Published : 16 Oct 2018 08:33 AM
Last Updated : 16 Oct 2018 08:33 AM

96: இழந்த காதலின் வலியை யார் சுமப்பது?

‘96’ படத்தில், திருமண மண்டபத்தில் தனது கணவனாகப்போகும் நபருடன் அமர்ந்திருக்கும் தருணத்தில்கூட, தன்னை மீட்டெடுத்துச் செல்ல கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) வருவானா என்று காத்திருந்ததாக ஜானு (த்ரிஷா) சொல்லும் காட்சியை ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு நிமிடம் அந்தக் கணவனின் இடத்திலிருந்து சிந்தித்துப் பாருங்கள். ஒருவருடன் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் நிலையில், அவர் அருகில் அமர்ந்துகொண்டு, வேறொருவரைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதை எப்படிப் பார்ப்பது?

காதலை மிக அதீதமாகக் கொண்டாடுவதும், திருமணம் என்பதை மிக மகிழ்ச்சியான முடிவாகவோ அல்லது மிக துக்ககரமான முடிவாகவோ காட்டுவதும் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள். திருமணம் என்பதை மக்கள் மிக எளிதான விஷயமாகக் கருதிக்கொள்கிறார்கள். ஆனால், வேறொருவரை நேசித்துக்கொண்டிருப்பவருடன் வாழ்க்கை நடத்துவது என்பது அத்தனை எளிதான விஷயமா என்ன? அது எத்தனை அழுத்தம் தரும் விஷயம் தெரியுமா?

முன்னாள் காதலியுடன் அன்றாடம் ஒப்பிடப்படும் வலியை மூன்றாண்டுகளாக எதிர்கொண்ட அனுபவம் எனக்கு உண்டு. “அவளாக இருந்தால் நான் வரும்வரை காத்திருந்திருப்பாள். ஆனால், நீயோ தூங்கிவிட்டாய். அவளாக இருந்தால் இப்படிச் செய்திருப்பாள். நான் பார்த்ததிலேயே மிக அழகான பெண் அவள்தான்...”

இப்படிப்பட்ட நிலையிலிருந்து நீங்கள் வெளியில் வரவில்லையென்றால், வேறொரு பந்தத்துக்குள் – குறிப்பாகத் திருமண பந்தத்துக்குள் நுழையாதீர்கள். உங்கள் கடந்த காலத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவர், உங்கள் பயணத்தில் கொல்லப்படுகிறார்.

உங்கள் கடந்த காலத்திலிருந்து வெளிவர போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பழைய காதலைப் பற்றிச் சொல்வதில் தவறில்லை. ஆனால், அதை அத்துடன் விட்டுவிடுங்கள். அடுத்த நபரை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும் அவரை மணந்துகொள்ளுங்கள்.

திருமணம் என்பது காதலையும் தாண்டி வேறு விஷயங்களைக் கோருவது. திருமணம் என்பது புரிதல், பொறுப்பு, பொறுமை என்று பல்வேறு விஷயங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அது எளிதானதல்ல. திரைப்படங்களைப் பார்த்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் மெளனமாக, உங்கள் அருகில் படுத்து உறங்கும் ஒரு பொம்மை கிடைத்துவிட்டதாகக் கருதிவிடாதீர்கள். ரத்தமும் சதையுமான அந்த நபர், உங்கள் அபத்த உளறலைத் தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்க மாட்டார்!

- கவிப்ரியா மூர்த்தி, எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x