Last Updated : 16 Oct, 2018 08:32 AM

 

Published : 16 Oct 2018 08:32 AM
Last Updated : 16 Oct 2018 08:32 AM

அதிகாரத்தின் தர்பார் முடிவுக்கு வருவது எப்போது? 

இது நடந்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒரு நண்பரைப் பார்க்க அவரது அலுவலகத்துக்குப் போயிருந்தேன். நண்பர் பெரிய அரசு அதிகாரி. மாலை ஆறு மணி. அப்போதும் அலுவலகத்தில் நடமாட்டம் இருந்தது. ஒரு வெள்ளுடை பியூன் மிக மரியாதையுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். இன்னொரு பியூன் கதவுக்கு வலிக்காமல் திறந்துவிட்டார். அறை விசாலமாக இருந்தது. நண்பரது மேசையின் மீது வலை கட்டினால், இரண்டு அணிகள் இருபுறமும் நின்று பாட்மிண்டன் விளையாடலாம். ஒரு பக்கம் கழிப்பறை இருந்தது. மறுபக்கம் சாப்பாட்டு மேசையுடன்கூடிய சிறிய அடுப்படி இருந்தது. அங்கிருந்துதான் தும்பைப்பூ நிறக் கோப்பையில் டிக்காஷன் காபி வந்தது. குசல விசாரிப்புக்குப் பிறகு நண்பர் போகலாம் என்றார். செய்தியை ஊரம்பலத்துரைக்க, உடன் ஒரு சிப்பந்தி வெளியேறினார்.

பின்னர், ஒரு பியூன் நண்பரது கைப்பையையும் சாப்பாட்டுக் கூடையையும் கைப்பற்றினார். நாங்கள் அறையிலிருந்து வெளியேறியபோது ஊழியர்கள் முன்னதாகவே எழுந்து நின்றுகொண்டிருந்தனர். ஒரு பியூன் மின்தூக்கியின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தார். கீழே இறங்கியதும் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த காரின் கதவைத் திறந்தபடி இன்னொரு பியூன் நின்றிருந்தார். கார் புறப்பட்டபோது இருமருங்கும் நின்றிருந்த ஆறேழு பேர் விறைப்பாக வணக்கம் வைத்தனர். நண்பர் மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் மூத்த அதிகாரிகள் பலரும் இப்படி ஆள், அம்பு, சேனையுடன்தான் உலவுகிறார்கள்.

நமது அதிகாரிகள் அவர்களுக்குள் பேசிக் கொள்வதிலும் ஒருமுறை இருக்கிறது. ஓர் உதவிப் பொறியாளர் தனது மேலதிகாரியான செயற்பொறியாளரிடம் (இ.இ) இப்படிச் சொல்வார்: 'இ.இ. சார் கேட்ட ரிப்போர்ட்டைக் கொண்டு வந்திருக்கேன்'. அதாவது, முன்னால் இருப்பவரை நீங்கள் என்று முன்னிலையில் அழைக்காமல் பதவிப் பெயரைச் சொல்லி படர்க்கையில் விளிப்பார். இது இலக்கணப் பிழை என்று அவருக்குத் தெரிந்திருக்கும். கூடவே, சினிமாக்காரர்களைப் போல் சார் என்றொரு பின்னொட்டும் சேர்த்துக்கொள்வார். அதுதான் மரபு.

