Published : 13 Sep 2018 09:15 AM
Last Updated : 13 Sep 2018 09:15 AM

மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம்

மாலத்தீவு நாட்டில் செப்டம்பர் 23 அன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனம் எழுந்திருக்கிறது. சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் மாலத்தீவை இந்தியா எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. சீனாவை நோக்கி மாலத்தீவு நகர்வதற்கு மாலத்தீவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியரசியலின் முக்கியக் களமாக மாறியிருக்கிறது மாலத்தீவு.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உறவு கொண்டவை. 1988 நவம்பரில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அந்நாட்டைக் கைப்பற்ற முயன்றபோது ராணுவரீதியாகத் தலையிட்டு அதன் இறையாண்மையையும் ஆட்சியதிகாரத்தையும் காப்பாற்றியது இந்தியா. அதிலிருந்து இரு நாடுகளுக்குமான உறவு மேலும் வலுப்பட்டது. மாலத்தீவுக்குப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளை இந்தியா தொடர்ந்து அளித்துவந்தது.

உறவும் விரிசலும்

2004-லிருந்து மாலத்தீவுகளில் மக்களாட்சிக்கு ஆதரவான இயக்கம் வலுப்பெறத் தொடங்கியபோது அந்நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா உண்மையான அக்கறையைக் காட்டியது. 1978-லிருந்து அங்கு ஆட்சியிலிருந்த அதிபர் கயூமின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் அணிதிரளத் தொடங்கினர். இந்தியாவும் சர்வதேசச் சமூகமும் அளித்த அழுத்தங்களின் காரணமாக 2008-ல் முதன்முறையாக, பல கட்சிகள் போட்டியிட்ட சுதந்திரமான, நேர்மையான தேர்தல் மாலத்தீவில் நடந்தது. அந்நாடு சர்வாதிகார ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறுவதற்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்தது. அந்தத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பார்வையாளர்களும் அனுப்பப்பட்டனர். அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலிருந்த மொகமத் நஷீத் அந்தத் தேர்தலில் கயூமை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். 2012 பிப்ரவரி மாதம் மாலத்தீவில் அரசியல் நெருக்கடி உருவாகும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராகவே இருந்தது.

2012-ல் எதிர்க்கட்சிகளும், சுயநல நோக்கம் கொண்ட சில குழுக்களும் ஒன்றுசேர்ந்து நஷீத்துக்கு நெருக்கடி தந்தன. இதையடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழத் தொடங்கியது அப்போதுதான்!

சீனாவிடம் நெருக்கம்

ரூ.3,500 கோடி மதிப்பில், மாலே சர்வதேச விமான நிலையத்தைப் புதுப்பித்தமைப்பது தொடர்பாக

ஜி.எம்.ஆர். என்ற இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டிருந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டது இந்த விரிசலைத் தெளிவாகக் காட்டியது. புதிய அரசின் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டனர். இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் விதமாக மாலத்தீவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனா காலூன்றத் தொடங்கியது. 2014 செப்டம்பரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த 42 ஆண்டுகளில் சீன அதிபர் மாலத்தீவுக்கு வந்தது அதுவே முதல் முறை.

தெற்காசியப் பிரதேசத்தில் உள்ள வேறு சில நாடுகளில் நடப்பதைப் போலவே இங்கும் சீனா நிதியுதவி, கடன் ஆகியவற்றை அளித்து பல முக்கியமான, பெரிய அளவிலான அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியது. பொருளாதார ஒத்துழைப்பாகத் தொடங்கிய சீன-மாலத்தீவு உறவு, ஒருகட்டத்தில் பாதுகாப்பு-ராணுவம் தொடர்பான விவகாரங்களுக்கும் விரிவடைந்தது. சீனாவின் கப்பற்படை கப்பல்கள் மாலத்தீவுக்கு நட்புரீதியில் விஜயம் செய்தன. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து துறைமுகங்களைக் கட்டும் பணியில் சீனா ஆர்வம் காட்டியது.  சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் பங்கேற்பதில் மாலத்தீவு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இந்தத் திட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்பதுடன் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனைகளையும் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது சில தீவுகளைச் சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கும் விட்டிருக்கிறது மாலத்தீவு; அதுவும் மிகக் குறைந்த தொகைக்கு! சுற்றுலாவை வளர்ப்பதற்காக இவ்வாறு குத்தகைக்கு விடப்பட்டதாக விளக்கமும் சொன்னது.

இந்தியாவின் கவலை

எல்லாவற்றுக்கும் மேலாக, அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட மாலத்தீவு நாடாளுமன்றம் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. மாலத்தீவில் இப்படியெல்லாம் நடப்பது இதுவே முதல் முறை. இத்தனைக்கும், 17-வது சார்க் மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான், 2011 நவம்பரில் சீனா தனது தூதரக அலுவலகத்தை மாலத்தீவுகளில் திறந்தது. இந்நிலையில் மாலத்தீவின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மாலத்தீவுக்கு இந்தியா தந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும், அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் அனுப்பப்பட்ட குழுவினரையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மாலத்தீவு சமீபத்தில் கூறியிருப்பது பிரச்சினையை மேலும் அதிகரித்திருக்கிறது. சீனாவுடனான நெருங்கிய உறவின் காரணமாகவே மாலத்தீவு இவ்வாறு துணிச்சலாக நடந்துகொள்கிறது. அதேசமயம், மாலத்தீவில் ராணுவத் தளங்களை அமைப்பதில் சீனா ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தின் காரணமாக ராணுவத் தளங்களை அமைக்கச் சீனாவுக்கு இடமளிப்பது மாலத்தீவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

பொது வேட்பாளர்

மாலத்தீவில் இன்று நிலவும் அரசியல் சூழலில் வெளிப்படைத்தன்மை இல்லை. பேச்சு சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்திருப்பது, எதிர்க்கட்சியினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், மக்களாட்சி நிறுவனங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பது ஆகியவை பெரிதும் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன. இந்த அடக்குமுறைகள் சர்வதேச அமைப்புகளாலும் தனிப்பட்ட பார்வையாளர்களாலும் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம்காட்டி 2018 பிப்ரவரி 5-ல் அதிபர் யாமீன், நெருக்கடிநிலையை அறிவித்தார். இது 45 நாட்களுக்கு நீடித்தது.

இந்தச் சூழ்நிலையில் மாலத்தீவு அதிபர் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டுமென பரவலாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிபர் யாமீனைத் தோற்கடிக்கவும் நாட்டின் அரசியலை இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இந்தத் தேர்தலின் முடிவு இந்தியா, சீனாவுடனான மாலத்தீவின் உறவின் பாதையைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

- தோ.சி.கார்த்திகேயன், துணைப் பேராசிரியர், அரசியல் மற்றும் சர்வசேதச உறவுகள் துறை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: tckmcc@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x