Published : 13 Aug 2018 08:08 AM
Last Updated : 13 Aug 2018 08:08 AM

கருணாநிதி: வீழ்த்த முடியாத தலைமை!

உழைக்கும் மக்களை நேசிக்கக்கூடிய, உழைப்புச் சுரண்டலை ஒழிக்கக்கூடிய, ஜனநாயக விழுமியங்களைப் போற்றக்கூடிய, சமத்துவம் வெல்ல போராடக்கூடிய தொண்டுள்ளம் வாய்ந்த தலைவர்களின் வரிசையில் முதன்மையானவர் கருணாநிதி. பிற்போக்கான-பழமைவாத நடைமுறைகளைத் தகர்த்து, சமூகநீதியின் மூலம் ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்யவும், அதன் வழியாகச் சமத்துவத்தை வென்றெடுக்கவும் ஏதுவான வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் முற்போக்கான, புரட்சிகரமான செயல்திட்டங்களை வரையறுத்த தலைவர் அவர்.

பிறவிப் போராளியாகவே முத்திரை பதித்த கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம் எண்ணற்ற வடுக்கள் நிறைந்தது. அவர் எதிர்ப்புகளைச் சந்திக்காத நாள் இல்லை. விமர்சனங்கள் இன்றி அவருக்குப் பொழுது விடிந்ததில்லை. அவதூறுகளும் அடாத பழிகளும் அவரை அழித்தொழிப்பதற்கான ஆயுதங்களாக அவரின் இறுதி மூச்சு வரை ஏவப்பட்டன. ஆயினும், யாவற்றையும் சகித்து, தகர்த்து, சிலிர்த்தெழுந்து, வான்முட்ட உயர்ந்து, செம்மாந்து நின்றவர் அவர்.

கொள்கைப் பிடிப்பால் உயர்ந்தவர்

கருணாநிதியின் மகத்தான வெற்றிக்கு, அவரிடம் மேலோங்கி நின்ற முதன்மையான மூன்று பண்புக்கூறுகள் அடிப்படையானவை என்று நான் கருதுகிறேன். 1. இலக்கை நோக்கிய இடையறா உழைப்பு 2. புயலாய்ச் சீறும் போராடும் முனைப்பு 3. குன்றம் நிகர்த்த கொள்கைப் பிடிப்பு. இவற்றில், கொள்கைப் பிடிப்பு இருந்தாலே ஒருவருக்கு மற்ற இரண்டும் இயல்பாகச் சாத்தியமாகிவிடும். கொள்கைப் பிடிப்புதான் போராடும் முனைப்பை அள்ளிக் கொடுக்கும். அந்த முனைப்பு அவர் அடைய வேண்டிய இலக்கை நோக்கி அயராமல் உழைக்கத் தூண்டும். அந்த வகையில், ‘ஓய்வறியாச் சூரியன்’ என்று போற்றப்படும் கருணாநிதியின் அபாரமான உழைப்புக்கு அடிப்படையானது அவரது கொள்கைப் பிடிப்புதான்.

அவருடைய கொள்கைகளில் பிரதான இடம்பிடித்தது சமூக நீதி. தனது வாழ்நாள் முழுவதும் அதைக் கடைப்பிடித்தார். ஜனநாயகம்தான் அவரது கொள்கைக்கு வழிகாட்டும் கோட்பாடு. சமத்துவம்தான் அவர் எட்ட விரும்பிய இலக்கு. சமத்துவத்தை வென்றெடுக்க வேண்டுமெனில் ஜனநாயகம் தழைத்திட வேண்டும். ஜனநாயகம் தழைத்திட வேண்டுமெனில் சமூகநீதி பிழைத்திட வேண்டும். அதாவது, சமூகநீதியிலிருந்துதான் சமத்துவம். இந்தப் புரிதலே அவரது உறுதிமிக்க கொள்கைப் பிடிப்புக்கான உரமாக விளங்கியது.

