Published : 24 Dec 2018 09:42 AM
Last Updated : 24 Dec 2018 09:42 AM

பொருளாதாரத் திட்டமிடல்: உயிர்ப்பிக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கை!

ஜவஹர்லால் நேருவால் வெகுவாக ஆதரிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலை மீண்டும் தொடங்குவதன் மூலம், நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, பொருளாதாரத் திட்டமிடல் இப்போது ஏற்கத்தக்க கடமையாகக் கருதப்படுவதில்லை. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறையை வளர்க்க நேருவின் தலைமையில் புதிய உத்தி வகுக்கப்பட்டது. தொழிற்சாலை உற்பத்தி, ஆய்வு நிறுவனங்கள், அறிவுசார் நவீனத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நாட்டின் முன்னேற்றத்துக்காக அரசுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தித் துறை, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் எல்லாம் இப்படி உருவாக்கப்பட்டவைதான். காலனி ஆதிக்கத்தில் நீண்ட காலம் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட முடியாத ஏழை நாட்டில், தொலைநோக்குப் பார்வையோடு இவற்றை உருவாக்கினார் நேரு.

நேரு எதிர்கொண்ட சவால்கள்

தொழிற்சாலைகளில் உற்பத்திக்குத் தேவைப்படும் கனரக இயந்திரங்களைத் தயாரிப்பது, அணுசக்தியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில் பிரிவுகள் ஆகியவற்றுக்கு நிறைய முதலீடும் நவீனத் தொழில்நுட்பங்களும் மிகவும் தேவை என்பதால் சவால்கள் அதிகம் இருந்தன. பொருளாதார அறிஞர் களிடையே நிலவும் பழமைவாதத்துக்கு எதிராக இருந்தது நேருவின் உத்தி. தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாடு ஆடை தயாரிப்பு, தோல் தொழில்கள் போன்றவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் வாதம். ‘எதற்காக இயந்திரங்களையும் மருந்து மாத்திரைகளையும் தயாரிக்க வேண்டும்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவிடலாமே’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

உதாரண தேசம்

1950-களிலிருந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அதிக மூலதனம், நவீனத் தொழில்நுட்பம் அதிகம் தேவைப்படும் துறைகளில் திறன்களை வளர்ப்பதாகவே அமைந்தன. நாடு கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும் இவ்வாறு திட்டமிட்டுச் செயல்பட்டதன் மூலம் மூன்றாவது உலகத்தைச் சேர்ந்த பல வளர்ந்த நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இந்தியா மேற்கொண்ட திட்டமிடலானது ‘வளர்ச்சிசார் பொருளாதாரம்’ என்ற புதிய பாடப்பிரிவு உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. இந்தியாவின் பலதரப்பட்ட பொருளாதார அமைப்புக்கான அடித்தளம், ‘திட்டமிடல் காலத்தில்’ நிறுவப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஆழ்ந்த அறிவுத் துறைகளிலும் இந்தியாவுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள் அனைத்தும், நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் தொடங்கப்பட்ட உயர் கல்வி நிலையங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவுகள்தான்.

அதேசமயம், திட்டமிடல்கள் இருந்தும் வேளாண்மை, சிறுதொழில் துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட தடங்கல்களை நீக்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்த பிறகு நிலச் சீர்திருத்தங்களை அமல்செய்வதில் அரசுகள் திருப்திகரமாகச் செயல்படவில்லை. அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதிலும் மெச்சும்படியான சாதனைகள் இல்லை. எனவே, அரசின் முயற்சிகளால் ஏற்பட்ட வளர்ச்சியின் பலன்கள் இந்தியர்களில் மிகச் சிலருக்கே கிடைத்தன.

ஐந்தாண்டுத் திட்டத்தின் சரிவு

ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் வளர்ச்சி அடைவது என்ற குறிக்கோளில் மத்திய அரசுக்கு 1990-கள் முதல் ஆர்வம் குறைந்தது. 2014-ல் திட்டக் குழு கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே இது தொடங்கிவிட்டது. 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வேளாண்மை, தொழில் துறை ஆகியவற்றில் பொது முதலீடு குறையத் தொடங்கியது. அரசுத் துறை நிறுவனங்கள் எவ்வளவு லாபம் ஈட்டுகின்றன என்று மட்டுமே பார்க்கப்பட்டது. அதன் இதர முக்கியப் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது.

