Published : 15 Oct 2018 09:40 AM
Last Updated : 15 Oct 2018 09:40 AM

மாயமானைத் தேட எதிர்க்கட்சிகள் விரும்பினால் தேடட்டும்: நிர்மலா சீதாராமன் பேட்டி

ரகுவீர் சீனிவாசன், முகுந்த் பத்மநாபன்

உண்மைகளையே பேசுவேன் என்று சொல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக, ‘கண்ணோட்டப் போர்’ நடக்கிறது. “விமானம் வாங்குவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன, எதிர்க்கட்சிகள் வீணாக சர்ச்சையை வளர்க்கின்றன” என்று எமக்களித்த பேட்டியில் தெரிவிக்கிறார்.

2015 ஏப்ரலில் பிரான்ஸுக்குச் சென்ற பிரதமர் மோடி, ‘36 ரஃபேல் ஜெட் விமானங்கள் வாங்கப்படும்’ என்ற திடீர் அறிவிப்பை எதிர்பாராத விதத்தில் வெளியிட்டார். வெளியுறவுச் செயலர், தஸ்ஸோ நிறுவன அதிகாரிகள், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்குக்கூட மோடியின் அறிவிப்பு தெரிந்திருக்கவில்லை அல்லது பேரம் குறித்துச் சில நாட்களுக்கு முன்னால்தான் தெரியவந்தது என்று பேசப்படுகிறது. கொள்முதல் தொடர்பான முடிவு திட்டவட்டமாக எப்போது எடுக்கப்பட்டது?

இந்த அறிவிப்பே பேரமாகக் கனிந்துவிட்டது என்று கருதுகிறீர்களா? பேரம் தொடர்பான நடைமுறைகள் முறைப்படி பின்பற்றப்பட்டன, எல்லா விதிகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

சரி, அது இந்த அறிவிப்புக்குப் பிறகு, அறிவிப்புக்கு முன்னால் என்ன நிலை?

என்ன அறிவிக்கப்பட்டது? விமானங்களை வாங்க விரும்புகிறோம், இதில் தொடர்புள்ள குழுக்கள் நடைமுறைகளைத் தொடங்கட்டும் என்பதுதான் அறிவிப்பு. வெளியுறவுச் செயலாளர், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், மற்றவர்களுக்கெல்லாம் இதில் தொடர்பில்லை என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்? அவர்களும் இதில் தொடர்புள்ளவர்கள்தான். பிரதமரும் பிரெஞ்சு அதிபரும் தனியாக உட்கார்ந்து தாங்களாகவே கூட்டறிக்கையை எழுதி, தயாரித்து, பத்திரிகைகளுக்கு வெளியிட்டுவிட்டார்கள் என்று கருதுகிறீர்களா? கூட்டறிக்கையைத் தயாரிப்பது மூத்த அதிகாரிகள். சிட்டிகை போடும் நேரத்தில் அதைச் செய்துவிட முடியாது. கூட்டறிக்கையின் இறுதி வடிவத்தை அது எட்டுவதற்கு முன்னால், வாக்கியங்கள் பலமுறை விவாதிக்கப்பட்டுத் திருத்தப்படும். நீங்கள் குறிப்பிட்ட மூத்த அதிகாரிகளும் பொறுப்பில் இருப்பவர்களும்தான் அதைச் செய்ய முடியும். அவர்களுக்குத் தெரியாமல் இது நடந்தது என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்? இந்தியத் தரப்பின் விருப்பத்தைப் பிரதமர் அறிவிப்பதற்கு முன்பிருந்தே அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியும்.

உயர்நிலையில் இதுபற்றி ஆலோசனை நடந்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் விமானப் படைத் தலைமை தளபதி நிலையிலாவது; இந்த நடைமுறை எப்போதும் கடைப்பிடிக்கப்படவேயில்லை?

