Published : 13 Dec 2018 10:54 AM
Last Updated : 13 Dec 2018 10:54 AM

காந்தி பேசுகிறார்: நவீன நாகரிகம் பற்றி காந்தி

“ஐரோப்பாவின் மக்கள் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட நன்றாகக் கட்டப்பட்ட வீடுகளில் இன்று வாழ்கிறார்கள். மனித நாகரிகத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது. உடல்சார்ந்த இன்பத்தை மேம்படுத்தும் விஷயமாகவும் இது கருதப்படுகிறது. முற்காலத்தில் தோலாலான ஆடைகளை உடுத்திக்கொண்டு, ஈட்டிகளை ஆயுதங்களாகப் பயன்படுத் தினார்கள். தற்போது, தங்கள் உடலை அலங்கரிக்கும்வண்ணம் நீண்ட முழுக்கால் சட்டைகளை அணிகிறார்கள். ஈட்டிகளுக்குப் பதிலாகத் தற்போது துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள்.

நிறைய ஆடைகள், பூட்ஸ் போன்றவற்றை அணியும் பழக்கம் இல்லாத மற்றொரு தேசத்தினர் காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டு, அந்த நிலையிலிருந்து அவர்கள் வெளிவந்து ஐரோப்பியர்களைப் போல ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். முன்பெல்லாம், ஐரோப்பாவில் மக்களே தங்கள் உடலுழைப்பின் மூலம் தங்கள் நிலங்களை உழுதார்கள். இப்போதோ, நீராவி இயந்திரங்கள் போன்றவற்றின் மூலம் பெருமளவிலான வயல்வெளிகளை உழ முடிவதுடன், அதன் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முடியும். இதுதான் மனித நாகரிகத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது.

முன்பெல்லாம் மக்கள் மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். இப்போது ஒரு நாளுக்கு நானூறுக்கும் மேற்பட்ட மைல் தூரத்தை ரயில்கள் மூலம் காற்றைக் கிழித்துக்கொண்டு கடக்க முடியும். இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டால் ஆகாய விமானங்கள் மூலமாக உலகின் எந்தப் பகுதியையும் ஒருசில மணி நேரங்களில் அடைந்துவிட முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

மனிதர்களுக்குத் தங்கள் கைகால்களின் பயன்பாடு இனி தேவைப்படாது. ஒரு பொத்தானை அழுத்தினால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே அவர்களின் ஆடை வந்துவிடும். இன்னொரு பொத்தானை அழுத்தினால் அவர்கள் படிக்கும் செய்தித்தாள் அவர்களிடம் வரும். மூன்றாவது பொத்தானை அழுத்தினால் அவர்களுக்காக மோட்டார் கார் காத்திருக்கும்… எல்லாமே இயந்திரங்களால் நிறைவேற்றப்படும்.

முன்பெல்லாம், மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட விரும்பினால், அவர்களின் உடல் பலத்தைக் கொண்டு அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தற்போது ஒரு குன்றுக்குப் பின்னால் ஒரே ஒரு மனிதன் இருந்துகொண்டு இயந்திரத் துப்பாக்கியை அழுத்தினால் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைப் பறிக்க முடியும். இதுதான் மனித நாகரிகம்.

முன்பெல்லாம், மனிதர்கள் திறந்த வெளிகளில் காற்றோட்டமான இடங்களில் தங்களுக்குப் பிடித்த அளவுக்கு வேலை பார்த்தார்கள். தற்போதோ, பராமரிப்புப் பணிகளுக்காகக்கூட ஆயிரக்கணக்கான மனிதர்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் ஒன்றுசேர்ந்து வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. விலங்குகளைவிட மோசமானது அவர்களின் நிலைமை. ஒருசில கோடீஸ்வரர்களின் நலனுக்காக அந்தத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து மிகவும் அபாயகரமான வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

முன்பெல்லாம், மனிதர்கள், உடல்ரீதியிலான பலவந்தத்தின் மூலமாக அடிமைகளாக ஆக்கப்பட்டனர். தற்போதோ, பணத்தாசை மூலமாகவும் பணத்தைக் கொண்டு அடையக் கூடிய வசதிகளைக் காட்டியும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த மனித நாகரிகம் அறத்தையும் மதத்தையும் பொருட்படுத்துவதில்லை. உடல் சார்ந்த வசதிகளை அதிகரிக்கும் நோக்கத்தை இந்த நாகரிகம் கொண்டிருந்தாலும், அதைக்கூடச் செய்ய முடியாமல் மிக மோசமாகத் தோல்வியைத் தழுவுகிறது.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x