Published : 01 Dec 2018 10:14 AM
Last Updated : 01 Dec 2018 10:14 AM

இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி யார்? - கண்டறிந்த தமிழக மருத்துவர் நிர்மலா

ஒரு மருத்துவ ஆய்வுக்கட்டுரைக்காக அவர் மெனக்கெடாமல் போய் இருந்தால் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட மிகத்தாமதமாகியிருக்கும். இந்தியாவில் எய்ட்ஸ் என்ற கசப்பான உண்மையை வெளிக்கொண்டு வந்த அந்த தருணம் தான் இன்றைக்கு பல தடுப்பு நடவடிக்கைகளுக்கான மூலம். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிர்மலா.  அவர்தான் இந்த பேருண்மையை உலகறியச் செய்தவர்.

1985-ம் ஆண்டு ஹெச்ஐவி - எய்ட்ஸ் பரவலை கண்டறியுமாறு பேராசிரியர் சுனிதி சாலமன் பரிந்துரைத்தபோது சென்னை மருத்துவக்கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை மாணவி நிர்மலா செல்லப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி தெரியாமல் தவித்தார்.

அமெரிக்காவில் எய்ட்ஸ் பற்றிய சோதனையும் கண்காணிப்பும் 1982 -ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்தியாவில் இதுபற்றிய எவ்வித முயற்சியும் 1985-ம் ஆண்டு வரை எடுக்கப்படவில்லை. ஒருவேளை எய்ட்ஸ் இந்தியாவில் பரவி இருந்தால், இதுவரை ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற விமர்சனத்தை தவிர்க்கவே சுகாதாரத்துறை அதிகாரிகள் எஸ்ட்ஸ் குறித்த முன்னெடுப்புகளை தவிர்த்தனர் என கூறப்பட்டது.

பாலியல் உறவு சுதந்திரமும் ஓரினச்சேர்க்கையும் அதிகமாக இருந்த மேற்குலக நாடுகளின் ஒழுக்கக் கேடுகளால் உருவானதே இந்த நோய் என அர்த்தம் கற்பிக்கப்பட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற  பாரம்பரியமும் கடவுளுக்கு அஞ்சுவதும் உள்ள இந்தியாவில் எச்ஐவிக்கு இடமில்லை என அவர் வாதிட்டனர்.

ஒழுக்கக்கேடு நிறைந்த நகரமாக கருதப்பட்ட மும்பையில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகளின் சோதனைகளில் எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறியே இல்லை.

இந்த பின்னணியில், நிர்மலா இது போன்ற மருத்துவ சோதனை அவசியமா என ஆரம்பத்தில் தயங்கினார். “ஒரு முயற்சியை மேற்கொண்டுதான் பார்க்கலாமே” என சுனில் சாலமன் நிர்மலாவை ஊக்கப்படுத்தினார்.

nirmalajpg

ஹெச்ஐவி அல்லது எய்ட்ஸ் பற்றி எதுவும் தெரியாத நிலையில்,  களமிறங்கினார் நிர்மலா. மும்பை போல சென்னையில் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதற்கான குறிப்பான இடங்கள் என எதுவும் இல்லை. எனவே, பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு நிர்மலா அடிக்கடி செல்லத் தொடங்கினார்.

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரின் பழக்கம் கிடைத்தது. அவர்கள் மூலம் மேலும் சில பாலியல் தொழிலாளர்களும் அறிமுகமாயினர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு இல்லங்களுக்கு (விஜிலன்ஸ் ஹோம்) சென்று வரத் தொடங்கினார்.

மூன்று மாதங்களாக அவர் 80 மாதிரிகளை சேகரித்து இருந்தார். கையுறையோ, பாதுகாப்பு கருவிகளோ எதுவும் இல்லை. நிச்சயம் எச்ஐவி இருக்காது என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். பால்வினை நோய்களுக்காகவே ரத்த மாதிரிகள் நிர்மலா எடுப்பதாக அவர்கள் நினைத்தனர்.