எளிமையான அதிகாரிகள்

நான் ஹாங்காங்கில் தொழில்நிமித்தம் பல அரசு அலுவலகங்களுக்குப் போயிருக்கிறேன். அங்கெல்லாம் நான் எதிர்கொண்ட அதிகாரிகள் நேர்மாறானவர்கள். பலரும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துவார்கள். அவரவர் கைப்பைகளை அவரவரே தூக்கிச் செல்வார்கள். மேலோரும் கீழோரும் ஒருவரை ஒருவர் முதற்பெயரைச் சொல்லி அழைத்துக்கொள்வார்கள். பியூன்களே அங்கு கிடையாது.. சுருக்கெழுத்தாளர்கள் கிடையாது. கட்டிடத் துறையின் தலைமைப் பொறியாளர் அவருக்கு வேண்டிய ஒளி நகல்களை அவரே வரிசையில் நின்று எடுத்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் மகளின் பட்டமளிப்பு விழா ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் நடந்தது. முதலில் ஆசிரியர்களுக்கும், அடுத்து மாணவர்களுக்கும், பின்னால் உறவினர்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனது இருக்கையிலிருந்து திரும்பிப் பார்த்தேன். எனக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்தவர் எல்ஸி லியுங். ஹாங்காங் தன்னாட்சி நாடாகிய 1997 முதல், எட்டு ஆண்டுகள் நீதித் துறைச் செயலராக இருந்தவர். இது அமைச்சர் பதவிக்கு இணையானது. லியுங் புகழ்பெற்ற வழக்கறிஞர், பல சட்டக் குழுமங்களுக்குத் தலைமை தாங்கியவர். அன்று அவருடைய பேரன் பட்டம் வாங்கினான். பாட்டி என்கிற முறையில் வந்திருந்தார். அன்று பட்டம் வழங்கிய அட்டர்னி ஜெனரல், சட்டக் கல்லூரி டீன், பேராசிரியர்கள் எல்லோரும் சம்பிரதாய அங்கியணிந்து அரங்கின் பின்னாலிருந்து மேடை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். எங்களைக் கடக்கும்போது எல்ஸி லியுங்கின் பக்கம் திரும்பிப் பலரும் வணக்கம் சொன்னார்கள். என்றாலும் அன்றைக்கு அவருக்கான இருக்கை பின் வரிசையில்தான். அமைச்சர், அதிகாரி, பிரமுகர் என்பதான எந்தச் செல்வாக்கையும் பயன்படுத்தி முதல் வரிசைக்குப் போக அவரும் முயற்சிக்கவில்லை.

காலனிய மனோபாவம்

ஆனால், நமது அதிகாரிகளில் ஒரு பகுதியினர் இன்னும் காலனிய ஆட்சியின் வெள்ளை அதிகாரிகளின் மனோபாவத்திலேயே இருக்கிறார்கள். இது இருக்கட்டும், அவர்களது செயலாற்றல் எப்படி உள்ளது? எல்லா இடங்களையும்போல அரசுத் துறையிலும் கண்ணும் கருத்துமாகப் பணியாற்றும் பல அதிகாரிகளும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் அரசு இயந்திரம் இயங்குகிறது என்பதெல்லாம் சரி. ஆனால், அரசுத் துறையின் பொது அம்சம் என்ன?

இந்தியாவின் நிர்வாகத்தைச் சுட்டுகிற புள்ளிவிவரங்கள் இதை வெளிப்படுத்துகின்றன. சர்வதேச வளர்ச்சிக் குறியீட்டில் 171 நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 130. ஊழல் குறித்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 81. இவையெல்லாம் சொல்லும் செய்தி என்ன? நம்முடைய அரசு நிர்வாகம் இன்னும் போக வேண்டிய தூரம் நீளம்.. நீளம்.

இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணியாற்றுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் தேர்வாணைக் குழுவால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அரசு அதிகாரிகளாகவும் அரசு ஊழியர்களாகவும் பொறுப்பேற்க முடியும்.

குறிப்பாக, ஐஏஎஸ் மற்றும் குரூப் ஒன் போன்ற தேர்வுகள் கடுமையானவை. கல்வி கேள்வியில் சிறந்த இளைஞர்கள்தாம் இந்தப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள். இவர்களில் பலரும் சேவை மனப்பான்மையுடன் பணியில் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், பந்தா வளையத்துக்குள்ளும் சிகப்பு நாடாக்களுக்குள்ளும் ஊழல் சிறைக்குள்ளும் பலரும் சிக்கிக்கொள்ள என்ன காரணம்?

 சிகப்பு நாடாக்கள் அவிழட்டும்

இதற்கு இரண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, இளைஞர்கள் எதிர்நீச்சல் அடித்துச் சோர்ந்து போய் ஒரு கட்டத்தில் ஆற்றின் நீரோட்டத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். இரண்டு, ஆட்சிபுரியும் அமைச்சர்களின் கைகளில்தான் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற லகான்கள் உள்ளன. அவற்றை மீறி அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

  இரண்டு  கூற்றிலும் உண்மை இருக்கலாம், ஆனால் தேச நலன் கருதி அதிகாரிகள் செயல்திறனுடனும் பந்தா இல்லாமலும் செயல்பட வேண்டும். அதற்கான சூழலை ஒவ்வொரு துறைக்குள்ளும் நேர்மையான அதிகாரிகள், குறிப்பாக இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதிகாரிகள் மக்களுடன் இயைந்து பணியாற்றுகிற சூழல் உருவாக வேண்டும். அதிகாரிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களைத் தொடர்புகொள்வதை அரசு அனுமதிக்க வேண்டும். காட்சிக்கு எளிய, செயல் திறன் மிக்க அதிகாரிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகும். அப்போது பந்தா வளையங்கள் உடையும், சிகப்பு நாடாக்கள் கட்டவிழும்.

 - மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x