Last Updated : 24 Oct, 2018 09:51 AM

 

Published : 24 Oct 2018 09:51 AM
Last Updated : 24 Oct 2018 09:51 AM

சாதியமைப்பின் புதிய வடிவம்!

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, சாதியமைப்பின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். எனினும், கேள்விகள் இன்னமும் இருக்கின்றன. அது உண்மையிலேயே சமூகப் படிநிலை இல்லாத நிலையின் பிரதிபலிப்பா? சாதியமைப்பு உண்மையிலேயே துடைத்தெறியப்படுகிறது என்று நாம் கருதிவிட முடியுமா?

அப்படி இல்லை என்பதுதான் துயரம்!

இந்திய மனங்களில் சாதி மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இது தொடர்பான பொதுக் கருத்துகளுக்கு மாறாக, இந்தியாவின் பல பகுதிகளில் அது இன்னமும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் எனும் முறையில், சமூகப் படிநிலைகளில் சாதி எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதை என்னால் சொல்ல முடியும். வெளிப்பார்வைக்குத் தெரியாவிட்டாலும், மறைமுக வடிவில் சாதி தன் ஆதிக்கத்தைத் தொடரவே செய்கிறது. மேலும், இன்றைய யுகத்தில், மாற்றியமைக்கப்பட்ட, நியாயப்படுத்தக்கூடியது என்று போலியாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு புதிய வடிவத்திலும் அது நம்மிடம் வருகிறது. அந்தப் புதிய வடிவம் சாதியமைப்பு வெர்ஷன் 2. அதாவது ‘சமூகம்’!

சாதியின் இடத்தில் சமூகம்

குறிப்பிட்ட குணாதிசயங்களைப் பொதுவாகக் கொண்ட மக்கள் குழு, ஒரு சமூகம் என்ற சொல்லில் வரையறுக்கப்படுகிறது. நவீன யுகத்தில், ‘சாதி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்துவது புருவங்களை உயர்த்தலாம், சில தருணங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தலாம். நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, ‘சமூகம்’ எனும் சொல், சிறப்பான மாற்றாக இருக்கிறது. ஆனால், அது வெறுமனே பாதுகாப்பான பதம் மட்டுமல்ல. அது, நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு வார்த்தை. குறிப்பாக, பாரபட்சம் எனும் விஷயத்தை உள்ளடக்காத ஒரு வார்த்தை. சமூகப் படிநிலையில் அது நேரடியாகத் தலையிடுவதில்லை; சாதியமைப்பை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதிக்க வேண்டும் என்று நேரடியாக எதிர்பார்ப்பதும் இல்லை. எனினும், கூர்ந்து கவனிக்கும்போது வர்க்கப் பிரிவுகளை அது மறைமுகமாக ஆதரிப்பது தெரியவரும்.

ஒரு குழுவின் பாரம்பரிய பழக்கங்களைக் காப்பது எனும் காரணத்தின் அடிப்படையில் நவீன ‘சமூகம்’ தொடர்வதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது என்பது பாரம்பரிய பழக்கங்கள் எப்படிக் காக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது: ஒரு நாயர், நாயர் சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்துகொள்கிறார். பிராமணர், பிராமணரையே திருமணம் செய்கிறார். செட்டியார், செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவரை மணம் முடிக்கிறார். நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியாகும் திருமணத் தகவல் மைய விளம்பரங்களில், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகள்/மணமகன் தேவை என்று குறிப்பிடப்படுவது சாதாரணமான விஷயம். குறுகிய சிந்தனையின் வெளிப்பாடான இந்த வழக்கம், சமூகத்தின் நற்பெயருக்கு வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கை என்றே சித்தரிக்கப்படுகிறது.

சமூக அமைப்பு எனும் கருத்தாக்கம் ஆபத்தற்றது என்றே பலரும் கருதுகிறார்கள். ஒரு சமூகம் தனது பாரம்பரிய பழக்கங்களைப் பாதுகாப்பதற்காகவே, கலாச்சாரரீதியாகத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறது என்றும் சொல்லப்படுகிறது. சமூக அமைப்பு என்பது நேரடியாகப் பாரபட்சம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுவதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்படுகிறது.

