Published : 19 Aug 2018 07:48 AM
Last Updated : 19 Aug 2018 07:48 AM

வேதாத்ரி மகரிஷி: வாழ்க்கையைக் கற்றுத்தந்த மகான்!

உலகம் அமைதி பெற வேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திவந்தவர் வேதாத்ரி மகரிஷி. மனிதகுலம் அடைய வேண்டிய தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதிக்காகத் தொடர்ந்து உழைத்தவர் அவர். எளிமையான உதாரணங்களுடன் விரிவான உலகப் பார்வையை ஏற்படுத்துவதில் ஈடுபட்டவர். எல்லா மதங்களின் சாரமும் ஒன்றுதான் எனும் கருத்தில் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை, பல தரப்பினரையும் அவர்பால் ஈர்த்தது. எளிய குடும்பத்தில் பிறந்து உன்னதமான உயரங்களை அடைந்த வாழ்க்கை அவருடையது!

சென்னை அருகே கூடுவாஞ்சேரி வரதப்பன் – சின்னம்மாள் தம்பதிக்கு 1911 ஆகஸ்ட் 14-ல் மகனாகப் பிறந்தவர் வேதாத்ரி. வரதப்பன் ஒரு நெசவுத் தொழிலாளி. யாரையும் மனம் நோகப் பேசாதவர். சின்னம்மாளுக்குப் பொதுநல அக்கறை அதிகம். ஊர்த் தொண்டாற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஏழாவது மகன் மரணமடைந்தான். அந்தத் தம்பதிக்கு எட்டாவது வாரிசாகப் பிறந்தவர்தான் வேதாத்ரி. ஒருநாள் அவர்கள் வீட்டுத் திண்ணையில் வந்து தங்கிய ஒரு சன்னியாசி, ‘வேதாத்ரி’ என்று சொல்ல அந்தப் பெயரையே தன் மகனுக்கு வைத்தார் வரதப்பன்.

அன்பொளியைப் படரவிட்டவர்

சிறுவனாக மகரிஷி இருந்தபோதே அவருக்கு மகத்தான நபர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. பாலகிருஷ்ண நாயக்கரிடமிருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டார். கிருஷ்ணாராவிடமிருந்து மருத்துவத்தையும் தத்துவத்தையும் கற்றுக்கொண்டார். தத்துவத்தைப் பிறகு முறையாக கற்றுக்கொண்டது பரஞ்சோதி மகானிடமிருந்து. இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் நிலையில் நின்று வேதாத்ரியின் உயர்வுக்கு உதவினார்கள்.

அடிப்படையிலேயே பிறர் மீது பேரன்பு கொண்டவரான வேதாத்ரி மகரிஷி, தான் நடத்திவந்த நெசவுத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 2,000 தொழிலாளர்களின் சுக துக்கங்களில் பங்கேற்றவர்.

தனது 35-வது வயதில் இறைநிலையை உணர்ந்த வேதாத்ரி, அதன் அடிப்படையில் ‘மனவளக்கலை’ எனும் வாழ்க்கை நெறியை உலகுக்கு உணர்த்தினார். அமைதி குறித்த தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக ‘அன்பொளி’ என்ற மாத இதழை 1957 மே மாதம் தொடங்கினார். அன்பு மடல், கட்டுரைகள், கவிதைகள், பயணக் குறிப்புகள் போன்றவற்றைத் தாங்கிவந்த இதழ் அது. 1958-ல் தனிமனித அமைதி மூலம் உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில், உலக சமுதாய சேவா சங்கத்தைத் தொடங்கினார். 1984-ல் பொள்ளாச்சி அருகே ஆழியாறில், ‘வேதாத்ரி மகரிஷி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி மைய’த்தை அருட்பெருஞ்ஜோதி நகரில் உருவாக்கினார்.

அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை எனும் சிந்தனை கொண்ட வேதாத்ரி, அவை இரண்டும் இணைக்கப்படும்போது உலக ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும் என்று உறுதியாக நம்பினார். தன்னை நாடி வந்தவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகா, காயகல்ப யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுத்தந்தார். கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் அவர் தந்த எளிய பதில்கள், விளக்கங்களால் வாழ்க்கை பற்றிய புரிதலை அடைந்தவர்கள் பலர்.

எழுதிய நூல்கள்

தனது இலக்கியப் பங்களிப்புகளிலும்கூட ‘வாழும் நிலை’ பற்றிய கருத்தாக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தார் வேதாத்ரி. தத்துவ இலக்கியம், ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, நாடகம், கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று பல்வேறு இலக்கிய வகைமைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சுமார் 50 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். ‘மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து’ (1958), ‘காந்தத் தத்துவம்’ (1990), ‘பாடு பாப்பா’ (1990) இவை மகரிஷியின் கவிதைத் தொகுப்புகள். 2000-ல் எல்லா கவிதைகளையும் தொகுத்து ‘ஞானக்களஞ்சியம்’ என இரண்டு பாகங்களாக வெளியிட்டார். அவர் எழுதிய ஒரே ஒரு நாடக நூல் ‘அணுவிஷம்’. இரண்டாம் உலகப் போருக்குத் தான் சாட்சியமாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகத்தை இயக்கினார். அவரது பல புத்தகங்கள் பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டன. ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

வாழும் நிலை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காணவும், அமைதி வேண்டியும், சிந்தனையை உடல்நலத்தைச் சீரமைப்பதற்காகவும் இலக்கியம் படைத்தார். “மொழிக்கு ஒழுக்கம் கூறும் நூல் இலக்கணம்; வாழ்க்கைக்கு ஒழுக்கம் கூறும் நூல் இலக்கியம்” என்று இலக்கியத்துக்கு விளக்கம் தருகிறார் மகரிஷி.

தனது கொள்கைகளை, எதிர்காலக் கனவுகளை, விருப்பங்களை ‘வேதாத்ரியம்’ எனும் தலைப்பில் கவிதையாகவே தந்துள்ளார்.

“போரில்லா நல்லுலகம் பொருள்துறையில் சமநீதி

நேர்மையான நீதிமுறை நிலவுலகுக்கோர் ஆட்சி

சீர்செய்த பண்பாடு சிந்தனையோர் வழி வாழ்வு

சிறப்புணர்ந்த பெண் மதிப்பு தெய்வநீதி வழிவாழ்தல்

தேர்த்திருவிழா தவிர்த்தல் சிறுவர்கட்கே விளையாட்டு

செயல்விளைவு உணர்கல்வி சீர்காந்த நிலை விளக்கம்

பார்முழுவதும் உணவுநீர் பொதுவாக்கல் பலமதங்கள்

பலகடவுள் பழக்கம் ஒழித்துண்மை ஒன்றைத் தேர்ந்திடுதல்.”

மனிதகுலத்தின் மேம்பாட்டுக்கு வழிகாட்டும் உயரிய சிந்தனை அது!

- பா. வெள்ளை, புலவர், பேராசிரியர்.

தொடர்புக்கு: pulavarpavellai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x