Published : 18 Dec 2018 08:35 AM
Last Updated : 18 Dec 2018 08:35 AM

தேர்தல் நன்கொடைத் திட்டம்: கருப்புப் பணத்துக்கான நுழைவாயில்

தேர்தல் கலாட்டாக்களுக்கு இடையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பிலும் யோசிப்பது முக்கியமானது. அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நன்கொடைகள் வழங்கப்படுவதில் ஊழலை ஒழிக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்ட’த்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. அது ஏற்படுத்தப்போகும் விளைவுகள் எப்படி நெறியான செயல்பாட்டை நாசப்படுத்திவிடும் என்பதைச் சொல்லும் குரல் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய ஒருவரிடமிருந்தே சமீபத்தில் வந்திருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற ஓ.பி.ராவத் இந்தத் திட்டத்தைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். “தேர்தலில் ஒரு கட்சி எவ்வளவு செலவுசெய்யலாம் என்பதற்கு உச்ச வரம்பே கிடையாது - கொடுப்பவர் யார் என்பது கடைசி வரையில் ரகசியமாகவே இருக்கும் என்றால், தேர்தல் நிதியாக கருப்புப் பணம் வராது என்று எப்படி நிச்சயமாகக் கூற முடியும்? இந்தத் திட்டமானது, நேர்மையான வழிகளில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான நடைமுறையே அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார் ராவத்.

மிகவும் மூடுமந்திரமானது

இந்தத் திட்டம் இப்போதுள்ள நிலையில், தனி நபர்கள் - தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, சட்டத்தின் நிர்வாகத்தில் வரும் ‘செயற்கையான நபர்கள்’கூட பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்புள்ள நன்கொடைப் பத்திரங்களைக் குறிப்பிட்ட காலங்களில் வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்க முடியும். இதை வாங்குகிறவர் எந்த அரசியல் கட்சிக்கும் கொடுக்கலாம். அந்தக் கட்சி தங்களுடைய வங்கிக் கணக்கில் சேர்த்து அதைப் பணமாக்கிக்கொண்டுவிடும்.

இந்தப் பத்திரங்கள் வங்கி மூலம் வாங்கப்படுவதால் கருப்புப் பணம் தேர்தலில் ஒழிந்துவிடும் என்கிறது அரசு. அரசு சொல்வது தவறு மட்டுமல்ல, உண்மையும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதை ரகசியமாக வைத்திருக்க அனுமதித்து ஊழலைப் பல மடங்கு வளர்க்கிறது. இத்திட்டத்தின்படி, தேர்தல் நன்கொடைப் பத்திரத்தை வழங்குகிறவர் யார் என்பது கடைசி வரை ரகசியமாகவே இருக்கும். இந்தப் பத்திரத்தை வாங்குகிறவரும் சரி, இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் கட்சியும் சரி, நன்கொடை தருபவர் யார் என்பதை யாருக்கும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. ஒரு தொழில் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சரி, வாக்களிக்கும் மக்களுக்கும் சரி யார் கொடுக்கிறார்கள் - யார் வாங்குகிறார்கள் என்று எதுவுமே தெரியாது.

சேதத்துக்குள்ளாகும் லட்சியங்கள்

மேலும் சில அடிப்படையான ஜனநாயக லட்சியங்களும்கூடப் புதிய திட்டத்தில் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.  அரசியல் கட்சிக்கு  ஒரு தொழில் நிறுவனம்  எவ்வளவு  நன்கொடையை  அதிகபட்சம் தரலாம் என்ற உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்டது. ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய லாபத்தின் சராசரியில் அதிகபட்சம் 7.5% தொகையை மட்டுமே நன்கொடையாகத் தரலாம் என்ற நிபந்தனை முன்னர் இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுவிட்டது.

மேலும், லாபம் ஈட்டாமல் நஷ்டத்தில் நடக்கும் நிறுவனம்கூட எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நன்கொடையாகத் தர முடியும். நன்கொடை தரும் நிறுவனம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அடிபட்டுப்போய்விட்டது. எனவே, திடீரென முளைக்கும் ‘காளான் நிறுவனங்கள்’ அல்லது ‘முகமூடி நிறுவனங்கள்’கூட நன்கொடை தர முடியும். ஒரு அரசியல் கட்சி முறைகேடாகச் சம்பாதித்துப் பதுக்கி வைத்திருந்த பணத்தை, முகமூடி நிறுவனங்கள் மூலம் கட்சிக் கணக்குக்கு மாற்றி அதை வெள்ளையாக்கிக் கொண்டுவிட முடியும்.