ஆனால், வருத்தத்துக்குரிய விஷயம் இந்தச் சமூகங்கள் தங்கள் பாரம்பரிய பழக்கங்களைக் காக்க விரும்புகின்றன என்பதல்ல மாறாக, ஒருகாலத்தில் சமூகப் பாரபட்சத்தையும் ஆதிக்க உணர்வையும் உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பழக்கங்களைக் காக்க விரும்புகின்றன என்பதுதான். முக்கியமாக, அது தன்னுடைய சாதியே உயர்வானது எனும் பெருமித உணர்வையும் தன்னுள் வைத்திருக்கிறது.

ஆதிக்கத்தின் புள்ளி

இந்தச் சுயநலப் பார்வையில்தான் பிரச்சினை இருக்கிறது. இப்படிக் கற்பித்துக்கொள்ளப்படும் மேலாதிக்க உணர்விலிருந்து உருவாகும் பெருமிதம், மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏனெனில், ஒருவர் மற்றவரை விட உயர்வானவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அடுத்தவரைச் சமமாகப் பார்க்கும் பார்வை சாத்தியமில்லை.

இந்த இடத்தில் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். பாரம்பரியம் என்பதன் நோக்கம்தான் என்ன? சரி, பண்டைய விழுமியங்கள் முன்னோர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்படுவது என்று கருதப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அது மட்டும்தான் விஷயமா? நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதற்காக நாமும் கண்மூடித்தனமாக அந்தப் பாரம்பரியங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது சரியா?

பொறுப்புணர்வு, பகுத்தறிவு அடிப்படையிலான ஒரு பாரம்பரியத்தை உருவாக்கத் தவறுவது என்பது இந்தியாவில் அரிதான விஷயமல்ல. பண்டைய பழக்கங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்ப மறுக்கும் நாம், ‘நம் முன்னோர்கள் செய்தார்கள். எனவே, நாமும் அதைச் செய்கிறோம்’ என்ற எளிய பதிலுடன், அதைத் தொடர்கிறோம். பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பதற்கு விலையாக, கலாச்சாரரீதியாக நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் நாம் உணரத் தவறும் விஷயம். உண்மையில், வலுவான ஒரு இந்திய அலகை உருவாக்குவதற்குப் பதிலாக, மேலும் அதிகமான வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் பிரிவுகளைத்தான் நாம் உருவாக்குகிறோம்.

யார் தீண்டத்தகாதவர்கள்?

சாதியமைப்பு மாறிவரும் நிலையில், தீண்டாமை எனும் கருத்தாக்கத்தை நாம் மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த முறை, ஒருவர் பிறப்பை வைத்தோ பொருளாதார நிலைமையை வைத்தோ தீண்டத்தகாதவர் என்று கருதப்பட மாட்டார். மாறாக, இது விருப்பம் சார்ந்ததாக இருக்கும். சமூகம் எனும் பெயரில் பிற மக்களிடமிருந்து தனிமைப்பட்டுக் கிடப்பவர்கள்தான் உண்மையான தீண்டத்தகாதவர்கள். தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்துகொண்டே, பாரம்பரியத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள். அவமானத்துக்குரிய சமூகப் படிநிலையை இன்னமும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ பின்பற்ற நினைப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள்.

பொருளாதார, சமூகச் செழுமைக்கான கதவுகளைத் தாண்ட முயலும் இந்தத் தருணத்தில், அதற்கு இடையூறான வகையில் பிளவுற்ற இந்தியக் கூட்டத்தைக் கொண்டிருப்பது இன்னும் இடையூறானது. பாலியல்ரீதியான வன்முறை தொடங்கி மதச்சார்பின்மை வரை நமது ஒருமித்த கவனத்தைக் கோரும் பல்வேறு பிரச்சினைகள் இன்றைக்கு நம்மிடையே உள்ளன. தீய நோக்கம் கொண்ட சமூக அமைப்புகள் பிளவுற்ற மக்கள் கூட்டத்தையே உருவாக்கும். கற்பனையான மேலாதிக்கத்தின் பேரில் அவை, நம்மைப் பிளவுபடுத்திவிட்டன என்பதுதான் துயரம்!

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x