Published : 18 Sep 2018 10:06 AM
Last Updated : 18 Sep 2018 10:06 AM

ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க என்ன வழி?

அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதைக் கடந்த 15 நாட்களாகப் பார்க்கிறோம். ஆண்டின் தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்தது, தற்போது 72 ரூபாயாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிவுக்குப் புறக் காரணங்கள்தான் மூலம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாகவே கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, செலாவணியில் ஊக வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படுகின்றனர்.

டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிரத் தொடங்கியிருக்கிறது.

1. கம்பெனிகள் மீதான வரிவிகிதங்களைக் கணிசமாகக் குறைத்தார் டிரம்ப். இது முதலாளிகளுக்கு ஊக்குவிப்பைத் தந்தது. 2. அமெரிக்க மத்திய வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகள் மீதான வட்டி வீதத்தை உயர்த்தியது. இது முதலீட்டாளர்களை ஈர்த்தது. 3. வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரித்து, அமெரிக்கப் பொருளாதாரம் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இதனால், மேற்கு நாடுகளின் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கின்றன. இதற்கு டாலர் மிகவும் தேவைப்படுவதால் எல்லா நாட்டு கரன்சிகளுக்கு நிகராகவும் டாலரின் மதிப்பு உயர்கிறது. ரூபாய் மட்டுமல்ல பவுண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவும்கூட சரிந்துவருகின்றன.

பின்வாங்கும் முதலீட்டாளர்கள்

மேற்கத்திய முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யும் அதேநேரத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கிக்கொள்கின்றனர். இதனால் இரட்டைச் சேதம் ஏற்படுகிறது. வளரும் நாடுகளின் பொருளாதாரச் சூழலும் அரசியல் சூழலும் நிலையற்றதாக மாறுவதும் இன்னொரு காரணம். துருக்கி, தென்னாப்பிரிக்காவில் இந்தியாவைவிட வேகமாகச் செலாவணி மதிப்புச் சரிவு நேரிட்டுள்ளது இதற்கு நல்ல உதாரணம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், எந்த நாடாவது வெளிவர்த்தகப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால், அந்நாட்டின் செலாவணி மதிப்பைக் குறைத்துக்கொள்ளுமாறு யோசனை கூறப்படும். அப்படிச் செய்தால், அந்நாட்டின் பொருட்களைக் குறைந்த விலைக்கு நிறைய வாங்க முடியும் என்பதால், அவற்றுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதி பெருகும். வெளிவர்த்தகப் பற்றுவரவில் துண்டுவிழுவது குறையும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த உத்தி பலனளிக்கவில்லை. காரணம், ஒரே சமயத்தில் பல நாடுகள் தங்களுடைய நாட்டுச் செலாவணியின் மதிப்பைக் குறைத்துக்கொண்டால் சர்வதேசச் சந்தையில் பல நாடுகளின் பொருட்கள் விலை மலிந்துவிடும். எனவே, எந்த ஒரு நாட்டுக்கும் அதிக பலன் கிடைத்துவிடாது. ரூபாயின் மதிப்பு சரிந்தாலும்கூட இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துவிடாது. இறக்குமதியும் சரிந்துவிடாது. சிலவகைப் பொருட்களின் இறக்குமதி அத்தியாவசியமாக இருப்பதால், அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டும். கச்சா பெட்ரோலியம் இதற்கு நல்ல உதாரணம்.

நீர்வட்ட விளைவுகள்

இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணிசமான அளவு வெளிநாடுகளின் செலாவணிகள் கையிருப்பில் உள்ளன. உடனடியாக நமக்குப் பெருத்த தட்டுப்பாடு அல்லது நெருக்கடி வராது. நம்முடைய கவலையெல்லாம் இப்படி ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறதே என்பதைப் பற்றித்தான். இப்படியே தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதாரத்தை இது பாதிக்கத் தொடங்கலாம். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் டீசல்-பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. இது நாளடைவில் போக்குவரத்துச் செலவிலும், போக்குவரத்து மூலம் கொண்டுசெல்லப்படும் சரக்குகளின் விலையிலும் நீர்வட்ட விளைவை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், பால் என்று ஏராளமான உணவுப் பொருட்கள் அன்றாடம் வாகனங்களில்தான் ஏற்றி அனுப்பப்படுகின்றன என்பதால் அவற்றின் விலையும் உயரும். அத்துடன் இறக்குமதியாகும் அவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். டாலர் கணக்கில் கடன் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த நேரும். இதனால் அவற்றின் லாபம் குறையும், செலவு அதிகமாகும்.

திருத்தும் வழிகள்

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, அவசியமில்லாத இறக்குமதிகளைத் தவிர்க்கவும் அவசியமானவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை குறைவாக இருந்தபோது, அரசுக்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் மத்திய அரசு அதன் மீது உற்பத்தி வரியை அதிகமாக விதித்தது. எனவே, உற்பத்தி வரியைக் குறைத்தாக வேண்டிய தார்மிகக் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அடுத்ததாக, ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் டாலர்களைச் சந்தையில் விடுவிக்கலாம். இதனால் சந்தையில் டாலர் கிடைப்பது அதிகமாகி ரூபாயின் மதிப்பு சரிவது கட்டுப்படலாம். ஆனால், கையிருப்பில் உள்ள டாலர்களை அதிகம் செலவிட்டால் பிறகு நிலைமை சிக்கலாகும்போது நெருக்கடி அதிகமாகிவிடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

இப்போது பணவீக்க விகிதம் 4%. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு (எம்பிசி) கூடி வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை மேலும் உயர்த்த நேரிடலாம். இது பணவீக்க விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். காரணம், நிறுவனங்களின் லாபம் குறையும். நிறுவனங்களின் லாபம் குறையும் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விலகுவார்கள். அது ரூபாயின் மதிப்பை மேலும் சரித்துவிடும்.

வெளிநாடு வாழ் இந்தியர்

இச்சூழலில் மிகச் சிறந்த வழி, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கடன் பத்திரங்களை விற்று டாலர்களை நேரடியாகத் திரட்டுவதுதான். மூன்று ஆண்டுகள் முதிர்வுக் காலம் என்று குறிப்பிட்டு, வட்டியையும் உள்நாட்டு இந்தியர்களுக்குள்ள அளவே அறிவித்தாலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். அதனால் டாலர் கையிருப்பு கணிசமாக உயரும்.

ரூபாயின் செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி தற்காலிகமானது. ஆனால், ஒரு டாலருக்கு 70 ரூபாய் என்ற அளவுக்கு மட்டுமே இது ஸ்திரமாகக்கூடும். இந்தியப் பொருளாதாரம் இதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாகக் குறையாமலும் உயராமலும் இருப்பது அவசியம். இல்லையென்றால், இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தனிநபர் முதலீட்டாளர்களும் தங்களுடைய முடிவை வேகமாக மாற்றிக்கொள்வார்கள். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

பாஸ்கர் தத்தா,

அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர்,

தமிழில்: சாரி, 'தி இந்து' ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x