Published : 15 Oct 2018 09:26 AM
Last Updated : 15 Oct 2018 09:26 AM

மயிர்க்கூச்செரியும் ஒரு உயிர்த் தப்பித்தல் பயணம்

ராக்கெட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு இறங்கும்போது, கூடுதல் முடுக்கு வேகத்தில் விண்கலம் கீழே இறங்குவதால், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குக் கூடுதலாக விசையை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விண்வெளி ஆய்வுச் செய்திகளைத் தொடர்ந்து, கவனித்துவருபவர்களுக்கு மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம் பெரிய அதிர்ச்சிதான். ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினின், அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேக் இருவரையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கிச் சென்ற சோயஸ் ராக்கெட் தன்னுடைய பயணத்தில் கோளாறைச் சந்தித்தது. நடுவானில் ஏற்பட்ட இந்தக் கோளாறு இரு உயிர்களைப் பறித்திருக்கும். ஆனால், சமயோசிதமாகச் செயல்பட்ட இரு வீரர்களும், ராக்கெட்டிலிருந்து தங்கள் விண்கலத்தை விடுவித்து வெளியேறி, வெற்றிகரமாகத் தரையிறங்கி இருக்கின்றனர். வாசிப்பதற்கு இது மிக எளிதாக இருக்கலாம். ஆனால், நடந்த சம்பவம் சாகசக் கதைகளை மிஞ்சக் கூடியது.

பயணத் திட்டம்

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேஸில், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்திருக்கின்றன. பூமியிலிருந்து 418 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்தைப் பராமரித்தபடி, அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

இந்த விண்வெளி மையத்துக்கு வழக்கமாக ஏவப்படும் சோயுஸ் ராக்கெட் மாதிரிதான் அக்டோபர் 11 அன்று ‘சோயுஸ்-எம்எஸ்-10’ ராக்கெட்டும் கஜகஸ்தானிலுள்ள பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. திட்டப்படி, ஏவப்பட்ட 10 நிமிடங்களில் இது விண்வெளியை அடைய வேண்டும். பின், அடுத்த இரண்டு நாட்களில் 408 கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளிக் குடிலை மெல்ல தவழ்ந்து சென்று இது அடைய வேண்டும்.

விண்வெளிக் குடிலில் மூன்று விண்வெளி வீரர்கள் ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களைப் பூமிக்கு அனுப்பிவிட்டு, இந்த ராக்கெட்டில் சென்ற இரு வீரர்களும் ஆய்வைத் தொடர வேண்டும். எல்லாம் நல்லபடிதான் தொடங்கியது. ஆனால், ராக்கெட் புறப்பட்ட 119 நொடியில் ராக்கெட்டில் இருந்த வீரர்கள் இருவரும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தனர். மணிக்கு சுமார் 7,563 கி.மீ. வேகத்தில் ராக்கெட் சென்றுகொண்டிருந்த நேரத்தில், வீரர்கள் இருவரும் எடையின்மை காரணமாகத் தங்களை இலேசாக உணர்ந்தனர். ‘இது ஆபத்து’ என அவர்களது மூளையில் பொறிதட்டியது.

ஆபத்தை எப்படி உணர்ந்தனர்?

விண்வெளிக்குச் செல்லும்போது தரையில் அழுந்தி தாம் எடை கூடியது போன்ற உணர்வு இருக்கும். லிப்டில் மேலே புறப்படும் கணத்தில் ஒரு உணர்வு ஏற்படும் அல்லவா, அப்படி! அதேபோல, ராக்கெட் பூமி நோக்கித் திரும்பும்போது எடையின்மை உணர்வு ஏற்படும். இப்போது அவர்கள் உணர்ந்தது எடையின்மையை. அதாவது, மேலே நோக்கிச் சென்ற அவர்கள் ராக்கெட் தொடர்ந்து மேல் நோக்கிப் போகவில்லை; ஏதோ கோளாறு காரணமாக மேலே சென்ற வேகத்தில் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது; பூமியில் விழப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர்.

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்றால், ராக்கெட் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமோ அவ்வளவு உயரம் செல்வதற்கான போதுமான உந்துசக்தி அதற்கு வேண்டும். இந்த ராக்கெட்டுக்கு உந்துசக்தி கிடைக்கும் இடத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. விளைவாகவே அது கீழே போய்க்கொண்டிருந்தது.

எப்படித் தப்பித்தார்கள்?