இல்லை. ஏற்கப்பட்ட நடைமுறைகள்படியேதான் அனைத்தும் நடந்தன. விமானப் படைத் தளபதி, வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூடித்தான் கூட்டறிக்கைக்கான வரைவு வாசகத்தை முதலில் தயாரிப்பார்கள். அதை பிரெஞ்சுத் தரப்புக்குத் தருவார்கள். அதில் அவர்கள் திருத்தம் செய்தால் அல்லது மாற்றியமைக்க விரும்பினால் தெரிவிப்பார்கள். அதன் பிறகே கூட்டறிக்கை இறுதி வடிவம் பெறும். இதற்குப் பிறகே அரசு விரும்பிய வகையில் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும். தொழில்நுட்பம், விலை, தரம் தொடர்பாக இரு தரப்பிலும் உள்ள குழுக்கள் அமர்ந்து பேசும். இக்குழுக்கள் பேசி முடித்து ஒப்புதல் தந்த பிறகே - இந்திய விமானப் படை இதில் முழுதாகப் பங்கேற்ற பிறகே - முடிவு எடுக்கப்படும். இதற்கே 16 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 ரஃபேல் விமானங்களை வாங்க முடிவுசெய்திருந்தபோது நீங்கள் ஏன் அதை 36 ஆகக் குறைத்தீர்கள்? 2007-க்கும்

2015-க்கும் இடையில் என்ன நிகழ்ந்தது?

வாங்கும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேயில்லை. பறந்து செல்லும் நிலையில் ஒரு ஸ்குவாட்ரன் அதாவது 18 விமானங்களை வாங்குவது, எஞ்சிய 108-ஐ எச்ஏஎல் நிறுவனத்திலும் தயாரிப்பது என்ற முடிவு முந்தைய அரசால் செயல்படுத்தப்படவே இல்லை. நாங்கள் 18-க்குப் பதிலாக 36 - அதாவது இரு ஸ்குவாட்ரன் - எண்ணிக்கையில் நேரடியாக முதலில் வாங்குகிறோம். இது குறைவு அல்ல அதிகரிப்பு. அவர்கள் முடிவைச் செயல்படுத்தியிருந்தால் தஸ்ஸோவும் எச்ஏஎல்லும் இணைந்து 108 விமானங்களை நீண்ட காலத்துக்குக் கூட்டாகத் தயாரித்திருக்கும். நாங்கள் 114 ஜெட் போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க ‘தகவல் கோரிக்கை’யை  விடுவித்திருக்கிறோம். இதில் ஆர்வமிருப்பதாக முன்வந்திருக்கும் 7 நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது போட்டியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.

114 விமானங்களுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினீர்கள். இது ராணுவ உத்தியின்படி தயாரிக்கப்பட வேண்டியது. இதில் தனியாரையும் ஈடுபடுத்தியாக வேண்டும். எனவே?

இதில் யாரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்வது என்பது நிறுவனங்களின் விருப்பம். ராணுவ உத்தியின்படி இரண்டு பேரங்களில் ஈடுபட்டுள்ளோம். ஒன்று, கடற்படையின் தேவைக்கானது. இன்னொன்று, விமானப் படையின் தேவைக்கானது. ஏதோ உள்நோக்கத்தோடு, நாங்கள் தனியார் நிறுவனங்களைச் சேர்த்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்காக வருத்தப்படுகிறேன்.

ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்ட பேரத்தில் நீங்கள் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள். இதனால் ஆகும் தாமதத்துக்கு யார் பொறுப்பு?

சில மாதங்களுக்கு முன்னால் பேசியபோது இருந்த அதே தொழில்நுட்பம் இப்போது இருப்பதில்லையே? கால தாமதம் ஆனாலும் நவீனத் தொழில்நுட்பத்தின் பலன்களையும் சேர்த்தே பெற முடியும். நடைமுறைகளை எளிமைப்படுத்திவிட்டோம். எனவே, விரைவாக வாங்கி முடிக்கலாம்.