பின்னர் சிறியதொரு நடமாடும் ஆய்வகத்தை நிர்மலா உருவாக்கினார்.  சென்னையில் எலிசா பரிசோதனை இல்லை. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஐஸ் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு சென்றார்.

அங்கு நடந்த சோதனையில்தான் அந்த அதிர்ச்சி முடிவுகள் வெளிவந்தன. ஆமாம். 6 பேருக்கு எச்ஐவி உறுதிப்படுத்தப்பட்டது. முதன்முதலில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எச்ஐவியின் கிருமி கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி நிர்மலாவுக்கு மட்டுமே தெரியும்.

சென்னை திரும்பிய அவர் இதுகுறித்து சுனிதி சாலமனிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த மருத்துவக் குழு மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரித்தது. அமெரிக்காவின் மேற்கு போல்டில் நடை பெற்ற பரிசோதனையிலும் ஹெச்ஐவி தொற்று இந்தியாவை தொட்டுவிட்டதை உறுதி செய்தனர். இந்தத் தகவல் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச். வி. ஹண்டேவுக்கும் இச்செய்தியை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்தது.

இந்த சோதனை என்பது சிறிய அளவிலானது. நாம் உடனடியாக இறங்கி வேலை செய்தாக வேண்டும் எனபதை  இந்திய மருத்துவ ஆய்வகப் பேரவை உணர்ந்தது. பெரிய அளவில் பரிசோதனை மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்டங்களை ஆட்சியாளர்கள் செயல்படுத்த தொடங்கினர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எச்ஐவி-எய்ட்ஸ் இந்தியாவில் விரைவாக நாட்டின் எல்லா மூலைகளிலும் பரவிய நோயாக மாறிவிட்டது.

எச்ஐவியை கண்டுணர்ந்த மருத்துவர் நிர்மலா தனது அடுத்தடுத்து தனது பணியைத் தொடர்ந்தார். 1987-ம் ஆண்டு "தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு" என்ற தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் சென்னையில் இருக்கும் கிங் தடுப்பு மருந்து நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்புத் திட்டத்தில் இணைந்தார். அதிலிருந்து 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்த 31 ஆண்டுகளில் எச்ஐவி எச்சரிக்கை மணியை அடித்த நிர்மலாவை யாரும் இப்போது நினைவில் வைத்திருக்கவில்லை. மிகப்பெரிய சாதனைக்கான அங்கீகாரம் கூட நிர்மலாவுக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டால், “நான் ஒரு கிராமத்துப் பெண். இதற்கெல்லாம் மனம் நொந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நான் சமூகத்துக்காக என்னால் முடிந்தவரை ஏதோ செய்திருக்கிறேன்" என  நிறைவான பதிலை தருகிறார் நிர்மலா.

1. உலகளவில் 3 கோடியே 7 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி 21.40 லட்சம் பேர். இதில் 8 லட்சம் பேர் பெண்கள்.

3. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 87,580 பேர் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்கள்.

4. 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1.20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ஆசியாவில் இந்தியாவில்தான் இது அதிகம்.

5. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானில் 5,800 பேரும் நேபாளத்தில் 1,600 பேரும் வங்கதேசத்தில் ஆயிரத்துக்கும் குறைவாகவும் வாழ்கின்றனர்.

6. தமிழகத்தில் மட்டும் 1.18 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள்.

7. ஐநா-வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லா உலகைக் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

8. 2020-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் பாதிப்பு விகிதத்தை 75 சதவீதமாக குறைக்க நடவடிக்கை.

9. இந்த ஆண்டின் மைய கருத்து “எச்ஐவி பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்ஐவி தடுப்பு பற்றி உங்கள் நிலையை அறியவும்” என்பதாகும்.

- தொகுப்பு: பா.அசோக், சி.கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x