Last Updated : 18 Oct, 2018 10:42 AM

 

Published : 18 Oct 2018 10:42 AM
Last Updated : 18 Oct 2018 10:42 AM

ஐந்து டாடாக்களும் ஒன்றரை நூற்றாண்டு வெற்றி வரலாறும்!

இந்தியாவின் முன்னோடித் தொழில் நிறுவனமான டாடா குழுமம் தன்னுடைய வரலாற்று மகுடத்தில் மேலும் ஒரு இறகைச் சூடிக்கொள்கிறது. அந்தக் குழுமத்துக்கு இது நூற்றைம்பதாவது ஆண்டு. இந்த ஒன்றரை நூற்றாண்டில் ஆறு தலைவர்களைப் பார்த்திருக்கிறது டாடா குழுமம். இவர்களில் ஐந்து டாடாக்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களில் மூவர் பிரிட்டிஷ் அரசால் ‘சர்’ பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டவர்கள். ஒருவர்  இந்திய அரசால் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்தியாவில் ஏராளமான தொழில் குழுமங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றில் வேறெதற்கும் இப்படிப்பட்ட பெருமை ஏற்பட்டதில்லை. டாடா நிறுவன வரலாற்றைப் படிக்கும் முறையிலேயே சுவாரஸ்யமானது, டாடாக்கள் வரலாற்றின் வழியே அதன் வரலாற்றைப் படிப்பதுதான். படிப்போம்.

ஜாம்ஷெட்ஜி டாடா

நாக்பூரில் 1877-ல் டாடா நிறுவனத்துக்கு விதை போட்டவர் ஜாம்ஷெட்ஜி நுஸர்வாஞ்சி டாடா. பார்சி சமூகத்தைச் சேந்தவர் இவர். ‘எம்பரஸ் மில்ஸ்’ (மகாராணியார் ஆலை) என்ற பெயரில் அவரால் முதலில் தொடங்கப்பட்டது ஒரு ஜவுளி ஆலை. ‘சென்ட்ரல் இந்தியா ஸ்பின்னிங், வீவிங், மேனுஃபேக்சரிங் கம்பெனி லிமிடெட்’ என்ற பெயரில் 1874-ல் அது பதிவுசெய்யப்பட்டது. அதற்கும் முன்னதாக வர்த்தக நிறுவனம் ஒன்றையும் இவர் 1868-ல் தொடங்கியிருந்தார். அங்கிருந்தே கதை தொடங்கிவிடுகிறது.

நாக்பூர் ஆலையைத் தொடங்குகையிலேயே தொழிலாளர் நலன் என்பது ஜாம்ஷெட்ஜியின் பிரதான அக்கறையாக இருந்தது. முன்னதாக, பிரிட்டனுக்குச் சென்று அங்கு லங்காஷையரில் ஜவுளி ஆலைகள் எப்படி இயங்குகின்றன என்று பார்த்து வந்தவர், பிரிட்டனில் ஈர நிலத்து ஆலையில் தொழிலாளர்கள் பட்ட துயரம் இந்தியத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பெரும் கவனமாக இருந்தார். ஆலைக்குள் போதிய காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் கட்டிடத்தைக் கட்டச் செய்தார். ஆலைக்குள் காற்றின் ஈரப்பதத்தை ஏற்ற வகையில் பராமரிக்கக் கருவியைப் பொருத்தச்செய்தார். பருத்தியும் பஞ்சும் இருக்கும் இடம் என்பதால் திடீரென்று தீப்பற்றி தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஆலைக்குள் நீர்த்தெளிப்புக் குழாய்களைப் பதிக்கச் செய்தார்.

தொழிலாளர்கள் தரப்பில் கேட்காமலேயே, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை அமலாக்கினார். விபத்தில் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிதியளிக்க தனி நிதியத்தையும் உருவாக்கினார். நாக்பூர் ஆலை நன்கு செயல்படத் தொடங்கி வருமானம் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பம்பாய் வந்த ஜாம்ஷெட்ஜி மனை, நிலம் என்று சொத்துகளை வாங்கினார். இந்தியத் தொழில் துறையை வளர்க்க உதவியாகப் பல திட்டங்களைத் தீட்டினார்.

அடுத்த அவருடைய பெருமுயற்சி நீர்மின் திட்டம். அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் நீர்மின் திட்டம் செயல்படுவதைப் பார்த்தவர் இந்தியாவிலும் நீர்மின் உற்பத்தியைக் கனவுகண்டார். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக மழைப்பொழிவைப் பெறும் லோனாவாலா, கண்டலா ஆகிய இடங்களில் ‘டாடா ஹைட்ரோ எலெக்ட்ரிக் சப்ளை கம்பெனி’ என்ற பெயரில் மின்உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாம்ஷெட்ஜியின் அடுத்த பெரும் முயற்சி, இரும்பு உருக்காலையை டாடா குழுமம் நிறுவியது. ஜாம்ஷெட்ஜி தன் ஆலையைத் தொடங்கிய இடத்தில் இன்று ஒரு தொழில் நகரமே அவர் பெயரில் – ஜாம்ஷெட்பூர் – நிற்கிறது. இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஜாம்ஷெட்ஜி அந்த உருக்காலையை நிறுவும்போது, மிகவும் வேகமாக வளரும் மரங்களைப் புதிய இடத்தில் ஏராளமாக நட்டு வளர்க்குமாறு கடிதம் மூலம் தன் மகனிடம் கேட்டுக்கொண்டதுதான். ஜாம்ஷெட்பூரில் அப்படி வளர்க்கப்பட்ட மரங்கள் விரிந்து இப்போது தாவரவியல் பூங்காவே அங்கு விரிந்திருக்கிறது.

