்ஐவி தொற்று, எய்ட்ஸ் பாதிப்பு தொடர்பான தவறான கற்பிதங்களைத் தகர்த்தெறியும் வகையில் மருத்துவரீதியிலான உண்மைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அரசு தீவிர முனைப்பு காட்ட வேண்டும்!

- மு.ஆனந்தன், வழக்கறிஞர்,

‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: anandhan.adv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x