Published : 03 Jan 2019 08:43 AM
Last Updated : 03 Jan 2019 08:43 AM

360: முகம் மாறும் காமாத்திபுரம்

இந்தியா முழுமையும் ‘சிவப்பு விளக்குப் பகுதி’ என்ற பெயரால் அறியப்பட்ட மும்பை காமாத்திபுரத்தின் முகம் வேகமாக மாறிவருகிறது. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சூழலும், எய்ட்ஸ் பயமும் பாலியல் தொழிலின் புராதன முகத்தை மாற்றிவருவதுபோலவே இங்கும் மாற்றம் நடந்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 1,500 ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது.

அப்படியென்றால், பாலியல் தொழிலே அற்றுக்கொண்டிருக்கிறதா என்று கேட்டால், “அப்படி இல்லை; முன்பு அது அந்தந்த வசதிக்காரர்களுக்கு ஏற்றார்போல இருந்தது; இப்போது வசதியானவர்களுக்கானதாக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள். காமாத்திபுரமே ஓர் உதாரணம் என்றும் அவர்கள் சுட்டுகிறார்கள்.

உயரும் ரியல் எஸ்டேட் மதிப்பு இங்குள்ள 500 சதுர அடி நிலத்தை இரண்டு கோடி ரூபாய் மதிப்பு மிக்கதாக மாற்றியிருக்கிறது. 250 சதுர அடி வீடுகள் 25 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இனியும் எல்லாத் தரப்பினருக்குமானதாக பாலியல் தொழில் இங்கே எப்படி நீடிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

“பிரிட்டிஷ் காலத்தில் பம்பாயின் சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து வந்த காமத்தி எனும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கே தங்கவைக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், பிரிட்டிஷ் வீரர்கள் இங்கிருக்கும் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் சிவப்பு விளக்குப் பகுதியாக உருமாற்றமடைந்தது” என்பது காமாத்திபுரத்தின் வாய்வழி வரலாறு. நாளடைவில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின் கூடாரமாகவும் மாறிய காமத்திபுரம் மறைமுகமாகப் பல கும்பல்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்துவந்தது.

பாலியல் தொழில் இவ்வளவு வேகமாக வீழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும்கூட இன்னும் கும்பல்களின் ஆதிக்கம் முழுமையாக மாறவில்லை என்கிறார்கள். பாலியல் தொழிலே ஒரு பெண்ணுக்குச் சித்ரவதை என்றால், இத்தகைய கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது இரட்டைச் சித்ரவதை. என்றைக்கு இவர்களுக்கெல்லாம் விடிவுக் காலம் பிறக்குமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x