Published : 12 Oct 2018 09:44 AM
Last Updated : 12 Oct 2018 09:44 AM

இந்திய அரசியல் போக்கை உத்தர பிரதேசம் தீர்மானிக்குமா?

பலதரப்பட்ட வண்ணங்களையும், நேர் எதிரான கூறுகளையும் கொண்ட சமூகங்களின் இருப்பிடம் உத்தர பிரதேசம். தீவிரமான சித்தாந்தம், மதம் சார்ந்த அரசியலுக்கு இடம் தந்தாலும் பெரிய பிளவுகள் இன்றி அனைத்தும் ஒருங்கே இங்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறது. வங்கம், கேரளம், மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட சமூகச் சீர்திருத்தம், தமிழ்நாட்டில் வளர்ந்து வலுவடைந்த சுயமரியாதை இயக்கம் போன்ற எதுவும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்டதில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு அனைத்துச் சமூகத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அரசியலே உத்தர பிரதேசத்தின் அடையாளமானது. இந்திய தேசிய காங்கிரஸ் அதைச் சாத்தியமாக்கியது.

அரசியல் முக்கியத்துவம்

80 மக்களவை உறுப்பினர்கள், 404 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெறும் மாநிலம் இது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எட்டு பிரதமர்களைக் கொடுத்ததும் இந்த மாநிலம்தான். இதை ‘குட்டி இந்தியா’ என்றுகூட அழைத்தார்கள். உத்தர பிரதேசத்திலிருந்து மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் கட்சிதான் பெரும்பான்மை வலுவைப் பெறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுவார்கள். இந்தப் பெருமைகள் இப்போதும் இம்மாநிலத்துக்கு உண்டா?

உத்தர பிரதேசப் பொருளாதாரம் விவசாயத்தையும் கிராமங்களையும் சார்ந்தது. பச்சிம் பிரதேசம் (மேற்கு, வடமேற்குப் பகுதிகள்), அவத் பிரதேசம் (மத்திய உ.பி., லக்னோவையொட்டிய மாவட்டங்கள்), புந்தேல்கண்ட் (தெற்குப் பகுதி), பூர்வாஞ்சல் (கிழக்கு – தென்கிழக்கு) என்று மாநிலம் நான்கு பகுதிகளைக் கொண்டது. நகர்மயமாதல், உற்பத்தித் திறன், வறுமை விகிதம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றில் இந்த நான்கு பகுதிகளுக்கு இடையே பெருத்த வேறுபாடு நிலவுகிறது.

நகர்ப்புற – கிராமப்புற பிளவு

மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நகரவாசிகள் அதிகம், ஏழைகளும் குறைவு. புந்தேல்கண்டில் பொருளாதார வசதி குறைவு. வருவாய், நுகர்வு, செலவு ஆகியவற்றிலும் கிராம மக்களுக்கும் நகர மக்களுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு. மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் முஸ்லிம்களும்  தலித்துகளும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியே இருக்கின்றனர்.

பசுமைப் புரட்சி மேற்குப் பகுதிக்கு நல்ல வளத்தைச் சேர்த்தது. இதனால், பணக்கார விவசாயிகள் அரசியல் செல்வாக்குள்ள தலைவர்களாக உருவானார்கள். அவர்கள் காங்கிரஸை விட்டு விலகியதால் அக்கட்சியும் செல்வாக்கிழந்தது. அதேசமயம், அரசியல்ரீதியிலான பிளவுகளும் ஏற்பட்டன. 1970-களின் நடுப்பகுதியில் வலதுசாரி இந்துத்துவக் கட்சிகள், மேல் சாதியினரிடம் செல்வாக்கு பெறத் தொடங்கின. மாநிலத்தில் மிகக் குறுகிய காலமே பதவி வகித்த ஜனதா கட்சி அரசுக்கு மேல் சாதியினர், பணக்காரர்கள் ஆதரவு இருந்தது. இக்காலத்திலிருந்துதான் பாரதிய ஜனசங்கம், பிற்பாடு பாரதிய ஜனதா வளரத் தொடங்கியது.

