Published : 10 Dec 2018 09:15 AM
Last Updated : 10 Dec 2018 09:15 AM

அரசு அறிவித்துள்ள புயல் நிவாரணம் போதுமானதா?

கஜா புயலால் அழிந்துபட்டுக் கிடக்கும் பயிர்கள் ஒருபுறம். நிவாரண உதவி வழங்கும் விஷயத்தில் நடைமுறை உண்மைகளை அறியாமல் செயல்படும் அரசுகள் மறுபுறம். இவற்றுக்கு நடுவே எதிர்காலம் குறித்த அச்சத்துடனும் விரக்தியுடனும் செய்வதறியாது நிற்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். தமிழக அரசு ரூ.1,400 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இன்னும் போதிய நிதி வரவில்லை. அழிமானத்தின் கணக்குக்கும் அரசின் கணக்குக்கும் ஒருபோதும் பொருத்தம் இருப்பதில்லை. கஜா புயல் பாதிப்பின் கதையும் அதுதான்!

அரசு இதுவரை எடுத்திருக்கும் கணக்கெடுப்பின்படி சுமார் 88,102 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 32,706 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் வாழை, 4,000 ஹெக்டேர் காபி, பயறு, பருத்தி, முந்திரி, பலா மரங்கள், 500 ஹெக்டேர் கரும்பு, 945 ஹெக்டேர் மா மரங்கள் மற்றும் 2,707 ஹெக்டேர் காய்கறிப் பயிர்களும் இதில் அடங்கும் என்கிறது அரசுத் தரப்பு. ஆனால், கள நிலவரத்துடன் ஒப்பிடும்போது பாதிப்பின் வீர்யம் இதைவிடப் பல மடங்கு அதிகம் என்பதை உணர முடிகிறது.

உதாரணமாக, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பேராவூரணியின் எல்லையில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலா, காய்கறிகள் மற்றும் தேக்கு மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றின் சேத மதிப்பு முழுமையாகக் கணக்கிடப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. பல கிராமங்களின் சாலைகளில் மரங்கள் விழுந்துகிடப்பதால் உள்ளே செல்ல முடியாத நிலை. எனவே, அந்தப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அரசு கணக்கிட்டிருக்க முடியாது.

நிவாரணமும் நிதர்சனமும்

தென்னை மரத்துக்கு நிவாரணமாக ரூ.600, வெட்டி அப்புறப்படுத்த ரூ.500 என மொத்தமாக ஒரு மரத்துக்கு ரூ.1,100 வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஹெக்டேரிலுள்ள தென்னை மரங்களுக்கு ரூ.1,92,500 நிவாரணமாகவும், மறுசாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.72,100 வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால், தென்னை விளைச்சலில் கிடைக்கும் வருமானத்தை ஒப்பிட இது மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தென்னை மூலம் ஓராண்டுக்கு ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் வருமானம் ஏறக்குறைய ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என்பதைக் கவனிக்க வேண்டும்.

மத்திய அரசின் விவசாய செலவு மற்றும் விலை ஆணையம் வெளியிட்ட 2013-14 முதல் 2015-16 வரையிலான மூன்று ஆண்டு சராசரிப் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் தென்னை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் லாபம் ரூ.1,19,825 என மதிப்பிடப்பட்டுள்ளது. புயலால் மரங்களை இழந்த விவசாயிகள், மறுசாகுபடிப் பணிகளை உடனே தொடங்கினாலும், அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் வருமானத்தை எட்ட முடியும். அதுவரை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?

உண்மையில், ஒரு ஹெக்டேருக்கு ஏறக்குறைய ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை வழங்குவது சிக்கலான விஷயம்தான் என்றாலும், விவசாயிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீண்டகாலக் கணக்கில் நஷ்டஈடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

கரும்பு, வாழை, நெல், காய்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களும் புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இப்பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடிச் செலவு ரூ.55,570 ஆகும். இதேபோல், சோளம் சாகுபடி செய்ய ரூ.56,572, கரும்பு சாகுபடி செய்ய ரூ.1,27,692, வாழை சாகுபடிச் செலவு ரூ.75,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தமாக 76,388 ஹெக்டேரில் தென்னை, வாழை, கரும்பு ஆகிய மூன்று பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இவை தவிர, கத்தரி(679 ஹெக்டேர்), வெண்டை(398 ஹெக்டேர்), மா(4,900 ஹெக்டேர்), முந்திரி(9,111 ஹெக்டேர்) போன்ற மற்ற பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஒரு வளர்ந்த பலா மரம் ஆண்டுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வருமானம் ஈட்டக்கூடியது. இவற்றையெல்லாம் இழந்து பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.

வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் போன்றோரைக் கொண்டு பயிர்களின் சேத மதிப்பைக் கணக்கிடுகிறது அரசு. சேதத்தைக் கணக்கிடும் குழுக்களில் விவசாயச் செலவு, வருமானம் குறித்த நுணுக்கங்கள் அறிந்த அறிஞர்கள் இடம்பெறுவது அவசியம். சேத மதிப்பை முழுமையாகப் புரிந்துகொண்டு நிவாரண உதவிகளைத் தீர்மானிக்க அவர்கள் சரியாக வழிகாட்டுவார்கள்.

அரசு செய்ய வேண்டியவை

முதல் தேவை மின்சாரம். குறிப்பாக, மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்வது மிகக் கடினமானது எனும் சூழலில், இது மிக அத்தியாவசியம். புயல் அடித்து 20 நாட்கள் ஆன பிறகும் பல இடங்களில் மின் விநியோகம் சீரடையாதது மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் சென்றடைய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் நீர்நிலைகள், ஆறுகள், குளங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து விவசாயிகள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்று, விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, சொட்டுநீர்ப்பாசன வசதிகள், டிராக்டர், விவசாயத் தளவாடங்களை அனைத்து விவசாயிகளுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு அதன் நடப்பு சந்தை மதிப்பீட்டைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவைக் குறைந்தபட்சம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்கள் தொழில் துறை வளர்ச்சி இல்லாதவை. விவசாயமே அங்கு பிரதானம்.

எனவே, நடைமுறை உண்மைகள், கள நிலவரங்களைப் புரிந்துகொண்டு உரிய நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். நமக்கு உணவளித்த கைகள், இன்றைக்கு அரசிடம் உதவியை எதிர்பார்த்து நீளுகின்றன. அரசு அதை அலட்சியம் செய்யக் கூடாது!

- அ.நாராயணமூர்த்தி,

அதிகார உறுப்பினர், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம், டெல்லி.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x