Published : 17 Oct 2018 12:15 PM
Last Updated : 17 Oct 2018 12:15 PM

இன்றைய தலைமுறையைப் பலிவாங்கும் டிஜிட்டல் சூதாட்டம்!

சூதாட்டத்துக்கு இன்றும்கூட இந்தியாவில் அனுமதி இல்லை. கிராமப்புறங்களில் பணம் வைத்து சீட்டாடினாலோ, சேவல்கட்டுப் பந்தயம் நடத்தினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ‘ஃபேண்டசி’ விளையாட்டுகளான ‘டிரீம்11’, ‘ரம்மி சர்க்கிள்’ போன்ற பணம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அது என்ன ‘ஃபேண்டசி’ விளையாட்டு? ஒரு விளையாட்டில் எந்த அணி வெல்லும் என்று பந்தயம் கட்டாமல், அந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களை நம்பிப் பந்தயம் கட்டுவது. உதாரணமாக, கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், இரு அணிகளிலும் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட 28-லிருந்து 30 வீரர்களுள் அன்றைய போட்டியில் விளையாடவிருக்கும் 11 பேரை ஊகித்துத் தேர்ந்தெடுத்து, உங்கள் விருப்பத்துக்குரிய ஒரு அணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, நீங்கள் உருவாக்கிய அணியை வைத்துப் பணம் கட்டிப் பந்தயந்தில் சேர வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த 11 பேரும் நன்றாக விளையாடினால் உங்களுக்கு வருமானம். ஒவ்வொரு போட்டிக்குமான நுழைவுக் கட்டணம் நான்கு ரூபாயிலிருந்து பல ஆயிரங்கள் வரை.

கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், வீரர்களின் ஒவ்வொரு ரன்னுக்கும் விக்கெட்டுக்கும் கேட்ச்சுக்கும் ரன்அவுட்டுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். தேர்ந்தெடுத்த 11 பேரும் நன்றாக விளையாடினால் புள்ளிகள் கூடும். இவ்வாறாக, ஒரு போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த ஒருவர் வெற்றியாளர்.

இவ்வகையான விளையாட்டுகளில் இரு வகையான போட்டிகள் உண்டு. ‘ஸ்மால் லீக்’ என்பது ஓரளவுக்கு நேரடியாக மோதுவது. இருவர் முதல் 20 பேர் வரை இந்த ‘ஸ்மால் லீக்’களில் இருப்பார்கள். 15 ரூபாய் கட்டி வெற்றிபெற்றால் அது 25 ரூபாயாகத் திருப்பித் தரப்படும். இவ்வாறே 5,750 ரூபாய் கட்டி 10 ஆயிரம் ரூபாய்கூட ஒரு போட்டியில் வெல்லலாம் அல்லது 9,999 ரூபாய் கட்டி ஒரு லட்சம்கூட வெல்லலாம். மற்றொரு வகை, ‘க்ராண்ட் லீக்’. இது குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து சில லட்சம் பேர் விளையாடுவது. உதாரணமாக, 26 ரூபாய் கட்டிச் சேர்ந்தால் இத்தனை லட்சம் பேரில் முதலில் வருபவருக்கு 3 லட்சம் கிடைக்கும். இந்த மாதிரியான ‘க்ராண்ட் லீக்’களில் 10 லட்சம் வரைகூட நிர்ணயிக்கிறார்கள்.

சில நூறுதானே, வென்றால் லட்சங்களாயிற்றே என ஒவ்வொரு முறையும் மாதந்தோறும் பல ஆயிரங்களை இதில் தொலைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஒவ்வொரு போட்டியையும் பார்த்து அதில் கொஞ்சம் தகவல்களைத் திரட்டி, ஒரு நல்ல அணியை உருவாக்கினாலும் இதுபோன்ற ‘க்ராண்ட் லீக்’களில் வெல்ல முடிவதில்லை. வித்தியாசமான பெயர்களைக் கொண்ட ஏதேனும் ஒரு அணி முதலிடத்தில் லட்சங்களை வென்றிருக்கும். கலந்துகொள்ளும் பல லட்சம் அணிகளுள், அத்தனை சாத்தியங்களையும் கொண்ட சில ஆயிரம் அணிகளை இதை நடத்தும் நிறுவனங்களே இறக்கிவிடுகின்றனவோ எனும் சர்ச்சை இணையத்தில் இன்றும் பேசப்பட்டுவருகிறது.

பணம் வெல்வதைவிட இதில் கலந்துகொண்ட பின் கிரிக்கெட் பார்ப்பதென்பது பெரும் வாதை தரும் விஷயமாக மாறியிருக்கிறது. தேர்ந்தெடுத்த வீரர் நன்றாக விளையாட வேண்டும் என்று தொடங்கி, எதிராகப் பணம் கட்டியிருப்பவர் எடுத்திருக்கும் வீரர் விரைவில் அவுட்டாக வேண்டும் என்பது வரை ஒவ்வொரு நொடியும் மன அமைதியைக் குலைத்துவிடும். வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பணத்தைக் கட்டி, போட்டி நடைபெறும் இரவுகளில் விழித்திருந்து உடல்நலனைக் குலைத்துக்கொள்பவர்களும் பெருகியிருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம், பொழுதுபோக்குக்காக ஒதுக்கிய நேரம் காசாகிறது என்பதுதான்.