அரசுத் துறை நிறுவனங்கள்தான் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன, அறிவை வளர்க்கின்றன என்பது மறக்கப்பட்டது. பல தொழில்களில் அல்லது துறைகளில் லாபம் குறைவு என்பதாலும் லாபம் கிடைக்க அதிக ஆண்டுகள் ஆகும் என்பதாலும், அந்தத் தொழில்களில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதில்லை. சில துறைகளில் தொழில் தொடங்கும் ஆற்றலும் ஆர்வமும் தனியார் நிறுவனங்களுக்கு அறவே கிடையாது.

திட்டமிடலில் அரசுக்கு ஏற்பட்ட அலட்சியமும், பொருளாதாரத் துறையில் முடிவெடுக்கும் பொறுப்புகளிலிருந்து அரசு விலகி நிற்பதும் இந்தியத் தொழில் துறைக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. பல்வேறுவிதமான பொருட்களுக்கு இந்தியா இப்போது பரந்துபட்ட சந்தையாகத் திகழ்கிறது. இத்தனைப் பொருட்கள் இந்தியாவில் விற்றாலும், அவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதும், அதன் மூலம் இந்தியத் தொழிலாளர்களுக்குக் கணிசமான வேலைவாய்ப்புகளை அளிப்பதும் மிகமிகக் குறைவு. 2000 முதலே இயந்திரங்கள், போக்குவரத்துக்கான கருவிகள், மின்னணுச் சாதனங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘மேக்-இன்-இந்தியா’ என்ற அறிவிப்புக்குப் பிறகும் இந்த நிலையில் மாறுதல் ஏற்படவில்லை.

உலகமயச் சூழலில் திட்டமிடல்

பொருளாதாரத் திட்டமிடல் என்ற செயல் சந்தைக்கோ, உலகமயக் கொள்கைக்கோ இணக்கமற்ற செயல் அல்ல; அதற்கு மாறாக, உலக அளவில் ஏற்படும் பொருளாதாரக் கொந்தளிப்புகளின்போது மூழ்கிவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ள, எல்லா வளரும் நாட்டுக்கும் பொருளாதாரத் திட்டமிடலும் திட்டவட்டமான தொழில் கொள்கையும் அவசியம். கிழக்கு ஆசிய நாடுகள், தென் கொரியா ஆகிய நாடுகளின் வெற்றிக்குக் காரணங்கள் பல பத்தாண்டுகளாக அவை மேற்கொண்ட திட்டமிடல்களும், உத்திகளும்தான். குறைந்த ஊதியம் தரும் துறைகளை மையமாகக் கொண்ட தனது பொருளாதார அடித்தளத்தை செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளுக்கு விரிவுபடுத்திவிட்டது. சீன அரசின் கவனமான திட்டமிடலும் அதிக முதலீடும்தான் இதற்குக் காரணம்.

வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 கோடிப் பேர் வேலை தேடி பெயர்களைப் புதிதாகப் பதிவுசெய்துகொள்கின்றனர். தொழில் துறை அல்லது சேவைத் துறையில் தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரும் தொழில்நுட்பங்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. காரணம், அவையெல்லாம் தொழிலாளர்களைக் குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தும் நோக்கில் கையாளப்படுபவை. புதிய பொருளாதார வாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளையும் அளிக்கும் தொழில்நுட்பங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குப் புதிய வணிகப் பயன்பாடுகளை அளிக்கவல்ல உயிரித் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை உற்பத்தி செய்யவல்லவை ஆகியவற்றை அதிகம் கையாள வேண்டும்.

இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்கி, பரப்பும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்களுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள், படித்த தொழில்முனைவோர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பங்களைக் கையாள, ஊக்குவிப்புகளைத் தர வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய நம்முடைய பொருளாதார விவாதங்களில் ‘திட்டமிடல்’ என்பது மைய இடத்தைப் பிடிக்க வேண்டும்!

- ஜெயன் ஜோஸ் தாமஸ்,

டெல்லி ஐஐடியில் பொருளாதார ஆசிரியர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x