Published : 17 Oct 2018 12:19 PM
Last Updated : 17 Oct 2018 12:19 PM

அடித்தட்டு மக்களையும் சென்றடையட்டும் ‘மீ டூ’ இயக்கம்

பீறிட்டெழுந்துகொண்டிருக்கும் ‘மீ டூ’ இயக்கத்தின் போக்கைப் பார்க்கும்போது, மற்ற இயக்கங்களைப் போல், அதை அத்தனை எளிதாக வரையறுத்துவிட முடியாது என்று தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பகிர வேண்டும் என்று டரானா பர்க் 2006-ல் விடுத்த அழைப்பிலிருந்தும், கறுப்பினப் பெண்ணியத்திலிருந்தும் ‘மீ டூ’ இயக்கத்துக்கான தொடக்கப் புள்ளி உருவானது என்பதை வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.

ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரோஸ் மெகாவெனுக்கு ஆதரவாக, அவரது தோழியும் நடிகையுமான அலிஸா மிலானோ கடந்த ஆண்டு உருவாக்கிய ‘மீ டூ’ எனும் ‘ஹேஷ்டேக்’ ஒரு இணைய இயக்கமாக உருவெடுத்தது. பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை இந்த  ‘ஹேஷ்டேக்’கைப் பயன்படுத்திப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினால், இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தலாம் எனும் நோக்கில் ஒரு பெரிய இயக்கமாக இதை முன்னெடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, அப்படித்தான் நடந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பேச முன்வந்ததும், மெளனத்தைக் கலைப்பது, அவமதிப்பை எதிர்கொள்வது, அவநம்பிக்கையைத் தகர்ப்பது, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, சமூகங்களுக்கு அதிகாரமளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உலக அளவில் விவாதங்களை உருவாக்கியதும் இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்புகள். ஆஸ்கர் விருது நிகழ்ச்சி வரை இதை எடுத்துச் சென்ற டரானா பர்க், செல்வாக்கு மிக்க பெண்களுக்கு மத்தியில் ‘டைம்’ இதழின் அட்டைப் படத்திலும் இதற்காக இடம்பெற்றார். தற்போது, ‘மீ டூ’ இயக்கம் இந்தியாவுக்கும் வந்திருக்கிறது. சந்தேகமின்றி இது மேற்கத்தியக் கருத்தாக்கம் என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேர்களைக் கொண்ட விஷயம் எனும் அடிப்படையில் இந்த இயக்கத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் மண்ணின் இயக்கங்களும், மேற்கத்திய இயக்கங்களும் உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: பாலினம் என்பதையும் தாண்டி, இனம், சாதி, மதம், நிறம், பிராந்தியம், வயது, உடல்ரீதியான குறைபாடுகள், பாலினத் தேர்வுகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்படுகின்றன. பாலியல் துன்புறுத்தல்களின் பாதிப்பை, இனம், சாதி அடிப்படையிலான பிளவுகள் மேலும் தீவிரமடையச் செய்கின்றன. பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பது, உதவி கோருவது, பாதிப்பிலிருந்து மீண்டுவருவது ஆகியவை இனம், சாதி ஆகிய விஷயங்களில் உயர் நிலையில் இருக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சாத்தியமாகிறது. ‘மீ டூ’ கருத்தாக்கத்தில், இந்த விஷயங்களும் எதிரொலிப்பது அவசியம். முக்கியமாக, 83.3 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு நாட்டில், இந்த இயக்கம் அடித்தட்டு வரைக்கும் சென்றடைவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். அது இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கத்தின் வெற்றியை உறுதிசெய்யும். கூடவே ‘#ஹெர் டூ’ என்று பிற பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களைப் பேசும் வகையிலும் தார்மிக ஒற்றுமையுடன் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும்!

-ஷ்ரேயா ஆத்ரே

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x