Published : 17 Aug 2018 09:08 AM
Last Updated : 17 Aug 2018 09:08 AM

பாசன அமைப்புகளை விவசாயிகளே நிர்வகிக்க வேண்டும்!

மேட்டூர் அணையின் 85 ஆண்டுக்கால வரலாற்றில்39-வது முறையாக 2018-ல் நிரம்பியிருக்கிறது. கனமழை தொடர்வதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து தொடர்ந்து நீரை வெளியேற்றுகிறது கர்நாடகம். இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு காவிரியில் வெள்ளம் பாய்கிறது. நல்ல சம்பா சாகுபடி காணலாம் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு பேசுகின்றனர். ஆனால், இப்படி காவிரி ஆண்டுதோறும் கரைபுரண்டு ஓடுவது சாத்தியமில்லை என்பதை பருவநிலை நிபுணர்கள் எச்சரித்துவிட்டனர்.

நல்ல பருவமழைக் காலத்திலும்கூட தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகிறது தமிழகம். பருவநிலை மாறுதலையும் தவிர்த்து வேறு காரணங்களும் உண்டு என்பதையே இந்தப் பற்றாக்குறை உணர்த்துகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கான காரணங்களை நாம் கவனிப்பதில்லை அல்லது அக்கறை காட்டுவதில்லை. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகமாக இருக்கும் காலங்களில் ஆற்றங்கரைகளிலும் கால்வாய்களிலும் உடைப்பு எடுத்துத் தண்ணீர் வயல்களிலும் ஊருக்குள்ளும் பாய்கிறது, அல்லது பெருமளவு கடலில் கலக்கிறது. இதே போன்ற ஒரு சம்பவம் காரணமாகச் சில நாட்களுக்கு முன்னால் கல்லணைக் கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

2013-லும் இதே போல மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் கொள்ளிட ஆற்றங்கரையிலும் கீழணைப் பகுதியிலும் கரையில் உடைப்பு எடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2013 ஆகஸ்ட் 4 முதல் 8-ம் தேதிக்குள் 17 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்தப்படாமலேயே கடலுக்குச் சென்றது. அதே சமயம் காவிரியின் கடைமடைப் பகுதியில் குடிக்கக்கூட நீரில்லாத பற்றாக்குறை அடுத்த சில நாட்களிலேயே ஏற்பட்டது.

ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொண்டு 50 கோடி ரூபாய் மதிப்புக்கு நெல்லைச் சாகுபடி செய்யலாம் என்னும்போது 17 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது பெரிய இழப்பாகும். பருவநிலை மாறுதல் இதற்கு எந்தவிதத்திலும் காரணம் இல்லை.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அணைகளில் மேட்டூரும் ஒன்று. சராசரியாக 24.71 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு அது பாசன நீரை அளிக்கிறது. காவிரி வடிநிலத்தில் 700 நீர்த்தேக்கங்களை அது நிரப்புகிறது. தமிழ்நாட்டில் சுமார் 41,127 ஏரிகள் உள்ளன. குடிமராமத்து முறை கைவிடப்பட்டதிலிருந்து ஏரிகளைப் பராமரிப்பது நின்றுபோனது. இந்த ஏரிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. தூர்வாராமல் வண்டல் படிந்து மண்மேடுகள் உயர்ந்துவிட்டன. ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்களும் நீரை வெளியேற்றும் வாய்க்கால்களும் வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் அழிந்துவிட்டன. 1960-61-ல் ஏரித் தண்ணீரில் பாசன வசதி பெற்ற 9.36 லட்சம் ஹெக்டேர் பரப்பு, 2015-16-ல் 4.38 லட்சம் ஹெக்டேராக சுருங்கிவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து கல்லணை வரையிலான பாசன வாய்க்கால்களில் பெருமளவுக்குத் தூர் வாரப்படாமல் புதர் மண்டியும் களைச் செடிகள் வளர்ந்தும் தண்ணீர் பாய முடியாமல் தடுக்கப்பட்டது. 1950-51-ல் பாசன வாய்க்கால்களால் சாகுபடி நடந்த பரப்பு 7.88 லட்சம் ஹெக்டேராக இருந்தது, 2015-16-ல் 6.72 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. ஏரிகளையும் வாய்க்கால்களையும் தொடர்ந்து பராமரித்துவந்தால் ஏரிகளில் முழுக் கொள்ளளவுக்கு நீரை நிரப்புவதுடன் வாய்க்கால்களிலும் உபரி நீரைச் சேமித்திருக்க முடியும். அத்துடன் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் உடனடியாகப் பாய்ந்திருக்கும்.

