Published : 12 Dec 2018 10:02 AM
Last Updated : 12 Dec 2018 10:02 AM

ஐந்து மாநிலத் தேர்தல்: வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும்

சந்திரசேகர ராவ்

தெலங்கானா தனி மாநிலத்தை வாங்கித் தந்ததோடு, புதிய மாநிலத்தை வளர்ச்சிப் பாதையிலும் வழிநடத்திய கே.சி.சந்திரசேகர ராவைக் கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள். காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணியைத் தாண்டியும் சந்திரசேகர் சாதித்திருக்கிறார் என்றால், கடந்த ஐந்தாண்டுகளில் அவர் ஆற்றிய பணிகள் அப்படி. 1.04 கோடி குடும்பங்களிடம் 94 அம்சங்களைக் கொண்ட ‘மெகா சர்வே’ நடத்தியது அரசு. அதன் அடிப்படையில்தான் மாநிலத் திட்டங்கள், நல உதவிகள் அமலாக்கப்படுகின்றன. ரூ.85,000 கோடியில் ஒரு கோடி ஏக்கருக்குப் பாசன நீர் அளிக்கும் ‘காளேஸ்வரம் திட்டம்’, 46,000 ஏரிகள், குளங்களை மீட்டெடுத்த ‘காகதீய திட்டம்’, விவசாயிகளுக்கான 24 மணி நேர தடையில்லா - கட்டணமில்லா மின்சாரத் திட்டம், ஒவ்வொரு சாகுபடியின்போதும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 அளிக்கும் திட்டம், 2 லட்சம் பேருக்கான 50% மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம், ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன. 2.7 லட்சம் பேருக்கு ரூ.20,000 கோடியில் ‘2 படுக்கையறை-ஒரு கூடம்-ஒரு சமையலறை’ உள்ள தனி வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. தொழில் வளர்ச்சியிலும் மாநிலம் வெற்றி நடைபோடுகிறது. ஐந்து மாநிலத் தேர்தலில் பெருவெற்றியாளர் இவர்தான்.

சோரம் தங்கா

மிசோராமில் காங்கிரஸின் பத்தாண்டு கால ஆட்சியை வீழ்த்தியிருக்கிறார் மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தங்கா. இதன் மூலம் வடகிழக்கில் கடைசியாக ஆட்சியிலிருந்த ஒரே மாநிலத்தையும் பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ். இது நிச்சயமாக சோரம் தங்காவின் வெற்றிதான். கிறிஸ்தவர்களும் பழங்குடிகளும் அதிகம் வாழும் இம்மாநிலத்தில் அமைப்புரீதியாக வலுவான இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது என்பதுபோக முதல்வராக இருந்த லால்தன் ஹாவ்லா இங்கு மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவர். ஐந்து முறை முதல்வர். 1984-86, 1989-1998, 2008-2017 என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் தன்னுடைய ஆளுகையை வெளிப்படுத்தியவர். லால்தன் ஹாவ்லாவை வீழ்த்த பத்தாண்டு கால ஆட்சியின் தோல்விகளைத்தான் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தினார் சோரம் தங்கா. லால்தன் ஹாவ்லாவுக்குச் சரியான சவால் விடக்கூடியவர் இங்கே அவர்தான். ஒருகாலத்தில் பிரிவினை கோரும் அமைப்பாக இருந்த மிசோ தேசிய முன்னணியை மைய அரசியல் நோக்கி நகர்த்தியவர்களில் சோரம் தங்காவுக்கும் பங்குண்டு. அப்போது மிசோ தேசிய முன்னணியின் தலைவராக இருந்தவர் லால்டெங்கா. அவர் முதல்வரானபோது சோரம் தங்கா நிதி, கல்வித் துறை அமைச்சர் ஆனார். அடுத்து முதல்வர் ஆனார். 1998–2008 பத்தாண்டு காலம் முதல்வராக நீடித்தார். அப்போது பறிகொடுத்த ஆட்சியை இப்போது மீட்டிருக்கிறார்.

