Last Updated : 12 Dec, 2018 10:00 AM

 

Published : 12 Dec 2018 10:00 AM
Last Updated : 12 Dec 2018 10:00 AM

என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!

மசாசுசெட்ஸ் நகரில் உள்ள கேம்பிரிட்ஜுக்குப் பலமுறை போயிருக்கிறேன். சுவையான காபிக் கடைகளும் புத்தகக் கடைகளும் நிறைய உண்டு. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தாய்வீடு, அத்துடன் எம்ஐடியும் உண்டு. உலகின் பிற பகுதிகளைவிட அறிவாளிகள் அதிகம் வாழும் இடம். இந்நகரைப் பார்ப்பதற்கு ஏற்ற பருவம் இலையுதிர்காலம்தான். மிருதுவான காற்று, நிர்மலமான வானம். சுற்றுப்புறங்களின் வண்ணங்களும் உற்சாகம் தரும். அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம் அங்கே இருந்தேன். ஹார்வர்ட், ரேவன் கடைகளில் புத்தகங்களைத் துழாவினேன். சாலையில் காலார நடந்தேன், பழைய நண்பர்களைச் சந்தித்தேன், புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டேன். வால்டன் பாண்ட் என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ஏரிக்குச் சென்று வலம்வந்தேன்.

மசாசுசெட்ஸ் எனக்கு முக்கியமானது. ஏனென்றால், அங்கேதான் நான் மிகவும் மதிக்கும் இரண்டு அறிவுஜீவிகள் வசிக்கின்றனர். ஒருவர் நவீன சீனம் பற்றிய வரலாற்றாசிரியர், ரோட்ரிக் மக்ஃபாகார். இன்னொருவர், ஈ.எஸ்.ஏனுகா ரெட்டி.

ஸ்காட் இனத்தைச் சேர்ந்த ரோட்ரிக் மக்ஃபாகாரை ‘ராட்’ என்றே செல்லமாகக் குறிப்பிட விரும்புகிறேன். பிளவுபடாத இந்தியாவில் 1930-ல் லாகூரில் பிறந்தவர். அவருடைய தந்தை பிரிட்டிஷ் அரசில் உயர் அதிகாரி. ஸ்காட்லாந்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஆக்ஸ்போர்டில் உயர் கல்வி பயின்றார். படிப்பு முடிந்ததும் பத்திரிகையாளர் ஆனார். பிபிசி நிறுவனத்துக்காக, ஜவாஹர்லால் நேருவின் இறுதி யாத்திரைச் செய்தியைத் தொகுத்து அளித்தார். ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகைக்காக மாவோவின் ‘கலாச்சாரப் புரட்சி’ பற்றிய கட்டுரைத் தொகுப்பை எழுதினார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக ஒரு முறை பதவி வகித்திருக்கிறார்.

பத்திரிகையாளர், பேராசிரியர்

1960-ல் பத்திரிகையாளராக இருந்தபோதே ‘சைனா குவார்ட்டர்லி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். அது நவீன சீனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியதால் நன்கு பிரபலமானது. அரசியலில் நுழைவதற்கு முன்னர் சில புத்தகங்களை எழுதினார். இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததும் மறுபடியும் பத்திரிகைத் தொழிலுக்குத் திரும்பக் கூடாது என்று முடிவெடுத்தார். கல்வியாளராகிவிட்டார். 1980-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரானார். பிறகு, அரசுத் துறையின் தலைவரானார். இவ்விரண்டுக்கும் நடுவே சீனக் கலாச்சாரப் புரட்சி குறித்து 3 தொகுப்புகளாக ஒரு புத்தகத்தை எழுதினார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு வயது கிடையாது. எண்பதுகளில், தொண்ணூறுகளில்கூட உடல் ஒத்துழைத்தால் பணிபுரியலாம். அவர்கள் கற்றுத்தரும் பாடங்களில் வெகுவாக மாற்றங்கள் ஏற்பட்டு, அதில் அவர்களுக்குப் பழக்கம் இல்லையென்றாலும் பாடத்திட்ட மாற்றங்களிலும் ஆசிரியர் பணிக்கான புதிய நியமனங்களிலும் அவர்களுடைய குரல்களுக்கு மதிப்பளிக்கப்படும். அரசியல்வாதிகளைப் போலவே பெரும்பாலான பேராசிரியர்களுக்கும் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதே தெரியாது! ராட் வித்தியாசமானவர். ‘ஏன் இன்னும் போகவில்லை?’ என்று மற்றவர்கள் கேட்பதற்கு முன்னதாக - ‘ஏன் போய்விட்டார்?’ என்று கேட்கும் அளவுக்கு - பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கும் முன்னதாகக் கடைசியாக அவர் நடத்திய ‘அரசியல் தலைமை’ என்ற பாடத்தை மாணவர்கள் அனைவரும் ரசித்துப் பாராட்டினர்.

ஓய்வுபெற்ற பிறகு எப்போதாவது புத்தக விமர்சனங்கள் எழுதுகிறார், கருத்தரங்குகளில் பங்கேற்கிறார், கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பிற கல்வியாளர்கள், அரசியல் தலைவர்களைப் போல பதவி, அந்தஸ்து ஆகியவற்றைப் பிடித்துத் தொங்க விரும்புவதில்லை. மசாசுசெட்ஸின் கேம்பிரிட்ஜில் கடந்த முப்பதாண்டுகளாக வாழ்ந்தார்.