இத்தனை நாட்கள் பொழுதுபோக்காக இருந்தவற்றை இப்போது மன அமைதியைக் குலைக்கக்கூடிய விஷயமாக மாற்றியிருக்கின்றன  ‘ஃபேண்டசி’  விளையாட்டுகள். மேலும்  குடும்பம், வேலை போன்ற அன்றாடங்களையும் பாதிக்கிறது. வேலை நேரத்தில் இதுபோன்ற விளையாட்டுகளில் நாம் எடுத்த புள்ளிகளையும் நம் வெற்றிக்கான சாத்தியங்களையும் கணக்கிட்டுக்கொண்டே வேலையில் கவனமிழக்க நேரிடலாம்.

இன்னொருபுறம், இம்மாதிரியான  ‘ஃபேண்டசி’ விளையாட்டுகளை இந்தியாவின் அடுத்த ‘ஸ்டாக் மார்க்கெட்’டாகப் பார்க்கிறார்கள். விளையாட்டைத் தொடர்ந்து பார்த்து ஒவ்வொரு வீரரையும் திறனாய்வு செய்து ஒரு அணியை உருவாக்கி, நமக்கு எதிராளியாக நம்மைவிட வலிமையற்றவராக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து தினமும் வெல்லும் ஒரு கூட்டமும் இருக்கிறது. இவர்கள் எப்போதும் ஒண்டிக்கு ஒண்டி என ‘ஸ்மால் லீக்’களில்தான் விளையாடுகிறார்கள். ஒரு நல்ல அணியை உருவாக்கிவிட்டு, நள்ளிரவுகளில் ஒரு இரையைத் தேடி இவர்கள் காத்திருக்கிறார்கள். வலிமையற்ற ஒருவன் கிடைக்கும்போது அவனுடன் நேரடியான போட்டியில் இணைந்து வெற்றிபெறுகிறார்கள். இப்படி விளையாடும்போது அதிகபட்சமாக ஒரு போட்டியில் 5,500 ரூபாய் கட்டி 10 ஆயிரத்தைச் சம்பாதிக்க முடியும். இதுபோல குறைந்தது மூன்று போட்டியிலாவது கலந்துகொண்டு, தினமும் 30,000-க்கு மேல் வெல்பவர்களை ட்விட்டர் வந்தால் அறிந்துகொள்ளலாம். ‘கிராண்ட் லீக்’களில் வெல்ல முடியாதென்பது இவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.

ஆரம்பத்தில் கிரிக்கெட்டுக்கென ஆரம்பிக்கப்பட்ட இவ்வகைப் போட்டிகள், இப்போது பார்வையாளர்களை அதிகம் இழுத்துக்கொண்டிருக்கும் கால்பந்து, கபடி என்று சாம்ராஜ்ஜியங்களை விரிவுபடுத்தியிருக்கின்றன. ‘ஸ்டாக் மார்க்கெட்’ போன்ற முதலீடுகளில் துணிந்து இறங்க முடியாததாக இருந்தாலும்கூட, கவனமுடன் இருந்தால் பணத்தை மொத்தமாக இழப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. குறைந்தபட்ச நஷ்டத்துடனாவது வெளியேறிவிட முடியும். ஆனால், இவ்வகை விளையாட்டுகளுக்குப் பழகியவர்கள் கடுமையான மனநெருக்கடிகளுக்கு ஆளாகி இறுதியில் வெறுங்கையுடனே திரும்புகிறார்கள்.

‘ப்ளூவேல்’, ‘மோமோ சேலஞ்ச்’ போன்றவை உயிரைக்  குடிக்கும் விளையாட்டுகள் என்று சமூகத்தில் ஒருவித விழிப்புணர்வு பரவிவரும் நிலையில், இந்த மாதிரியான  ‘ஃபேண்டசி’  விளையாட்டுகளின் மூலம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் இன்னல்கள், இழப்புகள் குறித்து இன்னும் பேசத் தொடங்கவில்லை. போன தலைமுறை எப்படி லாட்டரியில் ஐந்து நம்பர்கள் சரியாக வந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று நம்பிச் சீரழிந்தார்களோ, அதேபோல இன்றைய தலைமுறை இதைக் கையிலெடுத்திருக்கிறது.

நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் தளத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது ‘டிரீம் 11’. ஒவ்வொருவரிடமும் சராசரியாக 10 ரூபாயை மட்டும் பெறுகிறது என்று வைத்துக்கொண்டாலே ஒரு போட்டிக்கு, ஒரு கிரிக்கெட் தொடருக்கு எத்தனை கோடி புழங்குகிறது என யோசித்துப்பாருங்கள். இது சர்வேதசப் போட்டிகள் என்று மட்டும் இல்லை, உள்ளூர் விளையாட்டுகளையும்கூட பொருட்படுத்தத் தொடங்கியிருக்கிறது என்பதிலிருந்து இதன் வீரியம் எவ்வளவு பெரிது என்பது வருத்தமளிக்கும் விஷயம். நாம் இழப்பது சிறிய தொகையாகத் தோன்றலாம். அதன் பின்னுள்ள நேர விரயம், மனஉளைச்சல் என இன்ன பிற இழப்புகளையும் யோசித்துப்பார்க்க வேண்டும்.

- ராஜா வீரய்யன்,

தொடர்புக்கு: vraja4win@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x