தோரப்ஜி டாடா

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் தோரப்ஜி டாடா. இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயின்றார். ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட, அடிக்கல் இட்ட பல பணிகளை நிறைவுசெய்த பெருமை இவருக்கு உண்டு. பாண்டிச்சேரியில் ஜவுளி ஆலையை நிறுவுவதுதான் ஜாம்ஷெட்ஜி இவரிடம் ஒப்படைத்த முதல் பணி. அடுத்து, நாக்பூரில் எம்ப்ரஸ் மில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம், உருக்காலைத் திட்டம் இரண்டையும் இவர்தான் நிறைவேற்றினார். வளர்ந்துவரும் பம்பாய் மாநகர மின் தேவையை அது வெகுவாக ஈடுசெய்ததோடு, பம்பாய் தொழில் வளர்ச்சி காணவும் முக்கியப் பங்கு வகித்தது நீர்மின் திட்டம். ஜாம்ஷெட்பூர் உருக்காலை இன்றளவும் டாடாவை இரும்பு உற்பத்தித் துறையில் முதலிடத்தில் வைத்திருக்கிறது.

தனது 38 வயதில்தான் திருமணம் செய்துகொண்டார் தோரப்ஜி. குழந்தைகள் இல்லை. இவருடைய தனித்த முன்னெடுப்புகளில் முக்கியமானது, ரத்தப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம், புற்றுநோய் மருத்துவமனை இரண்டையும் நிறுவியது. புற்றுநோய் சார்ந்து, இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் உயர் நிறுவனங்கள் இவை. தன்னுடைய நேசத்துக்குரிய மனைவியை தோரப்ஜி ரத்தப் புற்றுநோய்க்குப் பறிகொடுக்க நேர்ந்தது முக்கியமான காரணம் என்றாலும், எதிர்காலத்தில் பிறருக்கு அந்நிலை உருவாகக் கூடாது என்ற நல்லெண்ணம் டாடா குடும்பத்தின் பாரம்பரியத் தொடர்ச்சி.

நவ்ரோஜி சக்லத்வாலா டாடா

தாய்வழி உறவில் வந்த இவர், 1932-ல் டாடா குழுமத் தலைவர் ஆனார். தோரப்ஜிக்குப் பின் குறுகிய காலமே பதவியில் இருந்தவர் என்றாலும், டாடா குழுமத்தை ஒரு முக்கியமான காலகட்டத்தில் முன்னோக்கிச் செலுத்தியவர். உலகப் போர் சமயத்தில் டாடா நிறுவனத்தை உறுதியாகக் காத்திட்டது இவருடைய முக்கியமான பங்களிப்பு. இன்னொருபுறம் சுதந்திரக் கனவில் பயணித்துக்கொண்டிருந்த இந்திய தேசியவாதத்துக்கு சுதேசி தொழில் துறை சார்ந்த நம்பிக்கைகளையும் அவர் வலுப்படுத்தினார்.

டாடா நிறுவனத்தில் அதிகமாக நேசிக்கப்பட்ட முதலாளி என்ற பெயரும் இவருக்கு உண்டு. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தால், நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான சூழலை உருவாக்குவது; லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு அளிப்பது; கடைநிலை ஊழியர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ப நிறுவனத்துக்குள்ளே இருந்த ஊதிய வேறுபாட்டைக் களைவது என்று தொழிலாளர் நலனில் பெரும் அக்கறை காட்டியவர் இவர். டாடா குழுமத்தின் அனைத்து அலுவலகங்களிலும் தொழிலாளர்கள் விளையாடத் தனி அறைகளும் பொழுதுபோக்கு மன்றங்களும் இவர் காலத்திலேயே உருவாக்கப்பட்டன.