ராக்கெட்டில் இப்படிக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த விண்வெளி வீரர்களின் பெயர்களைப் பட்டியல் போடலாம். அவ்வளவு சேதாரம் ஏற்கெனவே நடந்திருக்கிறது. இந்த முறை அப்படி நடக்காமல் இருக்க விண்வெளி வீரர்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும். மிகத் துரிதமாகவே செயல்பட்டார்கள்.

கோளாறை உணர்ந்த மாத்திரத்தில், விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் விண்கலப் பகுதியை ராக்கெட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். ரயில் இன்ஜினில் இணைக்கப்பட்ட பெட்டி பிரிவதுபோல நடப்பது இது. உடனடியாக இதைச் செய்துவிட்டால், ஏதாவது கோளாறில் பிரதான ராக்கெட் வெடித்துச் சிதறினாலும் விண்கலத்துக்கும் அதில் உள்ள விண்வெளி வீரர்களுக்கும் எந்தப் பாதிப்பும் வராது. ஆனால், வேறொரு ஆபத்து உண்டு.

பொதுவாக, ஒரு விண்கலம் சாதாரணமாகப் பறவைகள் நழுவித் தரை இறங்குவதுபோலக் கீழே இறங்குகிறது என்றாலே, அப்போது விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசைபோல நான்கு மடங்கு – 4ஜி அளவு விசையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இப்படி நெருக்கடிநிலையில், ராக்கெட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு இறங்கும்போது, மேலிருந்து ஒரு கல் கீழே விழுவதுபோலக் கூடுதல் முடுக்கு வேகத்தில் விண்கலம் கீழே இறங்குவதால், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குக் கூடுதலாக விசையை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தரையிறக்கத்தின்போது சுமார் 6.7ஜி விசையை வீரர்கள் எதிர்கொண்டார்கள் என்கிறார்கள்.

காரும் பஸ்ஸும் மோதும்போது ஏற்படும் விசையைவிட அதிகமான அளவு இது. எனினும், சுமார் 8ஜி விசை வரை தாங்கும்படியான சிறப்பு இருக்கைகளில் விண்வெளி வீரர்கள் இருந்ததாலும், முன்னரே நிறைய பயிற்சி பெற்றிருந்ததாலும் அவர்கள் தப்பித்தார்கள்.

அடுத்த சவால்

பொதுவாக, திட்டமிட்டத் தரையிறக்கத்தின்போது விண்கலம் எங்கே, எப்போது தரையிறங்கும் என்பது தெளிவாக முன்கூட்டியே எல்லோருக்கும் தெரியும். எனவே, அந்த இடத்தில் ஆம்புலன்ஸ் முதல் எல்லா ஏற்பாடுகளும் முன்கூட்டியே தயாராக இருக்கும். ஆனால், நெருக்கடியாக இப்படி விண்கலம் இறங்கும்போது அதன் தரையிறக்கத்தைத் துல்லியமாகத் திட்டமிட முடியாது. குத்துமதிப்பான மதிப்பீடுதான்.

இந்த விண்கலம் மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்துக்கு அருகே தரையிறங்கும் என்று கணித்தனர். ஹெலிகாப்டர்களுடன் அங்கே சென்று, இரண்டு விண்வெளி வீரர்களையும் மீட்டுப் பத்திரமாக ராக்கெட் ஏவுதளத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

ஏன் இது முக்கியமானது?

1967-ல் சோவியத் விண்வெளி வீரர் விளாதிமீர் கொமரோவ் தரையிறங்கும்போது பாராசூட் பழுது காரணமாகத் தரையில் மோதி உயிரிழந்ததிலிருந்து நாம் எடுத்துக்கொண்டால், ஏராளமான உயிர்களை நாம் பறிகொடுத்திருக்கிறோம். அதேபோல, ஆளற்ற-வெறும் சரக்குகளை மட்டும் ஏற்றியபடி திரும்பும் விண்கலங்களுமேகூட நல்லபடி பூமியை வந்தடைவது சவால்தான். 2015-ல்கூட ஒரு சரக்கு விண்கலம் விபத்தைச் சந்தித்தது. 2016-ல் ஒரு சரக்கு விண்கலம் விண்வெளியில் காணாமலேயேபோனது. அப்படிப் பார்க்கையில், ராக்கெட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு இந்த விண்கலம் நல்லபடி பூமியை வந்தடைந்ததும், இரு வீரர்களும் திரும்பி வந்ததும் மிக முக்கியமான செய்தி என்றே சொல்ல வேண்டும். மறுவகையில் விண்வெளிப் பயணங்களில் ஒரு அங்குல முன்னேற்றம் என்றும் சொல்லலாம்.

- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x