Published : 18 Dec 2018 08:40 AM
Last Updated : 18 Dec 2018 08:40 AM

தமிழகத்தில் அரபி

கைதி, நகல், வாரிசு, வசூல், தகராறு... இந்த வார்த்தைகள் எல்லாம் அரபி மொழியிலிருந்து தமிழுக்கு வந்தவை. இதுபோல் இன்னும் பல சொற்கள் தமிழ் மொழியிலே இரண்டறக் கலந்துள்ளன. அமல், இனாம், கஜானா, ஜாமின், ஜில்லா, தாலுகா, தாசில்தார், மசோதா, ஜப்தி, மகஜர், மகசூல், பாக்கி, மைதானம், ரசீது, மாமூல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரபி மொழி என்பது தமிழகத்துக்கு அந்நிய மொழியல்ல. அது நம்மோடு கலந்துவிட்ட, நம்மைவிட்டுப் பிரிக்க முடியாத மொழியாக இன்று விளங்குகிறது. மொழிகள் கொடுத்துப் பெறுகின்றன; பெற்றுத் தருகின்றன. அதுவே மொழிகளின் சிறப்பியல்பு.

தமிழர்களுக்கும் அரபிகளுக்கும் இடையே நிலவிய கலாச்சார, வணிக மற்றும் சமய உறவுகள் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்றன. கி.மு. 178-ல் தமிழகம் வந்த ‘அகதார்சைட்ஸ்’ என்ற கிரேக்கப் பயணி, தென்தமிழகத்தில் ‘சபியா’ என்று ஒரு ஊர் இருந்ததாகவும், அங்கு அரபிகளுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் வாள்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடலோரத் தமிழகத்தில் அரபுலக வணிகர்களின் குடியேற்றம் பற்றிய சான்றுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

இந்தியாவை அரபி மொழியில் அல்-ஹிந்த் என்று அழைக்கிறார்கள். அரபு மக்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு ஹிந்த் எனப் பெயரிடும் முறை இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அரபி மொழியைத் தங்களின் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானோர் பிஹாரிலும், 8,500 பேர் உத்தரப் பிரதேசத்திலும் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

அரபி மொழி, இஸ்லாமியர்களின் மொழியாக, இஸ்லாமியக் கலைஞானங்களைப் பயிற்றுவிக்கும் மொழியாக மதரசாக்களில் இடம்பெற்றுள்ளது. பல நூறு மதரசாக்கள் இப்பணியைப் பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டுள்ளன. இதைத் தவிர்த்து, அரபி மொழிக்கென்றே தனியாகக் கல்லூரிகள் கேரளம், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரபி மொழியைப் பயிற்றுவிக்கின்றன. அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளும் பல நூறுகளைத் தாண்டும்.

அரபுலகத்தோடு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்பு கொண்டிருக்கும் தமிழகம், அரபி மொழியிலும் தனது முத்திரைகளைப் பதித்திருக்கிறது. நான்காயிரம் வரிகளைத் தாண்டும் அரபிக் கவிதைகளை இயற்றி, அரபிகளே வியந்து போற்றும் வகையில் பங்களிப்புச் செய்துள்ள சதகத்துல்லாஹ் அப்பாவும், தைக்கா சாகிபு வலியும் தமிழர்களே.

- க.மு.அ.அஹ்மது ஜுபைர்

அரபித் துறைப் பேராசிரியர்.

டிசம்பர் 18: உலக அரபி மொழி தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x