Last Updated : 17 Oct, 2018 12:16 PM

 

Published : 17 Oct 2018 12:16 PM
Last Updated : 17 Oct 2018 12:16 PM

கரம்சந்த் சிந்திய கண்ணீர்!

‘அன்புள்ள தந்தையே! மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டியெடுத்து அதை விற்றுவிட்டேன். என்னுடைய இந்தக் குற்றம் தங்களுடைய மனதில் எந்த விதமான துன்பத்தை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆயினும், நான் செய்த பாவத்தைத் தங்களிடம் கூறி மன்னிப்புக் கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை ஒவ்வொரு கணமும் என் மனசாட்சி வாட்டி வதைக்கிறது. நான் செய்த குற்றத்துக்காகத் தங்களை நீங்கள் வதைத்துக்கொள்ள வேண்டாம். எந்தத் தண்டனை சரியானது என்று தாங்கள் கருதுகிறீர்களோ அந்தத் தண்டனையையே எனக்குத் தருமாறு உங்களைப் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்’ என்று எழுதப்பட்ட அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்துவிட்டு காந்தியின் தந்தை கரம்சந்த் எதுவும் பேசவில்லை.

எதிரே நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தார் 15 வயது காந்தி. அப்பா ஏதும் தண்டனை கொடுப்பாரோ என்ற அச்சத்தால் ஏற்பட்ட நடுக்கம் அல்ல அது. தன்னுடைய பாவச்செயலை அறிந்துகொண்ட பின் தந்தையின் உள்ளம் என்ன பாடுபடுமோ என்ற எண்ணத்தால் ஏற்பட்ட நடுக்கம் அது. பவுத்திர நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்தவர் கரம்சந்த். தான் செய்த திருட்டுக்கு மன்னிப்பு கேட்டு காந்தி எழுதிய கடிதத்தை அவரது தந்தை கண்ணீர் மல்கப் படித்துப்பார்த்துவிட்டுக் கிழித்துப்போட்டுவிடுகிறார்.

அந்தக் கடிதத்தைப் பின்னாளில் ‘சத்திய சோதனை’யில் காந்தி இப்படி நினைவுகூருகிறார்: “முத்துத் துளிகள்போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக்கொண்டார். நானும் கதறி அழுதேன்.

என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையுமே இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்துவருகிறது. முத்து போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும்.  ‘அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை’ என்று  ஒரு பாடலும் கூறுகிறது.

அஹிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர, வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அஹிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அஹிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகிவிடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கிவிடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.”

கால வரிசைப்படி ‘மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள்’ (Collected Works of Mahatma Gandhi) மொத்தம் 100 தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. முதல் தொகுதியில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் குறிப்பு இந்த நிகழ்வைப் பற்றித்தான் என்பது கூடுதல் சிறப்பு: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்பு கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்கு தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்துக்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி திருடுவது இல்லை என்றும் நான் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.”

நேர்மை என்ற விஷயம் காந்திக்கு மிகச் சிறிய வயதிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அவரது பெரும்பாலான நற்பண்புகள் தாய் புத்லிபாயால் ஊட்டப்பட்டவை. சிறு வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொய் பேசக் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அந்த நாடகம் அவருக்குள் மிகமிக ஆழமாக ஊன்றியது.

காப்பியடிக்கத் தெரியாத அசட்டுத்தனம்

காந்தியின் பள்ளிக்கு ஒருமுறை கல்வி ஆய்வாளர் வருகிறார். மாணவர்களிடம் ஆங்கிலச் சொற்களை எழுதச்சொல்கிறார். நான்கு சொற்களைச் சரியாக எழுதிவிட்ட காந்தி ‘Kettle’ என்ற சொல்லை மட்டும் பிழையாக எழுதிவிடுகிறார். காவல் ஆய்வாளருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஆசிரியர், காந்தியை அவரது பக்கத்துப் பையனைப் பார்த்து எழுதுமாறு சைகை காட்டுகிறார். காந்தியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்து காப்பியடிக்காமல் பார்த்துக்கொள்வதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அவ்வார்த்தையின் எழுத்துகளைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர, மற்ற எல்லாப் பிள்ளைகளும் அவ்வார்த்தையைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்துவிட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும்படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பியடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை” என்று பின்னாளில் கூறுகிறார் காந்தி.

நேர்மையாக இருப்பதில் இழப்புகளோ அவமானமோ ஏற்பட்டாலும் நாம் நேர்மையாக நடந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சி காந்திக்குச் சிறு வயதிலேயே இருந்திருக்கிறது. காந்தி பெரியவரானதும், தனது நேர்மையைக் குறித்து மகிழ்ச்சி கொண்டதில்லை. இயல்பான கடமையைச் செய்வதில் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற உணர்வுதான் அது.

எதிராளியிடமும் நேர்மை

காந்தியின் அஹிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

அப்பாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியது, காப்பி அடிக்க மறுத்தது போன்றவற்றின் எதிரொலியைப் பின்னாளில் காந்தியின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் காணலாம். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு காந்தி கலந்துகொண்ட முதல் போராட்டம் ‘சம்பாரண் போராட்டம்’. பிஹாரில் உள்ள அவுரி விவசாயிகளுக்கான போராட்டம் அது. காந்திக்கு ஆதரவான உணர்வு கொண்ட அரசு ஊழியர் ஒருவர் அரசாங்கத்துக்குத் தான் எழுதிய அறிக்கையின் நகலொன்றை அப்போது காந்தியின் போராட்டக் களத்தில் இருந்த சகாவான ராஜேந்திர பிரசாத்திடம் ரகசியமாகக் கொடுக்கிறார். அந்த அறிக்கை காந்தியிடம் கொண்டுவந்து காட்டப்படுகிறது. திருட்டுத்தனமாகப் பெறப்பட்டது என்று கூறி அந்த அறிக்கையை காந்தி ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

அதேபோல், சம்பாரண் கலெக்டர் காந்தியைக் கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் அனுப்புகிறார். அனுப்பிய பிறகு, ‘அவசரப்பட்டுவிட்டோமே’ என்ற உணர்வு ஏற்பட அந்தக் கடிதத்தைத் தான் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கிறார். அதற்குள் காந்தியை அந்தக் கடிதம் வந்துசேர்கிறது. காந்தியின் இளம் தொண்டர்கள் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலாம் என்றும் நகலெடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் வலியுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால் அந்தக் கடிதம் திரும்பப் பெற்றதாக ஆகாது என்று சொல்லி, காந்தி அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.

இப்படி எத்தனையோ உதாரணங்கள்…

அன்று மன்னிப்புக் கடிதத்தைப் படித்து கரம்சந்த் காந்தி சிந்திய கண்ணீர்த் துளிகள் காந்தியை விளையவைத்த உரம் என்றும் சொல்லலாம்!

(காந்தியைப் பேசுவோம்…)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x