வகுப்புரீதியிலான மோதல்களுக்கு ஆளாகும் மாநிலம் இது. சமூக உறவுகள் கெடும் அளவுக்கு மோசமான வகுப்புக் கலவரங்கள் நடைபெறும். மாநிலத்தின் மேற்கு, கிழக்குப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும். சாதி, மத ஆதிக்க சக்திகள் அரசியலில் செல்வாக்கு படைத்தவை. அவற்றின்  மிரட்டல் உத்தியால் மாநிலமும் வளர்ச்சியில்லாமல் தொய்வடைந்துவருகிறது. கட்சிகளுக்கு அரசியல் ஆதரவும், வாக்களிக்கும் பாணியும் இதையே அடிப்படையாகக் கொண்டவை.

1990-களிலும் 2000-த்தின் ஆரம்பங்களிலும் பல்வேறு கூட்டணிகள், கூட்டரசுகள் சோதித்துப் பார்க்கப்பட்டன. நிலையான அரசுகள் ஏற்படுவதற்கு இடையூறாக, சமூகங்களில் பிளவும் புதிய அணி சேர்க்கைகளும் நடைபெற்றன. இதனால், சில காலத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. 2003 முதல் நிலையான ஆட்சிகள் நடந்தன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மாறி மாறி ஆண்டன. 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாஜக மீண்டும் அரசு அமைத்தது. வளர்ச்சியைத் தருவோம் என்ற வாக்குறுதியும் மதரீதியில் மக்களைத் திரட்டியதும் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றியைத் தந்தது. மேல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நில உடைமைச் சமுதாயம், தலித்துகள் என்று பல பிரிவினர் பாஜகவை ஆதரித்துள்ளனர்.

சமீப காலமாக மதத்திலும் சமூகங்களிலும்கூட பிளவுகளும் புதிய பிணைப்புகளும் நிகழ்ந்துவருகின்றன. புதிய வர்க்க, பிரிவு சேர்க்கைகளும்கூட உருவாகின்றன. எனவே, உத்தர பிரதேச அரசியல் கூட்டு அல்லது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஊகிப்பது சிக்கலாகிவருகிறது.

ஆதரவு சமுதாயங்கள்

முலாயம் சிங் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் சமூகம் வலுவிழந்துவிட்டது. தன்னுடைய தலைமையில் சமாஜ்வாதி அரசியலை எப்படி உயிர்ப்பிப்பது என்பதற்கான உத்தியை இனி அகிலேஷ்தான் வகுக்க வேண்டும். கடந்த சில தேர்தல்களில் தனக்கு ஆதரவு குறைந்துவருவதை மாயாவதியும் கவனித்துவருகிறார். தலித் சமூகங்களில் புதிதாக உருவாகும் வர்க்க அமைப்பு அவருக்குப் பயன்படுமா என்று பார்க்க வேண்டும்.

முஸ்லிம்களில் 85% ஆக இருக்கும்

பஸ்மாந்தாக்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப வெவ்வேறு அரசியல் கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட, சுய உதவிக் குழுக்களைப் போல திரண்டு கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்குரிய பங்கைப் பெற அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் ஆதரவு வாக்குகள் மேலும் குறையலாம்.

பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதியாக உள்ள பாஜக அரசு, நொறுங்கக்கூடிய சமூகக் கூட்டணியின் ஆதரவில்தான் ஆட்சியில் இருக்கிறது. இந்து ஒற்றுமை – தேசியம் என்ற உணர்ச்சிகரமான சொல்லாடல்களால் கவரப்பட்டு ஆதரவு தந்தவர்கள், குறைந்த கட்டணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காகப் போராடத் தொடங்கும்போது இந்த உணர்வுகள் மறைந்து, கோரிக்கைகள் மட்டுமே வலுவாகிவிடும்.

ஆக, உத்தர பிரதேசத்திலேயே வெவ்வேறு சமூகங்கள், வெவ்வேறு நலன்களுக்காக அரசியல் களத்தில் அணிதிரளும்போது, உத்தர பிரதேசக் குரலுக்கு தேசிய அரசியலில் எப்படியான செல்வாக்கு இருக்கும்? எண்ணிக்கை அடிப்படையில் அதன் செல்வாக்கு நீளலாம்; ஆனால், நாடெங்கிலுமான அரசியல் போக்குக்கு, மத்தியில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு உத்தர பிரதேசம் அடிப்படையாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!

-மஞ்சரி கட்ஜு

‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாக தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x