ஜேஆர்டி டாடா

டாடா குழுமத் தலைவர் பதவியில் அதிக காலம் – 53 ஆண்டுகள் (1938-1991) இருந்தவர். உலகப் போர், இந்திய விடுதலைப் போராட்டம், பிரிவினை, சுதந்திரம், புதிதாக உருவான நாட்டின் கலப்புப் பொருளாதார யுகம் என்று உலகமயமாக்கம் வரை ஒரு பெரும் வரலாற்றுப் போக்கில் களமாடியவர் என்பதோடு, நிறையச் சாதனைகளையும் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் ஜேஆர்டி என்றழைக்கப்பட்ட ஜகாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா. பொறுப்பேற்கும்போது 14 நிறுவனங்களாக இருந்த டாடா குழும நிறுவனங்களின் எண்ணிக்கையை 95 ஆக உயர்த்தியவர் இவர். தன்னுடைய குழுமத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு அவர் நின்றுவிடவில்லை. இந்தியாவின் முதல் அணு மின்சக்தி திட்டம் உருவாக ஹோமி பாபாவுக்குப் பெரிதும் துணைநின்றார். ஹோமி பாபாவின் சகோதரர் ஜாம்ஷெட் பாபா, மும்பை மாநகரில் நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய மையத்தை நிறுவவும் உதவினார். முன்னதாக, தோரப்ஜி டாடா தொடங்கிய புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டி முடித்தவரும் இவரே.

ஜேஆர்டி டாடா என்றாலே அவர் தொடங்கிய ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனத்தை யாராலும் நினைவுகூராமல் இருக்க முடியாது. பிற்காலத்தில் இந்திய அரசு அதை ஏற்று, ‘ஏர்-இந்தியா’ என்று பெயர் மாற்றியது. யாரிடமும் எதையும் பரிசுப் பொருளாக ஏற்பதில்லை என்ற உறுதியோடு வாழ்ந்தார். சுமந்த் மூல்காகர், ரூசி மோடி, அஜித் கேர்கர், தர்பாரி சேத் ஆகியோரைத் தனது நிறுவனத்தில் சேர்த்து, தொழில் நிர்வாகத்தில் பயிற்சி அளித்து, அவர்களைத் தலைசிறந்த நிர்வாகிகளாக உருவாக்கினார். தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய இடைநிலை, மேல்நிலை நிர்வாகிகளுக்குத் தேவைப்பட்ட அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கி நிறுவனத்துக்குள் அதிகாரப் பரவலாக்கலை வளர்த்தெடுத்து, ஒரு கலாச்சாரம் ஆக்கியவர்.

ரத்தன் டாடா

ஜேஆர்டி ஓய்வுக்குப் பிறகு டாடா குழுமத் தலைவராகப் பொறுப்பேற்ற ரத்தன் நவல் டாடா உலகமயமாக்கல் யுகத்துக்கேற்ப டாடா குழுமத்தை வளர்த்தெடுத்தவர். ஒரு பெரும் சவால் காலகட்டத்தை வாய்ப்பாக மாற்றியவர். ரத்தன் டாடா தலைவராகப் பொறுப்பேற்ற அதே காலகட்டத்தில்தான் இந்திய அரசு தாராளமயக் கொள்கையை வரித்துக்கொண்டது. இந்தியா நோக்கிப் படையெடுத்து வந்த பன்னாட்டு நிறுவனங்களின் புதிய போட்டிக்கு முகங்கொடுத்தபடியே இன்னொருபுறம் உலகளாவிய போட்டிக்கு டாடா நிறுவனத்தைத் தயார்படுத்தினார் ரத்தன் டாடா.

சாத்தியங்களைப் புறந்தள்ளி கனவு காண்பவர் ரத்தன் டாடா. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள கனிமச் சுரங்கத்தை விலைக்கு வாங்கினார். ஆண்டுக்கு 25 லட்சம் டன் சோடா ஆஷ் அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. தொடங்கிய நாள் முதல் லாபத்தை மட்டுமே சம்பாதித்துக்கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றானது அது. பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாகுவார் - லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தையும், கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினார். இன்று பிரிட்டனிலும் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக நிற்கிறது டாடா.

மோட்டார் வானகத் துறையில் ரத்தன் டாடாவுக்கு இருந்த உத்வேகமே உலகின் சிறிய காரான நானோ கார் உற்பத்தியை நோக்கி டாடா நிறுவனத்தைத் தள்ளியது. அது பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், சிறிய ரக சரக்கு வாகனங்கள் தயாரிப்பில் இன்று ஒரு பெரிய சாதனை நிகழ அதுவும் காரணமாக அமைந்திருக்கிறது.

ரத்தன் டாடாவின் ஓய்வுக்குப் பின், சைரஸ் பலோன் மிஸ்திரி, அடுத்து என்.சந்திரசேகரன் என்று அடுத்தடுத்த தலைவர்களின் நிர்வாகத்தில் வெற்றி நடைபோடுகிறது டாடா குழுமம். தலைவர்கள், தனி மனிதர்களைத் தாண்டி காலாகாலத்துக்கும் வெற்றியைத் தன்னுள்ளடக்கிச் செல்ல ஒரு நிறுவனத்துக்குப் பெரிய ஆன்மசக்தி ஒன்று எப்போதும் தேவைப்படுகிறது. டாடா நிறுவனத்துக்கு அறம் அந்த ஆன்மசக்தியைத் தருகிறது.

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x