அரசியல் கட்சிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் வரம்பில்லாமல் நன்கொடை தருவதால் வரக்கூடிய ஆபத்துகளை 1957-லேயே பம்பாய், கல்கத்தா உயர் நீதிமன்றங்கள் இரு வேறு வழக்குகளில் அழகாக சுட்டிக்காட்டியுள்ளன. “இது மிகப் பெரிய ஆபத்து; வேகமாக வளர்ந்து பெரிதாகிவிடும், ஜனநாயகத்தின் குரல்வளையைக்கூட நெரித்துவிடும்” என்று பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

லஞ்சத்துக்கு சட்ட அனுமதி?!

வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தனது நிதியிலிருந்து நன்கொடை வழங்கி, நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் மாறுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்று ‘டாட்டா இரும்பு-உருக்கு ஆலை’ (டிஸ்கோ) நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தது. அவ்வாறு அனுமதி வழங்க மறுத்ததுடன் இதன் தீமையைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தின் கவனத்தையும் நீதிமன்றம் ஈர்த்திருந்தது.

டாட்டா நிறுவனத்துக்காக வாதாடிய எச்.எம்.சீர்வை நீதிபதியின் கருத்தை ஆமோதித்தார். அத்துடன், தான் அளித்த நன்கொடைகள் குறித்து வருடாந்திர வரவு-செலவு அறிக்கையில் வெளிப்படையாகக் குறிக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டார். “நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, வாக்களிக்கும் வாக்காளர்களும்கூட அவற்றை அறிவது முக்கியம்” என்றார் சாக்ளா.

மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் இதேபோல ஒரு வழக்கு வந்தது. “என்னுடைய தொழிலுக்கு உதவும் அரசியல் கட்சிக்கு நான் தேர்தல் நன்கொடை கொடுப்பேன்; அரசுக்கு நான் தரும் லஞ்சத்துக்கு சட்ட அனுமதி தேவை என்பதுதான் இந்த வழக்கு; இம்மாதிரியான திருத்தங்களை அனுமதித்தால், அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுவால்களாகத்தான் தொழில் நிறுவனங்கள் சேர்ந்துகொள்ளும். பிறகு, யார் மகுடி ஊதுகிறாரோ அவருக்கு ஏற்பப் படம் எடுத்து ஆடும் நிலை வரும்” என்றார் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.முகர்ஜி.

இந்தப் பிரச்சினையில் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று அவ்விரு  நீதிபதிகளும் கூறியதிலிருந்தே, ஜனநாயகத்தின் அடிநாதம் எது என்பதை அங்கீகரித்துள்ளனர். எந்தப் பொது நடவடிக்கையும் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், அரசியல் கட்சிகளுக்கான நிதியளிப்பை மூடுமந்திரமாக வைத்திருப்பதற்கே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ‘தேர்தல் நன்கொடை பத்திரம்’ என்ற இந்தப் புதிய திட்டம் அத்தகைய தாக்குதலின் உச்சம்தான். இது உடனடியாக ரத்து செய்யப்படாவிட்டால், இந்தியாவின் ஜனநாயகக் கோபுரத்தை ஆட்டம் காணச் செய்துவிடும்.

அடிப்படைப் பழுதுகள்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுட்டிக்காட்டுவதைப் போல, இந்தத் திட்டத்தில் அடிப்படையான இரண்டு பழுதுகள் உள்ளன. முதலாவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்த மசோதா, ‘பண மசோதா’ வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது பழுது, இந்தத் திட்டம் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

ஆங்கிலேயே சட்ட நிபுணர் ஸ்டீபன் செட்லியின் வாக்கின்படி, தேர்தல் நன்கொடைத் திட்டமானது இரண்டு சாத்தியங்களைச் சுட்டிக்காட்டுகிறது. முதலாவது, அரசியல் சட்டம் என்றால் என்ன என்பதை அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அல்லது அரசு புரிந்துகொண்டுள்ளது. ஆனால், அதன் உள்ளடக்கங்களில் அத்துமீறுகிறது!

- சுக்ரித் பார்த்தசாரதி,

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்,

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x