காவிரி நீரோ - மழை நீரோ இனி ஒவ்வொரு துளியும் சாகுபடிக்கே பயன்பட வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளின் மீதும் தமிழ்நாட்டில் புதிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இது மிக முக்கியம். தடுப்பணைகள் மழைக்காலத்தில் தண்ணீரைத் தேக்கவும், மழைக் காலத்துக்குப் பிறகு சாகுபடிக்குப் பயன்படுத்தவும் உதவும். அதே நேரம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தமிழ்நாட்டைப் போலவே தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்ட குஜராத் மாநிலம் தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீர்மட்டத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது.

ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆறுகளின் ‘நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம்’ கொண்டுவரப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஆறுகளின் வாய்க்கால்களைச் சீரமைத்து மிகுந்த திறமையாகப் பயன்படுத்தும் வழிமுறையும் இடம்பெற்றிருந்தது. தண்ணீரைச் சேமித்து, பல வழிகளிலும் நீர்வள மேலாண்மையை ஒருங்கிணைக்க வேண்டும்.

நீர் நிர்வாக மேலாண்மையில் முக்கியமானது, தண்ணீர் கிடைப்பதே அரிதாகிவிட்ட கடைமடைப் பகுதியில், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைச் சாகுபடி செய்யாமலிருப்பது. சொட்டுநீர், தெளிப்பு முறை பாசனங்களால் ஒவ்வொரு ஏக்கரிலும் 50% வரை தண்ணீரைச் சேமிக்க முடிகிறது. அத்துடன் அறுவடையும் கூடுகிறது. நெல், கரும்பு, வாழை, காய்கறிச் சாகுபடிகளின்போது இது பற்றிய ஆய்வு நடந்துள்ளது. சுவாமிநாதன் குழு அறிக்கையும், 2015-16 பொருளாதார ஆய்வறிக்கையும்கூட பாசன மேம்பாட்டால் உற்பத்தி அதிகமானதை உறுதிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு ரகப் பயிருக்கும் தேவைப்படும் தண்ணீர் அளவு எவ்வளவு என்று தணிக்கை செய்து, அதற்கேற்றபடி பாசனத் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வைத்தியநாதன் குழு (1992) பரிந்துரை செய்திருக்கிறது.

பாசனத் தண்ணீர் தணிக்கையை இனியும் தாமதிக்கக்கூடாது. அணையில் திறந்துவிடப்படுவதில் தொடங்கி, இறுதியில் கடலில் கலக்கும்வரையில் தண்ணீரின் அளவு அளக்கப்பட வேண்டும். இடையில் தண்ணீரை வீணடிப்பதும், திருடுவதும் இதில் தெரியவரும். மகாராஷ்டிரம், குஜராத்தில் இது ஏற்கெனவே அமலில் இருக்கிறது.

நீர்நிலைகளை நிர்வகிக்க மாநில அரசையோ, உள்ளாட்சி மன்றங்களையோ விவசாயிகள் இனி நம்பியிருக்கக் கூடாது. பயனாளிகளுக்குத் தேவைப்படும் தண்ணீரை நேரடியாக வழங்கும் பொறுப்பை விவசாயிகளே ஏற்க வேண்டும். இதற்காகத்தான் ‘பங்கேற்பு பாசன வளர்ச்சி-மேலாண்மை அணுகுமுறை’ கொண்டுவரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் விவசாயிகளைக் கொண்ட ‘தண்ணீர் பயன்பாட்டுச் சங்கங்கள்’ மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தண்ணீரைச் சிக்கனமாகவும் திறமையாகவும் செலவழிக்கின்றனர். விவசாயிகளே நிர்வகிப்பதால் நிர்வாக, மேலாண்மைச் செலவுகளும் கிடையாது. ஆந்திரத்திலும் விவசாயிகளைக் கொண்ட பாசனநீர் மேலாண்மை அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சமுதாயம் சார்ந்த தண்ணீர் நிர்வாக மேலாண்மை வலுப்பட வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் இவற்றை நோக்கித் தமிழகம் நகராவிட்டால் ஒரே ஆண்டில் வெள்ளப் பெருக்கும் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத அவலமும் நம்மை வாட்டும். தண்ணீருக்காகக் குரல்கொடுப்பதோடு நிற்காமல், இப்போதும் இனிவரும் காலங்களிலும் தண்ணீரை நாம் எப்படி காக்கப் போகிறோம், செலவழிக்கப் போகிறோம் என்பதில்தான் நம்முடைய இருப்பு, வளர்ச்சி எல்லாமே அமையப்போகிறது.

பி. நாராயணமூர்த்தி, பி. அல்லி

சுருக்கமாகத் தமிழில்: சாரி, பிசினஸ்லைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x