Published : 06 Sep 2018 10:00 AM
Last Updated : 06 Sep 2018 10:00 AM

விலையோடு முடிவதில்லை விவசாயிகளின் பிரச்சினைகள்!

விவசாயிகளின் போராட்டங்கள் எதுவென்றாலும் பிரதானமாக இருப்பது, ‘சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்பதாகும். சுவாமிநாதன் குழு என்று அறியப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகள் என்று சுட்டிக்காட்டப்படுவது ‘குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஒட்டுமொத்த செலவு மற்றும் அந்தச் செலவில் 50% சேர்த்து நிர்ணயம் செய்வது’ என்பதாக மட்டுமே இருக்கிறது. இன்றைக்கு விவசாயிகள் போராடும் பல்வேறு கோரிக்கைகளையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கும் ஆலோசனைகளை தேசிய விவசாயிகள் ஆணையம் தந்துள்ளது.

நாட்டில் விவசாயத்தில் நெருக்கடி மிகுந்தும் அதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாகவும் இருந்த காரணத்தினால் இந்திய அரசால் 2004-ல் பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையில் எட்டுப் பேர் கொண்ட தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. 20 மாநிலங்களில் விவசாயிகளோடும் வேளாண் மற்றும் ஏனைய அறிவியல் அறிஞர்களோடும் கலந்துரையாடி இந்த ஆணையம் தனது பரிந்துரைகளைக் கொடுத்தது. அந்தப் பரிந்துரைகள் 5 அறிக்கைகளாக 2004 முதல் 2006 வரை வெளியிடப்பட்டது. இதன் இறுதி அறிக்கை அக்டோபர் 2006-ல் மைய அரசிடம் கொடுக்கப்பட்டது.

தேவைக்கேற்ற உற்பத்தி

ஆணையத்தின் பரிந்துரைகளாவது, நிலச் சீர்திருத்த சட்டங்களின் மூலம் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை, நிலமற்ற விவசாயிகளிடம் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் மற்றும் காடுகளின் மீதான மலைவாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை விவரிக்கின்றது. மிக முக்கியமாக, நில உபயோக ஆலோசனை நிலையத்தோடு இணைந்து செயல்படுவதன் மூலம், தட்பவெப்ப நிலைக்கேற்ற, சந்தையின் செயல்பாடுகளுக்கேற்ற பயிர்கள் பயிரிடப்படுவதைக் கிராம அளவில் உறுதிசெய்ய முடியும்.

சர்வதேச வர்த்தக நிறுவனம்போல, இந்திய அளவில் இந்திய வர்த்தக நிறுவனம் (ஐடிஓ) என்ற ஒன்று இந்திய அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் முக்கிய வேலை என்பது, சந்தை நிலவரங்களை ஆராய்வது, எந்தெந்தப் பயிர்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும், எவற்றில் தேவையைவிட குறைந்திருக்கும், அவ்வாறு இருப்பின் சந்தை விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற ஆய்வினை மேற்கொள்வது. அதாவது, ஐடிஓ மற்றும் தேசிய நில உபயோக ஆலோசனை சேவை மையம் இரண்டும் இணைந்து செயல்படுத்துவதன் மூலம், வேளாண் பொருட்கள் உரிய விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதோடு, ‘தேவைக்கேற்ற உற்பத்தி’யைக் கொண்டு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் வழிவகை செய்கின்றது.

விவசாயிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி

மற்றொரு முக்கியமான பரிந்துரை, விவசாயிகளை உள்ளடக்கிய வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். அதாவது, வேளாண் தொடர்பான ஆராய்ச்சிகளில் விவசாயிகளின் கருத்துகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டு, அதற்கேற்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதோடு, ஆராய்ச்சி முடிவுகளைக் களத்துக்குக் கொண்டுசெல்லும் விவசாய அறிவியல் நிறுவனங்களில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஒரு துறை இருக்க வேண்டும். இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலம் எவ்வாறு அதிகபட்ச விலையை விவசாயிகளுக்குத் தருவதென்பதைக் கண்டறிய முடியும்.

ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் மண் வள அட்டை தரப்பட வேண்டும். இந்த அட்டையில், அந்தந்த குடும்பத்திடம் உள்ள விவசாய நிலங்களின் அறிவியல் தன்மைகள் (மண் கட்டுமானம், பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்புழுக்களின் அளவு) விவரிக்கப்பட வேண்டும். எனவே, இதன் அடிப்படையில் பயிர்கள், இடுபொருட்கள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். தேர்ந்த பயிர் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஊரகத் தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். இந்த மையங்கள், வட்டார அளவில் உள்ள ஊரக வள மையத்தோடு இணைந்து விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களைக் கொண்டுசேர்க்கும்.

விவசாயக் கடன்களைப் பொறுத்தமட்டில் எல்லோருக்கும் நிறுவனக் கடன்கள் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் கொள்ளை வட்டியில் தரப்படும் தனியார் கடன்களை விவசாயிகள் பெறுவதைத் தவிர்க்க முடியும். மேலும், நிறுவனக் கடன்கள் 4% வட்டியில் விவசாயிகளுக்கே தரப்பட வேண்டும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் உரிய நேரத்தில் அரசாங்கத்தின் மூலம் கொள்முதல் செய்தல் அவசியம். இதற்கான கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் இருப்பதையும், அவை சரியான சமயத்தில் செயல்படுவதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.. குறிப்பாக, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளின் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதோடு அதிலிருந்து 50% சேர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதுமட்டுமல்ல, விளைவிக்கப்படும் ஊட்டச்சத்துமிக்க பொருட்களுக்கான சந்தைகளை உறுதிசெய்யும் விதமாக, பொதுவிநியோகத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். அதாவது, அரிசி மற்றும் கோதுமை மட்டுமல்லாது சிறுதானியங்கள் மற்றும் ஏனைய ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களையும் விநியோகத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

வளங்குன்றாத வேளாண் நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் காரணிகள், தகவல் தொழில்நுட்பங்களை செம்மையாகப் பயன்படுத்துவது, பெண்களுக்கான பங்கினை உறுதிசெய்வது, பாரம்பரிய அறிவு மற்றும் விவசாய முறைகளைக் கண்டறிந்து பாதுகாப்பதென விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளைத் தேசிய விவசாயிகள் ஆணையம் கூறியுள்ளது. அதைக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற ஒற்றைப் பரிந்துரைக்குள் சுருக்கிவிடக் கூடாது.

- ஆர்.கோபிநாத்,

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x