சிவராஜ் சிங் சௌகான்

ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்திய விக்கெட்டுகளிலேயே பிரதானமாவர் சிவராஜ் சிங் சௌகான்தான். மும்முறை முதல்வர் என்பதோடு, ஒருகாலத்தில் மோடிக்கு இணையான தலைவராகக் கட்சிக்குள் மதிக்கப்பட்டவர் அவர். வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டது, பெண் சிசுக்கொலை தடுப்புத் திட்டம், ஏழைப் பெண்களுக்கான திருமணத் திட்டம், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு தரும் திட்டம், விலையில்லா தொலைக்காட்சி, ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, கோதுமை என்று தமிழக ஆட்சியாளர்களைப் போல அசத்தியவருக்குக் கடந்த ஐந்தாண்டுகள் பெரும் பின்னடைவுகளாக அமைந்தன. ‘வியாபம்’ ஊழல் சௌகானின் நற்பெயரைச் சிதைத்தது. அதைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் மக்களிடம் பெரும் விவாதங்களைக் கிளப்பின. தொடர்ந்து பாஜக அரசு மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், நியாயமான கோரிக்கைகளுடன் கூடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, துரத்தும் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்புநீக்கம் – ஜிஎஸ்டி அமலாக்கம் ஏற்படுத்திய பொருளாதாரத் தேக்கமெல்லாம் சேர்ந்து சௌகானை அமிழ்த்திவிட்டன.

ரமண் சிங்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றது என்பதைக் காட்டிலும் பாஜக தோற்றது என்பதே சரியாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ரமண் சிங்கால் சத்தீஸ்கரின் எந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரமான, தொலைநோக்கிலான தீர்வைக் காண முடியவில்லை என்பது தோல்விக்கு முக்கியமான காரணம். பெருநிறுவனங்களின் பேராதரவு பெற்றவர் என்ற பெயர் ரமண் சிங்குக்கு உண்டு. மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தைத் துருப்புச்சீட்டாக்கிக்கொண்டு போலீஸ் ராஜ்ஜியத்தின் கீழ் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்தவர் எதிர்க்குரல்களைக் கடந்த காலங்களில் வெகுவாக ஒடுக்கியிருந்தார். கனிம வளங்கள் மிகுந்த இந்த மாநிலத்தின் தாதுக்கள் உலகெங்கும் செல்ல உள்ளூர் மக்களோ ஏழ்மையில் ஆழ்ந்திருந்தனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலகட்டங்களில் காங்கிரஸ் சத்தீஸ்கரைப் புறக்கணிக்கிறது என்பதையே ஒரு பாட்டாகப் பாடிவந்தார். மோடி பிரதமரான பின் மக்கள் நிறையவே எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புகள் ஏமாற்றமான பின்னணியில் ரமண் சிங் மீதான ஊழல் புகார்கள், தொடரும் வேலையில்லா திண்டாட்டம் எல்லாமுமாகச் சேர்ந்து பாஜகவுக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கின்றன.

வசுந்தரா ராஜே சிந்தியா

ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் - ஆனால், மக்கள் பணிக்காக வந்தவர் என்ற பின்னணிதான் வசுந்தரா ராஜே சிந்தியாவின் தொடக்கக் கால எழுச்சிக்குக் காரணமாக இருந்தது. இம்முறை அதே பெயரே அவரைப் பாதாளத்தில் தள்ளியிருக்கிறது. ராஜஸ்தானில் பாஜகவின் செல்வாக்கு மிக்க அவர்தான். கடந்த தேர்தல் வெற்றி முழுமையாக வசுந்தராவின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இதற்கு முன்பே 2003–2008 காலகட்டத்தில் முதல்வராக இருந்த அனுபவம் வசுந்தராவுக்கு உண்டு என்றாலும், அப்போது அடைந்த தோல்வியிலிருந்து பாடம் மட்டும் அவர் கற்ற பாடில்லை. முதல்வராகப் பதவியேற்ற பிறகு மெள்ள மெள்ள கட்சிக்காரர்களிடமிருந்தும் கட்சித் தலைமையிடமிருந்தும் தனிமைப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர மக்களைச் சந்திப்பதை அறவே தவிர்த்தார். விவசாயிகள் பிரச்சினைகளை வசுந்தரா மோசமாகக் கையாண்டார். கட்சிக்குள்ளும் அமித் ஷாவுக்கும் அவருக்கும் இடையே பெரிய பனிப்போர் இருந்தது. வேலைவாய்ப்புகள் ஆவியாகிக்கொண்டிருந்ததன் தீவிரத்தை அவர் உணரவில்லை. வேளாண் சமூகங்களும் அவரைக் கைவிட்டுவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x