Published : 11 Sep 2018 09:03 AM
Last Updated : 11 Sep 2018 09:03 AM

377-வது பிரிவு தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் காட்டும் புதிய திசை!

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுக்குப் புதிய விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர்’ (எல்ஜிபிடிகியூ) சமூகத்துக்கு மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்துக்கும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது. ‘நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் மத்திய அரசு’ வழக்கில் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில், பிரிட்டிஷ் காலத்துச் சட்டத்தில் நிலவிய குற்றத்தன்மையை நீக்கி எல்ஜிபிடிகியூ சமூகத்தவரைக் குற்ற உணர்விலிருந்தும் தண்டனை ஆபத்திலிருந்தும் இந்தத் தீர்ப்பு காப்பாற்றியிருக்கிறது.

ஐபிசி 377-வது பிரிவு, ஒருவரின் அந்தரங்க முடிவில் அத்துமீறி தலையிடுகிறது என்பதை அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். “தனக்கென்று ஒரு துணையை வேண்டுவது, முழுச் சம்மதத்துடன் (Consensual) அத்துணையுடன் உடலுறவு கொள்வது, அத்துணையின் அன்புக்காக ஏங்குதல், அந்த ஏக்கத்தை மன - உடல் உறவுகள் மூலம் பூர்த்தி செய்துகொள்வது ஆகியவை உலகம் முழுக்க மனித சமூகத்துக்கு இயற்கையானதுதான். இதை எப்படி, யாருடன் மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தலையிட அரசுக்கு உரிமையே கிடையாது. சமூகமும் இத்தகைய மனித உரிமைகளைத் தங்களுடைய பெரும்பான்மைவாதக் கண்ணோட்டத்தில் கட்டுப் படுத்தக் கூடாது” என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

தவறான புரிதல்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு குடியுரிமைக்கு மட்டுமல்ல, உடலுறவு தொடர்பான தனி மனித விருப்பத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் தெளிவாக விளக்கியுள்ளனர். 377-வது பிரிவானது, தன்பாலின உறவாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்த்து, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவோ அல்லது மனிதர்களே அல்ல என்றோ குற்றஞ்சாட்டுகிறது. குறிப்பிட்ட முறையில் அந்தரங்க உறவு கொள்வதையோ, அத்தகைய விருப்பத்தையோ மட்டும் 377 தடுத்து தீங்கு விளைவிக்கவில்லை. எதிர்பாலினத் திருமணமும் உடலுறவும் மட்டும்தான் தார்மிகமானது, ஏற்கத்தக்கது என்று சமூகத்தின் ஆழ்மனதில் பதியவைத்துவிட்டது.

பாலின வேட்கைக்காக ஒருவரைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்ற அம்சமும், காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மரபுகள் காரணமாக மீறப்பட்டது. எனவேதான், நீதிபதிகள் 377-ன், குற்றத்தன்மையை நீக்க நேர்ந்திருக்கிறது (Decriminalised). ஒருவர் தன் விருப்பப்படி தனது ஆளுமையை வளர்த்துக்கொள்ளலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் சட்டப்படியான தார்மிக உரிமையாகும். எல்ஜிபிடி சமூகத்தவர் தங்கள் விருப்பப்படி கண்ணியமாக வாழ அளிக்கப்பட்டுள்ள உரிமையானது, அரசியல் சட்டம் அளிப்பதாகும். ‘ஐபிசி 377-ன் தார்மிக விழுமியங்களுக்கும், அரசியல் சட்டம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் விழுமியங்களுக்கும் இடையில் நிரப்பப்பட முடியாத இடைவெளி நிலவுகிறது’ என்று நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டியிருப்பது இதைத்தான்.

கண்ணியமாக வாழும் உரிமை, சிறுபான்மையினரின் சுதந்திரம் ஆகியவற்றில் சமூகத்தில் பெரும்பான்மையினர் என்ன கருதுகின்றனரோ அதைத்தான் அங்கீகரிக்க வேண்டும் என்பது இத்தீர்ப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ‘சமூக தார்மிகங்களில் எப்படியிருக்க வேண்டும் என்று பெரும்பான்மை வலு அடிப்படையிலான அரசுகளின் முடிவுகளுக்கு இது விடப்படவில்லை’ என்று நீதிபதி நாரிமன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சிறுபான்மையினரின் உரிமைகள்

சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய் வதில் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள உரிமையையும் கடமையையும் (சமுதாயத்தில் பெரும்பான்மையினர் என்ன கருதினாலும், ஆட்சியில் இருக்கும் பெரும் பான்மையினர் என்ன விரும்பினாலும்) வலியுறுத்தியிருப் பதுடன், அரசியல் சட்டத்தைக் காக்கவும் தயார் என்பதையே நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.

