Last Updated : 27 Nov, 2018 10:01 AM

 

Published : 27 Nov 2018 10:01 AM
Last Updated : 27 Nov 2018 10:01 AM

மரங்களையும் கால்நடைகளையும் பாதுகாக்கச் சில வழிகள்

கஜா புயலின் காரணமாக லட்சக்கணக்கில் மரங்களையும் ஏராளமான கால்நடைகளையும் இழந்து நிற்பவர்களின் வேதனை சொல்லி மாளாது. உண்மையில், மரங்களையும் கால்நடைகளையும் புயலிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் நம்மிடம் உண்டு. இன்றைக்கு நம்மில் பலர் மறந்திருக்கலாம். ஆனால், நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள்தான் அவை. இனி, ஒரு பேரிடர் நேர்ந்தால் நம் மரங்களையும் கால்நடைகளையும் காக்கும் வகையில் அந்த வழிமுறைகளை நினைவுபடுத்திக்கொள்வோம்!

மரங்களை அரக்கிப் பாதுகாக்கலாம்

மரங்களைக் காப்பாற்றுவதற்கு மிக எளிய வழி உண்டு. சாலைகளிலோ தோட்டங்களிலோ இருக்கும் பெரிய மரங்களின் கிளைகளை (இலைகள் இருக்கும் சிறிய கிளைகளை) வெட்டிவிட வேண்டும். இலை, தழை இல்லாத மரத்தின் மீது வேகமாக வீசும் காற்றின் அழுத்தம், மரத்தைப் பலமாகத் தாக்காமல் தழுவிச் செல்ல உதவும். மரம் வேரோடு சாயாது. காற்றுக் காலங்களிலும் பெருமழைக் காலங்களிலும் கிராமங்களில் முன்பு இந்த முறையைத்தான் பயன்படுத்துவார்கள். கிளைகளை ‘அரக்கிவிடுதல்’ என்று இதைச் சொல்வார்கள். தென்னையில்கூட குறுத்தோலைப் பகுதியை விட்டுவிட்டு மற்ற மட்டைப் பகுதிகளை வெட்டிவிடுவார்கள். இதன் மூலம் தென்னை மரங்களையும் காக்க முடியும்.

தென்னை ஓலைகள் காற்றின் வேகத்தில் ஒரு பக்கமாகக் குவித்து இழுத்துத் தள்ளப்படும்போதுதான் தென்னைகள் விழுந்துவிடுகின்றன. புயல் பாதிப்புகளின்போது ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். முழுக்க ஓலைகளுடன் விழுந்துகிடக்கும் மரங்களுக்கு மத்தியில், ஓலைகள் இல்லாத தென்னைகள் நின்றுகொண்டிருக்கும். தலைப் பகுதியில் காற்றின் தாக்கம் குறைவாக இருந்ததால் தப்பித்த தென்னைகள் அவை. மழைக் காலங்களில் இலைகளில் தேங்கும் நீரால்தான் பாரம் தாங்காமல் ஈரநிலத்தில் பிடிமானம் இழந்து பல மரங்கள் விழுந்துவிடுகின்றன. அதுவும் புயலுடன் கூடிய மழை என்றால், இதுபோன்ற மிகப் பெருமளவிலான மரங்களை வேரோடு சாய்த்துப் போட்டுவிடுகின்றன. இந்த வழிமுறையைக் கையாண்டால் நிச்சயம் சேதங்களைக் குறைக்க முடியும். தென்னை மரங்கள் முறிந்துபோனதை விட்டுவிட்டு, வேரோடு சாய்ந்தவற்றைக் கயிறுகட்டி நிமிர்த்தி மீண்டும் வைக்கலாம். இப்படி இழுத்து வைத்து அது மீண்டும் காய்த்துக்கொட்டியதை நான் பார்த்திருக் கிறேன்.

கால்நடைகளைக் காக்கும் கட்டுமானம்

கால்நடைகள்தான் விவசாயிகளின், ஏழைக் குடியானவர்களின் செல்வங்கள். அத்தகைய வாழ்வாதாரச் செல்வங்களை இழந்துநிற்பது கொடுமை. புயல் காலங்களில் மணல் மூட்டைகள், பனை மரத் தூண்களை வைத்து எளிமையான கட்டுமானத்தை உருவாக்கலாம். கால்நடைகள் அதில் பத்திரமாக இருக்கும். மணல் மூட்டைகளை இரண்டு வரிசைகளாகப் போட்டு ஒரு 10 அடி உயரம் (வரைபடத்தில் காட்டியபடி) அடுக்க வேண்டும். சற்று வளைவாகக் காற்று வீசும் பக்கத்தைப் பார்த்தவாறு அரண்போல் இதை எழுப்ப வேண்டும். காற்று திசை மாறக்கூடும் என்பதால், அதைச் சமாளிக்க இரண்டு பக்கமும் சற்று வளைத்து அடுக்கலாம். பின்னர், பனை மரத் தூண்களை வைத்து ஒரு கொட்டகை அமைக்கலாம்.

கால்நடைகளை அந்தக் கொட்டகைக்குள் அடைத்துவிட வேணடும். அருகில் மரங்கள் இல்லாத திறந்தவெளியிலோ மழைநீர் தேங்காத மேடான பகுதிகளிலோ இந்த மணல் மூட்டை அரண் கொட்டகையை அமைப்பது நல்லது. அப்படி அமைத்த கொட்டகையின் மணல் மூட்டைகளுக்கு முன் செங்கற்களை அடுக்கி வைத்துவிட வேண்டும். இதைத் தாண்டி காற்று உட்புக முடியாது. கால்நடைகள் பாதுகாப்பாய் இருக்கும். சற்று காற்று திசை மாறி அடித்துக் கூரை போனாலும், கால்நடைகள் தப்பிவிடும். நான்கு, ஐந்து மாடுகளுக்கான கொட்டகையை ஓரிருவரே உருவாக்கிவிட முடியும். ஊர் ஒன்றுகூடினால், நூற்றுக்கணக்கான கால்நடைகளைக் காக்கும் கொட்டகைகளை உருவாக்கலாம்.

இன்றைக்கு, புயல் உருவான உடனேயே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் நம்மை வந்தடை கின்றன. எனவே, போதுமான அவகாசம் கிடைக்கிறது. பருவமழை காலங்களின்போது தயார்நிலையில் இருந்தால், இதுபோன்ற ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவிடலாம். நமது செல்வங்களைக் காக்கலாம்!

- பத்மவாசன், ஓவியர்.

தொடர்புக்கு: rajeswaripadmavasan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x