Published : 16 Oct 2018 08:55 AM
Last Updated : 16 Oct 2018 08:55 AM

பெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்

ஆண்டுதோறும் அக்டோபர் 15-ஐ கிராமப்புற மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையும், தேசிய பெண் விவசாயிகள் தினமாக இந்திய அரசும் கொண்டாடுகின்றன. இப்படிக் கொண்டாடப்படும் நாட்களிலேயே பொருத்தமான நாள் என்று இந்த நாளை நாம் சொல்லலாம். ஏனென்றால், இன்றைக்கு இந்திய விவசாயத்தின் தாங்குசக்தியாகப் பெண்களே இருக்கிறார்கள்.

விவசாய வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் - விதைத்தல், நாற்று நடுதல், நீர்ப் பாய்ச்சுதல், தண்ணீர் வடித்தல், உரமிடுதல், பயிர் பாதுகாத்தல், களை பறித்தல், அறுவடை, விளைபொருட்களைப் பத்திரப்படுத்தல் என்று எல்லாப் பணிகளையும் இன்று பெண்கள் செய்கின்றனர். பயிர்ச் சாகுபடி தவிர கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீனளம் ஆகியவற்றிலும் மகளிர் பெரும் பங்கு வகிக்கின்றனர். உணவு தானிய உற்பத்தியில் 60% முதல் 80% வரையும், பால் பண்ணைத் தொழில் உற்பத்தியில் 90%  பெண்களால்தான் நடக்கிறது என்று சொல்கிறது ‘ஆக்ஸ்ஃபாம் இந்தியா’.

ஆனால், பயிர்ச் சாகுபடியிலும் கால்நடை வளர்ப்பிலும் பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படுவதேயில்லை. கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கிராமப்புற கைவினைகளில் பெண்களுக்கு அரசு அளிக்கும் பயிற்சிகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான பெண்களுக்கே பயன்படுகின்றன. விவசாயத்தில் பெண்களைத் தொடர்ந்து ஈர்க்க சரியான கொள்கையும் தொலைநோக்குப் பார்வையும் செய்யக் கூடிய செயல்திட்டங்களும் அவசியம்.

எதிர்கொள்ளும் பெரும் சவால்கள்

 2010-11 வேளாண்மை கணக்கெடுப்பின்படி 11.87 கோடி சாகுபடியாளர்களில் 30.3% பெண்கள். 14.43 கோடி விவசாயத் தொழிலாளர்களில் 42.6% மகளிர். ஆனால், பெண்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்போர் எண்ணிக்கையோ அதிர்ச்சி தருகிறது. 2015-16 கணக்கெடுப்பின்படி நாட்டிலுள்ள 14.6 கோடி நில உடைமையாளர்களில் பெண்கள் வெறும் 13.87% மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில் இது வெறும் 1% மட்டுமே அதிகரித்திருக்கிறது. விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு விரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, பெண் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க அரசு இன்னமும் தயாராகவில்லை.

 எந்த நிலத்தில் பாடுபடுகிறார்களோ அது பெண்களுக்குச் சொந்தமில்லை. இதனால் அதை மேம்படுத்த எந்த உதவியும் பெறாமல் தவிக்கின்றனர். தந்தைவழிச் சமூக அமைப்பால் விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக ஆண்களே பெரும்பாலும் உள்ளனர்.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிலிருந்து நிலத்தின் பேரில் கடன் பெற முடியாமல் போகிறது. உலகின் பிற பகுதிகளில், நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பெண்கள் கடன் மூலம் நிலத்தை மேம்படுத்தவும் சாகுபடியைப் பெருக்கவும் முடிந்திருக்கிறது. இந்தியாவிலும் அப்படி நடக்க பின்வரும் நடவடிக்கைகள் அவசியம்.

என்னென்ன செய்ய வேண்டும்?

1. எந்த ஈடும் கேட்காமல் கடன் தரும் முறையை ‘நபார்டு’ முன் முயற்சியில், குறு-நிதி நிறுவனங்கள் மூலம் ஊக்குவிக்க வேண்டும். பெண் நில உடைமையாளர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். கடன் வசதி, நவீன சாகுபடித் தொழில்நுட்பம், நிர்வாகத் திறனில் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டால் பெண்களின் தன்னம்பிக்கை வளரும். விவசாயிகள் சங்கங்களிலோ, அமைப்புகளிலோ பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகமில்லை. அதுவும் மாற வேண்டும்.