பசு கடத்தல் அல்லது குழந்தைகள் கடத்தல் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக அப்பாவிகளை, கும்பல்கள் அடித்துக்கொல்வதே வழக்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அரசு வெறும் பார்வையாளராக வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது; இந்நிலையில் எல்லாவிதமான சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தனக்குள்ள பொறுப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

‘அரசியல் சட்டத்தின் நோக்கமே சமூகத்தை மாற்றுவதுதான்; அப்படி மாற்றும்போது நீதி, விடுதலை, சமத்துவம், தோழமை ஆகிய லட்சியங்களையும் கைவிடாமல் அரவணைக்க வேண்டும்’ என்று நீதிபதி மிஸ்ரா குறிப்பிட்டிருக்கிறார். அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாகச் செயல்பட்டுக்கொண்டே சமூகத்தை உருமாற்றம் செய்யும் கடமை அரசு, நீதித் துறை, குடிமகன் என்று மூன்று தரப்புக்குமே உள்ளது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இத்தீர்ப்புக்குப் பிறகு நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சட்டம் சமூகத்தில், கலாச்சாரத்தில், சட்டத் துறையின் ஆழ்மனதில் ஏற்படுத்தும் தவறான கண்ணோட்டம் மிகவும் ஆழமானது. அதை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பிரிட்டிஷ் அரசால் குற்றப் பரம்பரையினர் என்று அடையாளம் காணப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான உணர்வு இன்னும் மங்கவில்லை. அதன் விளைவை அரசும் சமூகமும் எடுக்கும் நடவடிக்கைகளில் இப்போதும் பார்க்க முடியும்.

ஐபிசி 377 நீக்கப்படவில்லை, அப்படியே தொடருகிறது. ஆனால், தன்பாலின உறவாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கத் தேவையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பை மத்திய அரசு மக்களிடையே பரவச்செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல் துறையினர் இதைத் தங்களுடைய துறைகளில் உள்ளவர்களுக்கு எடுத்துக்கூறி, மிகுந்த கவனத்துடன் செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதி நாரிமன் கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பால் உருமாறியிருக்கும் அரசியல் சட்டம், விரிவான எல்லையைக் கொண்டது. சாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள், ஒரே பாலினத் திருமணங்கள் செய்துகொள்ளும் இணையர்கள் ஏற்கெனவே சமூக தார்மிக விழுமியங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டுள்ளனர். இந்த விழுமியங்கள் அரசியல் சட்டத்துக்குப் பொருந்துவதாக இல்லை. விரும்பியவரிடம் அன்பு செலுத்துதல் என்பது எல்ஜிபிடிகியூ சமூகத்தவருடைய போராட்டம் மட்டுமல்ல, நம் அனைவருடைய போராட்டமும்கூட என்று நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் இந்த முடிவின் மூலம் அரசியல் சட்டத்தின் உருமாற்ற சக்தியை ஒருமுகப்படுத்தியிருக்கிறது. கண்ணியம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு சமூகத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிமையுண்டு என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும் பழைய நம்பிக்கைகளிலேயே உழன்றுகொண்டிருக்கும் சமூகம், சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் செயலில் ஈடுபட்டால் நீதிமன்றம் அவர்களுக்குத் துணைநிற்கும் என்ற உண்மை உரத்து கூறப்பட்டிருக்கிறது. இனி இந்தியா பெரும்பான்மை வலுவை மட்டுமே சார்ந்த ஜனநாயக நாடாக இருக்காது, அரசியல் சட்டத்தைச் சார்ந்த ஜனநாயகமாகவே இருக்கும் என்ற புதிய திசைவழி இத்தீர்ப்பின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது!

- அரவிந்த் நாராயண்,

பெங்களூருவில் உள்ள மாற்று சட்ட அரங்கின் நிறுவன உறுப்பினர்.

 ‘தி இந்து' ஆங்கிலம். தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x