ஐமுகூ பேரம் மிகவும் தாமதமாகிவிட்டது என்றீர்கள்; 114 ஜெட்டுகளை எவ்வளவு விரைவாகப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

36 விமானங்களை வாங்குவதற்கே 2019 முதல் 2022 வரை பிடிக்கும். எஞ்சியவற்றுக்கு எவ்வளவு ஆண்டுகள் என்று நீங்களே ஊகிக்கலாம். தஸ்ஸோவுடன் எச்ஏஎல் உடன்பாடு கண்டிருந்தாலும் 108 விமானங்களைத் தயாரித்து வழங்க அதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும்.

பிரெஞ்சுப் பயணம் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்று கருதாமல், மரபான வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம் என்று பலர் கருதுகின்றனரே?

வழக்கமான கொள்முதல் நடைமுறைகளைவிட, ‘மரபான வழி’ என்றால் என்னவென்று புரியவில்லையே!

ரஃபேல் கொள்முதலுக்கும், பொது ராணுவ ஒப்பந்தங்களுக்கான ரகசியக் காப்பு விதி பொருந்தும் என்று கூறியிருக்கிறீர்கள். விமானத்தின் சிறப்பு அம்சங்கள் அல்லது அதில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டுமானால் ரகசியம் என்று காக்கப்படலாம். 2016 நவம்பர்படி ஒரு ரஃபேல் ஜெட் விமானத்தின் விலை ரூ.670 கோடி என்று கூறப்பட்டது. இந்தியாவின் தேவை கருதி சேர்க்கப்படும் சாதனங்கள், ஆயுதங்கள் தொடர்பான கூடுதல் செலவுகள் எவ்வளவு என்று தெரிவிப்பதில் என்ன தயக்கம்?

விமானத்தின் அடிப்படை விலை 2016 நவம்பரில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி - பிப்ரவரியில் இக்கேள்வி வந்தபோதும் பதில் அளிக்கப்பட்டது. இந்தியத் தேவைகளுக்காகச் சேர்க்கப்பட்டவற்றின் விலையைத் தெரிவித்தால் அது எந்த மாதிரியான ஆயுதம், அதன் தன்மை என்ன என்று நம் எதிரிகளுக்குத் தெரிந்துவிடும். அவர்களுடைய ஆர்வம் விமானத்தைப் பற்றியதல்ல. அதில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆயுதங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியது. இதை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை. விளைவுகளைப் பற்றிய கவலையே இல்லாமல், ஆயுதங்களின் தன்மை, தரம், விலை குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். காங்கிரஸ் சற்றே மிகையாகச் செயல்படுகிறது.

இந்தியாவுக்காக ரஃபேலில் என்னென்ன சேர்க்கப்படுகின்றன என்பதெல்லாம் சமூக ஊடகங்களில் இடம்பெற்றுவிட்டனவே? அரசும் இதை மறுக்கவில்லையே?

சமூக ஊடகங்களில் சொல்லப்படுவதற்கெல்லாம் அரசு மறுப்புத் தெரிவித்துக்கொண்டிருக்க முடியாது. இந்த அரசின் எந்தத் துறையிலும் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கும் இல்லை. எனவே, இல்லாத ஊழல் என்ற மாய மானைத் தேடியே பிடிப்பது என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்துவிட்டால், அப்படியே தேடி ஓடட்டும்.

நீங்கள் ஏன் முயற்சி எடுத்து அவர்களுக்கு விளக்கக் கூடாது?

இனி வாய்ப்பே இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்கள் இதைப் பற்றிப் பேசட்டும். இந்த விவாதத்தை முடிப்பதற்காக நான் இப்படிப் பேசவில்லை. இந்த அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற எதுவுமே அமையாததால், ரஃபேல் பேரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

ரஃபேல் பேரத்தைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆராய்வார், ஆனால் பேரம் முழுதாக நிறைவேறிய பிறகே ஆராயப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மேலும் சில ஆண்டுகள் ஆகும். நிதித் தணிக்கை இருக்கும் என்பதால் இந்த விலை விவரங்கள் மக்களுக்கு எப்படியும் தெரியத்தான்போகின்றன அல்லவா?