2. விவசாய நிலங்களின் விற்பனை, பாகப்பிரிவினை காரணமாக நில உடைமையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. குடும்பங்களிடமிருந்த சராசரி நிலப் பரப்பளவு குறைந்துவிட்டது. எனவே, பெரும்பாலான விவசாயிகள்

2 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளாகத்தான் இருக்கின்றனர். இச்சிறு விவசாயிகளில்தான் பெண்களும் வருகின்றனர். நிலத்தின் அளவு குறையக் குறைய விளைச்சலும் அதன் மூலம் வருவாயும் குறைகிறது. இதனால் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. மகளிர் தன்னிறைவு பெற கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஊக்குவிக்கலாம்.

3. பெண்களுக்கு விவசாயத் தொழில்நுட்பத்தில் பயிற்சி தருவதை மகளிர் சுய உதவிக் குழுக்களும், கூட்டுறவுச் சங்கங்களும் மேற்கொள்கின்றன (ராஜஸ்தானில் சரஸ், குஜராத்தில் அமுல்). இதையே விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும் விரிவுபடுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், விதை, நடவு சாதனங்கள் இயக்கம், தேசிய விவசாய முன்னேற்றத் திட்டம் ஆகியவற்றை மகளிரை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கென்று தனி நிதி ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்.

4. மகளிரும் கையாளும் வகையில் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் புல் அறுத்தல், களையெடுப்பு, சேகரித்தல், பருத்திச் சேகரிப்பு, கால்நடைகளைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெண்கள்தான் அதிகம் செய்கின்றனர். விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு வீட்டு வேலைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டியதாயிருக்கிறது. ஆண் தொழிலாளர்களைவிட அதிக நேரம் வேலை செய்தும் குறைந்த ஊதியம்தான் தரப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்கவோ, ஊதியத்தை உயர்த்துமாறு கோரவோ முடியாத நிலையில் பெண்கள் இருக்கின்றனர். விவசாயக் கருவிகள் சில வேலைகளை எளிதில் செய்ய உதவினாலும் அவை மகளிர் கையாளும் விதத்தில் இல்லை. இதனாலேயே கடினமான வேலைகளை இயந்திர உதவியுடன் ஆண்கள் எளிதாகவும், பெண்கள் கைகளினால் அதிக சிரமத்துடனும் முடிக்க நேர்கிறது. கருவிகளைப் பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க கவனம் செலுத்த வேண்டும். விவசாயக் கருவிகளை வாடகைக்கு விடும் அரசு முகமைகளும் மையங்களும் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தருவதுடன் குறைந்த வாடகையிலும் அளிக்க வேண்டும்.

5. ஆடவர்களுடன் ஒப்பிடும்போது பெண்களால் கடன் வசதி, விதை, உரம், பூச்சிக்கொல்லிகளைப் பெறுவது எளிதாக இல்லை. இவையெல்லாம் பெண்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தியை 2.5% முதல் 4% வரை அதிகரிக்க முடியும்  என்று ஐநாவின் உணவு, வேளாண் அமைப்பு (எப்ஏஓ) தெரிவிக்கிறது. வேளாண் விரிவாக்க சேவைகளைப் பெண் விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தி கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண்டும். மாவட்ட விவசாய மையங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

பெண்களுக்கேற்ப சிந்தியுங்கள்

விவசாய வேலைகளை இப்போது அதிகம் மேற்கொள்வது பெண்களாக இருப்பதால் அவர்களுக்கு சொத்துரிமையை வழங்கி நில உடைமையாளர்களாக்க வேண்டும். நில உடைமையாளர்களாகப் பெண்கள் மாறிவிட்டால் விவசாயக் கடன், விதை, உரம், பூச்சிக்கொல்லிகள், வேளாண் கருவிகள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வது அவர்களுக்கு எளிதாகிவிடும்.

எந்தப் பயிரைச் சாகுபடி செய்வது, எந்தத் தொழில்நுட்பத்தைத் தேர்வுசெய்வது என்பதை நிபுணர்களின் ஆலோசனை, வழிகாட்டல்களோடு பெண்கள் மேற்கொள்ளும்போது விவசாயத்தில் உற்பத்தியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். அத்துடன் விளைந்தவற்றை உள்ளூரில் வியாபாரிகளிடமோ அல்லது மொத்த விலைச் சந்தையிலோ விற்பதை மகளிரே மேற்கொள்ளும்போது இதுவரை கண்ணுக்குத் தெரியாமல், பின்புலத்திலிருந்து பெரிய பங்களிப்பைச் செய்துவரும் பெண்கள் வெளியுலகுக்கு நன்றாகத் தெரிய ஆரம்பிப்பார்கள். பெண்களை அடிப்படையாகக்கொண்டு அரசு சிந்திக்கும்போது இவையெல்லாம் நடக்கும்!

-சீமா பத்லா, ரவி கிரண்

 ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x