Published : 20 Aug 2018 09:15 AM
Last Updated : 20 Aug 2018 09:15 AM

கருணாநிதி: இந்தி பேசாத மக்களின் உரிமைகளைக் காத்தவர்!

தமிழ்த் தேசிய நாயகர் மு.கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, ஆங்கில ஊடகங்களில், பல்வேறு அஞ்சலிக் குறிப்புகளைப் பார்த்தேன். பெரும்பாலானவை, ‘விக்கிபீடியா’ தகவல்களை நகலெடுத்து எழுதப்பட்டவை. சுயமாக எழுதப்பட்ட செய்திக் கட்டுரை என்று காட்டிக்கொள்வதற்காகப் பல சொற்களுக்குப் பதிலாக அவற்றுக்கு இணையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்தி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான செய்திகளில், அவர் இந்தி அதிகாரத்துக்கும் இந்தித் திணிப்புக்கும் எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் என்று குறிப்பிடப்படவேயில்லை. இந்தி ஊடகங்களின் மெளனமும் புறக்கணிப்பும், எரியும் உண்மைகளை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

வங்க பிராமணனான நான் பள்ளியில் முதன்மை மொழியாக வங்காளத்தையும் பாட மொழியாக ஆங்கிலத்தையும் பயின்றவன். அண்ணாவும் அவரது முக்கியத் தளபதியான கருணாநிதியும் பல ஆண்டுகளாக, குறிப்பாக 1965-ல் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மரபின் தாக்கம் கொண்டவை எனது வாழ்க்கையும் உலகப் பார்வையும். இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர்கள் போராடினர். இந்தி பேசாத மக்கள், குறிப்பாக வேலை தேடி இடம்பெயரும் மக்கள் முற்றிலும் மறக்கடிக்கப்படும் அபாயத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றினர். இந்தியாவின் சேவைத் துறை சார்ந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஆங்கிலம் இருப்பதும், இளைய சமுதாயத்தினரின் அன்றாட வாழ்வில் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் கலந்திருப்பதும் தமிழ்த் தலைவர்களின் பெருமைக்குரிய தலைமுறையால் சாத்தியமானவை. அவர்களில் கருணாநிதி மிக முக்கியமானவர்.

இந்தியாவின் எதிர்கால அரசியல் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதித்துவந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரான ஆர்.எஸ்.துலேகர், இந்துஸ்தானி மொழி தெரியாதவர்கள் அந்த

அவையில் உறுப்பினராக இருக்க உரிமை யில்லை என்று பகிரங்கமாகப் பேசினார். இந்துஸ்தான் பிரதேசம் அல்லது இந்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் இதே சிந்தனையுடன் பேசிவந்தனர். அவர்களில் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் தொடங்கி, மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள், இந்து வகுப்புவாதிகள் வரை பல்வேறு தரப்பினரும் உண்டு.

இதையடுத்து, சமரசத் திட்டம் ஒன்று எட்டப்பட்டது. அதன்படி, இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தற்காலிகமாக இருக்கும் என்றும், மற்றொரு அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி எனும் அந்தஸ்திலிருந்து ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தியே ஒரே அலுவல் மொழியாகும் எனும் சூழல் உருவானது. அலுவல் மொழி நீடிப்பதற்கான காலக்கெடு தொடர்பான உட்கூறு இருந்த நிலையில், அந்த சமரசத் திட்டம் எந்நேரமும் வெடிக்கும் வெடிகுண்டாக இருந்தது.

உண்மையில், அந்த சமரசத் திட்டமே இந்தி பேசாத உயர் பிரிவினருக்கும், இந்தி தேசியவாத சமூகத்துக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம்தான். இந்தத் திட்டத்தின்படி, இந்தி பேசாத பிரதேசங்களைச் சேர்ந்த - ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே வேலைவாய்ப்புகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். மாறாக, இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறு உண்டு. ஆக, இதில் பெரும் இழப்பைச் சந்தித்தவர்கள் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த வெகுஜன மக்கள்தான். 1946 காலகட்டத்தில் தமிழ் பிராமணர்களே ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பிரதிநிதிகளாவதற்கு இது வழிவகுத்தது. அவர்களேகூட இந்தி ஆதிக்கவாத மனப்பான்மை கொண்டவர்களால் தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது.

அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக கருணாநிதி இருந்த நிலையில், அவரது தலைமையிலான திமுகவின் எழுச்சியானது, தமிழர்களின் நிலத்தில் இந்தித் திணிப்பு உறுதியாக எதிர்க்கப்படும் என்பதை உறுதிசெய்தது. டெல்லியில் இருந்த இந்தி ஆதிக்கத்தின் அழுத்தத்தின் காரணமாக, அலுவல் மொழி அந்தஸ்திலிருந்து ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தியே ஒரே அலுவல் மொழியாகும் என்ற சூழல் உருவானபோது தமிழர்கள் அதை எதிர்த்தார்கள். கன்னடர்கள், தெலுங்கர்கள், வங்காளிகள் ஆகியோரும் இதை எதிர்த்தார்கள் என்றாலும், தமிழகத்தில் உருவான எதிர்ப்புதான் தேசிய அளவிலான எதிர்ப்பாக இருந்தது.

தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் எந்த அளவுக்குக் குறையும் என்பதைத் தமிழர்களால் உணர முடிந்தது. இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் இளைஞர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால், பன்னாட்டு அரசியல், பல மொழிகள் தொடர்பான அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் மரபும் வரலாறும் கொண்ட தமிழர்கள் உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றினார்கள். தமிழர்கள் காட்டிய தீவிர எதிர்ப்பின் காரணமாக, இந்தி பேசாத மக்கள் ஒப்புக்கொள்ளும் வரை, இந்தியை ஒரே அலுவல் மொழியாக்குவது எனும் முடிவைத் தள்ளிவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், ஒருபோதும் அது சாத்தியமாகாது!

ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தக்க வைக்கப்பட்டதால், இந்தி பேசாத குடிமக்களில் குறைந்தபட்சம் மேட்டுக்குடியினராவது முன்னேற்றப் பாதையில் செல்ல முடிந்தது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். கருணாநிதி உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களின் தலைமுறையினரின் காரணமாகவே, என்னால் இந்தக் கட்டுரையை எழுத முடிகிறது; ‘டெய்லி ஓ’ இதழின் ஆசிரியராக இருக்க முடிகிறது; ‘டெய்லி ஓ’ போன்ற ஆங்கில இதழ்கள் இயங்க முடிகிறது. ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், ஆங்கிலப் பாடப் புத்தகங்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டுடனான ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சூழல் போன்றவை இந்திய ஒன்றியத்தில் நீடிக்கின்றன என்றால், அதற்குக் கருணாநிதியின் அரசியல் ஒரு காரணம்.

கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்களின் சக்தி தமிழகத்தின் முகத்தையே மாற்றியது. மொழி அடையாள அரசியலின் வெற்றியாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற திராவிட மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றின.

இந்தி பேசும் மக்களும், இந்தி பேசாத – ஆங்கிலம் படித்த மக்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சூழலில், இந்தி பேசாத பெரும்பான்மையான மக்கள் இன்னமும் வாய்ப்பு வட்டத்துக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, வங்கத்தில் உள்ள 83% வங்காளிகளுக்கு வங்க மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இந்த நிதர்சனத்தை கருணாநிதி தெளிவாக உணர்ந்திருந்தார். மொழி அடிப்படையிலான ஒரு தேசத்தில், மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்கான போராளி கருணாநிதி. மத்திய அரசின் ஆதிக்க சக்திக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். அரசியல் சட்டத் திருத்தங்கள்தான் சட்டரீதியான மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கருணாநிதி தலைமுறையைச் சேர்ந்த போராளிகள் உணர்த்தியிருக்கிறார்கள்.

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஒன்றியம்தான் கருணாநிதியின் கனவாக இருந்தது. அதனால்தான், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான அரசியல் சட்ட உரிமைகளும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். உலகம் முழுவதுமே, ஒருவரது மொழியை மற்றவர் மீது திணிப்பது என்பது வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட குடிமக்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. பல மொழிகள் கொண்ட சமூகத்தில், ஒருவர் ஒற்றுமைத்தன்மையைக் கொண்டிருக்கலாம் அல்லது ஒற்றைத்தன்மையைக் கொண்டிருக்கலாம். இரண்டையும் ஒருவர் கொண்டிருக்க முடியாது!

கர்க சாட்டர்ஜி

பத்திரிகையாளர், மொழியுரிமைச் செயற்பாட்டாளர்.

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x