சிஏஜி ஆராயட்டும், எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. சிஏஜியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை.

ரஷ்யாவுடனான ‘எஸ்-400’ ஒப்பந்தத்தில் ஏன் இந்தியாவிலும் தயாரிப்பது குறித்துப் பேசப்படவில்லை? ரஃபேல் விவகாரம்போல இதிலும் அனில் அம்பானி போன்றோரின் தனியார் நிறுவனத்துக்கு அரசு சலுகை காட்டுகிறது என்ற புகார் வரக் கூடாது என்பதால்தான் என்கிறார்களே?

அப்படியல்ல; இதற்கு முன்பும் நீண்ட கால ஒப்பந்தங்களில் இப்படி உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளாமலும் வாங்கப்பட்டிருக்கிறது.

இது வணிகரீதியில் மிகப் பெரிய ஒப்பந்தம்; இதிலும் இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கலாம் அல்லவா?

இதை ஒரு காரணமாகச் சொல்ல விரும்பவில்லை. எங்கள் நாட்டிலேயே தயாரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தாலே, விலையை ஏற்றிவிடுவார்கள் என்றும் விவாதிப்பார்கள்.

நீங்கள் சொல்வதும் சரிதான். எஸ்-400 ஒப்பந்தத்தில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் போடாததால் விலை குறைவாக இருக்கிறது என்றால், ரஃபேல் ஒப்பந்தத்திலும் அப்படிப் போடாமல் இருந்திருக்கலாமே என்று கேட்பார்களே?

எப்போதுமே, இப்படிப் பேசினால் எதிராகப் பேசி - இதற்கு வேண்டாம் என்றால் அதற்கும் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்று கேட்பது வழக்கம்தான். பாதுகாப்புத் துறை, நிதித் துறை, முப்படைகளுடன் ஒவ்வொரு ஒப்பந்தம் குறித்தும் உள்ளுக்குள் விவாதித்துவிட்டுத்தான் முடிவெடுக்கப்படுகிறது.

பிரான்ஸ்வா ஒல்லாந் பேட்டி அளித்ததைப் போல தஸ்ஸோ நிறுவனத்தின் தொழில் கூட்டாளியாக அனில் அம்பானியை உங்கள் அரசுதான் பரிந்துரைத்ததா?

ஒல்லாந் கூறியபடி, தஸ்ஸோ நிறுவனத்துக்கு எத்தனை தனியார் கூட்டாளிகள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஊடகங்களில் உள்ள தகவல்களின்படி 60 முதல் 70 நிறுவனங்கள், பிரெஞ்சு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் ரஃபேலைத் தயாரிக்கவிருக்கின்றன. ஒல்லாந் கூறியது உண்மையென்றால் நாங்கள் 70 இந்திய நிறுவனங்களைப் பரிந்துரைத்தோமா, தஸ்ஸோ வேறு வழியில்லாமல் அவர்கள் அனைவரையும் கூட்டாளிகளாக ஏற்றுக்கொண்டுவிட்டதா!

எதிர்க்கட்சிகளைத் தனியாகச் சந்தித்து விளக்கினால் சர்ச்சை தீரும் என்று கருதுகிறீர்களா? நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்தால் இந்தச் சர்ச்சை ஓயும் என்றால் அரசு ஏன் தயங்குகிறது?

முதலில் என்ன விலைக்கு வாங்குகிறீர்கள் அதைக் கூறுங்கள் என்றார்கள், கூறினோம். அதை விட்டுவிட்டு அதில் எதையெல்லாம் பொருத்துகிறீர்கள் என்று கேட்கத் தொடங்கினார்கள்.

இப்போது விமானத்தின் விலைகூட அவர்களுக்கு முக்கியமில்லை என்று தோன்றுகிறது. இந்த பேரத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட சர்ச்சை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு கோரிக்கை?

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டு அதற்கு நாங்கள் விளக்கமும் அளித்துவிட்டோம்.

-  ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x