நிறவெறிக்கு முடிவு கட்டிய காந்தியர்

நான் மிகவும் மதிக்கும் இன்னொருவர் ஈ.எஸ்.ஏனுகா ரெட்டி. நெல்லூரில் 1925-ல் பிறந்தார். அன்றைய மதறாஸில் இளங்கலைப் பட்டம் படித்துவிட்டு மேல் படிப்புக்கு நியூயார்க் சென்றார். படித்து முடித்ததும் ஐநாவில் வேலைக்குச் சேர்ந்து தொடர்ந்து 35 ஆண்டுகள் பணிபுரிந்து உதவி தலைமைப் பொதுச் செயலாளர் வரை உயர்ந்தார்.

ஐநாவில் அவருக்குத் தரப்பட்ட பொறுப்புகள் பல. அவற்றில் முக்கியமானது நிறவெறிக் கொள்கைக்கு எதிரான சிறப்புக் குழுவை வழிநடத்திச்சென்றது. ஓய்வுபெற்ற பிறகும் தனிப்பட்ட முறையில் இதற்காக அவர் பாடுபட்டார். நிறவெறி அரசு இறுதியாக ஆட்சியை இழந்ததும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஒரு கதாநாயகருக்கு அளிக்கும் வரவேற்பை அங்குள்ளவர்கள் ரெட்டிக்கு தந்தனர்.

அரசின் உயர் பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. டர்பனைச் சேர்ந்த நிறவெறி எதிர்ப்பாளர் ஒருவரை சில மாதங்களுக்கு முன்னால் மும்பையில் சந்தித்தேன். ரெட்டியின் பெயரைக் குறிப்பிட்டேன். உடனே அவர் எழுந்து நின்று கண்களை மூடி மானசீகமாக அவருக்கு மரியாதை செய்தார்; கண்களில் கண்ணீர் பனித்தது. ரெட்டிக்குக் கிடைத்த ஆலிவர் டாம்போ விருதைவிட அவர் அளித்த மரியாதை பெரிதாகப்பட்டது எனக்கு.

தென்னாப்பிரிக்காவில் பணியாற்றியபோது காந்திஜியின் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் ரெட்டி. சாபர்மதி ஆசிரமத்துக்கு அடுத்தபடியாக – ஏன் அதைவிடக் கூடுதலாக, காந்திஜி குறித்த கட்டுரைகள், கடிதங்கள், தகவல்களைச் சேகரித்துவைத்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர்களுடனும் அவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். பிறர் எழுதிய நூல்களையெல்லாம் ஏராளமாகத் தொகுத்துவைத்திருக்கிறார்.

ரெட்டி, அவருடைய துருக்கிய மனைவியுடன் மன்ஹாட்டனில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்தார். அந்த அம்மையாரும் சாதாரணமானவர் அல்ல, நசீம் ஹிக்மத்தின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். வயதான அவ்விருவரையும் அவருடைய மகள்தான், தான் வசிக்கும் கேம்பிரிட்ஜுக்கே வரவழைத்துப் பார்த்துக்கொள்கிறார். வெஸ்டர்ன் அவென்யுவில் ரெட்டி தம்பதியரைச் சந்தித்து காந்திஜி குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

கடந்த முறை சென்றபோது மெமோரியல் டிரைவில் வசிக்கும் ராட் மெக்பார்க்கரையும் சந்தித்தேன். ‘சொன்ன நேரத்துக்கு வந்த மூன்றாவது இந்தியர் நீங்கள்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் ராட். மற்றவர்கள் - மிகச் சிறந்த தேசபக்தர், நாடாளுமன்றவாதி மினு மசானி, பொருளாதார அறிஞராக இருந்து இந்துத்துவ ஆதரவாளராக மாறிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி!

ஆற்றிய தொண்டுகள்

ராட், ஏனுகா ரெட்டி இருவருக்குமே ஒருவரையொருவர் தெரியாது. இருவருமே எழுத்துலகுக்கும் பொது வாழ்க்கைக்கும் அரிய தொண்டுகளைச் செய்துள்ளனர். பெரிய நிறுவனங்களுக்கு வலுசேர்த்துள்ளனர். திறமைசாலிகளான பல இளைஞர்களை உருவாக்கியுள்ளனர். தாங்கள் பிறந்த நாட்டை மறக்காமல் உள்ளனர். இன்னொரு வெளிநாட்டில் (அமெரிக்கா) இப்போது தங்கியுள்ளனர். தாங்கள் பிறந்த நாட்டில் அல்லாமல் - மூன்றாவது நாடு (சீனா, தென்னாப்பிரிக்கா) குறித்து ஆர்வமாக உழைத்துள்ளனர்.

இருவருமே இளவயதில் அவர்களுடைய படிப்புக்காகவும் ஆற்றலுக்காகவும் புகழப்பட்டனர். பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பதவி, பணம் ஆகியவற்றை நாடாமல் அமைதியாகக் காலத்தைக் கழிக்கின்றனர். நகைச்சுவை உணர்ச்சி மிக்கவர்கள். பெரும்பாலும் தங்களைத் தாங்களே கேலி செய்துகொள்வார்கள். தாராள மனம் கொண்டவர்கள். ரெட்டி தன்னிடமிருந்த அபூர்வமான பொருள்களையும் ஆக்கங்களையும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் நேரு நினைவு அருங்காட்சியகத்துக்கும் நூலகத்துக்கும் நன்கொடையாக அளித்துவிட்டார். சீனம் தொடர்பாகத் தான் சேகரித்த நூல்கள், ஆவணங்கள் அனைத்தையும் இந்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்க ராட் ஆர்வமாக இருக்கிறார்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x