Published : 18 Oct 2018 10:52 AM
Last Updated : 18 Oct 2018 10:52 AM

வெல்லும் அறம்!

ஜேஎன் டாடா அறக்கட்டளை: தொடக்கம் 1892

இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்க கடன் உதவித்தொகை அளிக்கத் தொடங்கப்பட்ட நிறுவனம். ஆண்டுக்கு 120 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். கல்வியில் சிறப்பாகச் சாதனை புரியும் அறக்கட்டளை மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. பேராசிரியர் சோரப் காந்தி, ஓ.பி.தாண்டன், டாக்டர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், டாக்டர் ஜே.ஜே.இரானி, டாக்டர் எஸ்.ரங்கநாதன், டாக்டர் ரமேஷ் நடராஜன், டாக்டர் சுந்தர் குமார் ஐயர் உள்ளிட்ட பலர் இவ்விதம் பலன் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு: தொடக்கம் 1911

ஜேஆர்டி டாடா தனது சொத்துக்களை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய நிறுவனம். 1893 கப்பல் பயணத்தில் தற்செயலாக சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த ஜாம்ஷெட்ஜி டாடா, அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான அவருடைய கருத்தால் ஈர்க்கப்பட்டு, அறிவியல் கழகத்தைத் தொடங்க இடம் தேர்வுசெய்து தருமாறு சர் வில்லியம் ராம்சேயைக் கேட்டார். அவர் பெங்களூரு நகரைக் காட்டினார். மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் 370 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். ஹைதராபாத் நிஜாம் ரூ. 3 லட்சம் நன்கொடை வழங்கினார். இப்படி நடந்த கைங்கரியத்தில் ஜேஆர்டி டாடா ஏழு பெரிய கட்டிடங்களைக் கட்டினார். இப்போது ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். 40 அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் கல்வியும் ஆராய்ச்சிக்கு வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

டாடா நினைவு மருத்துவமனை, மும்பை: தொடக்கம் 1941

நாட்டின் முதல் புற்றுநோய் மருத்துவமனை. நோய்த்தடுப்பு, சிகிச்சை, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி என்று புற்றுநோய் சிகிச்சையில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1957-ல் மத்திய அரசின் சுகாதாரத் துறை இந்த மருத்துவமனையை ஏற்று நடத்த ஆரம்பித்தது. அரசின் மருத்துவச் செயல்திட்டங்களுக்கு தனியார் துறை ஒரு முன்னோடியாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்த மருத்துவமனை

டாடா மருத்துவ மையம், கொல்கத்தா: தொடக்கம் 2011

பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் மருத்துவ நம்பிக்கை. புற்றுநோய், இதய நோய், கண் சிகிச்சை என எதுவென்றாலும் தென்னிந்தியாவுக்குத்தான் வர வேண்டும் என்றிருந்த நிலை மாறியிருக்கிறது. 200 முழு நேர மருத்துவர்கள், 320 செவிலியர்கள், உலகத்தரமான சிகிச்சை. இதுவரை 1.6 லட்சம் பேர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

ஆயிரம் பள்ளிகள் திட்டம்: தொடக்கம் 2017

ஒடிஷாவில் கலிங்காநகர் பகுதியில் ஆயிரம் பள்ளிகள் என்ற திட்டத்தை டாடா அறக்கட்டளைகள் தொடங்கியுள்ளன. ஜாம்ஷெட்பூர்-கலிங்காநகர் இடையேயான 260 கி.மீ. தொழிற்பேட்டைப் பகுதியில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும், குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக 30 மாதிரிப் பள்ளிகளையும் டாடா குழுமம் தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x