பகை வென்ற கொள்கை

இத்தகைய கொள்கைப் புரிதலும் உறுதிப்பாடும்தான் அவருக்கு எதிரான பகையைப் பெருக்கியது. அவருக்கு எதிரான பகை என்பது, தேர்தல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கானது மட்டுமல்ல. அதிகாரப் போட்டிக்கான பகை என்பதையெல்லாம் தாண்டி மேலும் வேறு வகையிலான பகைகளெல்லாம் அவரைக் குறிவைத்துக் குழிபறித்தன. அவை தேர்தல் அரசியல் பகையைப் போல வெளிப்படையானவை அல்ல. அரசியல் களத்தில் அவரை வீழ்த்தியே தீர வேண்டும் என்று வெளிப்படையாக எதிர்த்தாலும், மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கும் கொள்கைப் பகையும், சமூகப் பகையும்தாம் அவர் எதிர்கொண்ட மூர்க்கமான பகைகளாகும்.

வெறுமனே வாக்கு வங்கிக்காக மட்டுமே சமூகநீதியை அவர் பேசவில்லை. சமூகநீதியை அவர் முனைப்புடன் செயல்படுத்தினார். ஆட்சியதிகாரத்தை அதற்குப் பயன்படுத்தினார். அதன்மூலம், விளிம்புநிலையில் வீழ்ந்து கிடந்தவர்களை அதிகார மையத்தில் ஆளுமை செலுத்தவைத்தார். சாதியமைப்பின் கட்டுக்கோப்பில் சம்மட்டி அடிகொடுத்தார். சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றினார். அனைத்துச் சாதியினரும் ஒரே வாழிடத்தில் கலந்து, இணைந்து வசிக்கலாம் என சமத்துவபுரம் அமைத்தார். இவ்வாறு சமூகநீதியை நிலைநாட்டும் சவால்களை எதிர்கொண்டார். இந்தக் கொள்கைப் பிடிப்புதான் அவரின் கொள்கைப் பகைவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

ஆகவே, அவரை அரசியல்ரீதியாக வீழ்த்த வேண்டியது அவர்களுக்குக் கட்டாயத் தேவையானது. ஏனெனில், அவரின் கொள்கையைக் கருவறுக்கும் தேவையிலிருந்தே அவரை மூர்க்கமாக எதிர்க்கும் நிலை மென்மேலும் வலுப்பெற்றது. குறிப்பாக, அவரின் தலைமையை வலுவிழக்கச் செய்யும் வகையில், இருமுறை திமுகவைப் பிளவுபடுத்திட அவரது கொள்கைப் பகைவர்கள் துணை நின்றார்கள். வழக்கமான, இயல்பான உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்தி திமுகவைச் சிதைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். அவருடைய பக்குவமும், முதிர்ச்சியும், வலுவான சகிப்புத்தன்மையும் நிறைவான தன்னம்பிக்கையும்தாம் அந்த நெருக்கடிகளை மிக இலகுவாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமைந்தன.

இறுதிவரை போராடியவர்

கொள்கைப் பகையை அடுத்து, சமூகப் பகையும் அவர் மீதான வெறுப்புக்கும், காழ்ப்புக்கும் அடிப்படையாக இருந்ததை நுட்பமாகப் பார்த்தால் உணர முடியும். அவரும் அதைத் துல்லியமாக உணர்ந்திருந்தார். அந்தச் சவாலை அவர் எதிர்க்கொண்ட அணுகுமுறைதான் அவரது மகத்தான வெற்றிக்கு அடித்தளமாகும். நெடுங்காலமாக இங்கே நிறுவப்பட்டிருக்கிற சாதியக் கட்டமைப்பில், நீடித்து நிலைத்து இயங்குகிற, பிறப்பின் அடிப்படையிலான உயர்வு – தாழ்வு எனும் முரண்களிலிருந்து அவர் மட்டும் எவ்வாறு தப்பிக்க இயலும்? இயல்பாகவே அவரை அங்கீகரிப்பதில் அத்தகைய சமூக அடையாளம் கொண்டவர்களுக்கு ஒரு நெருடல் இருந்தது.

பிறப்பால் உயர்வு – தாழ்வை ஏற்கும் பொதுவான உளவியலுக்கு ஆட்பட்டவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட இந்த சமூக – அரசியல் – பண்பாட்டுத் தளங்களில் அவர்களை எதிர்கொள்வது என்பது ஒருவகை போராட்டமே ஆகும். ஆகவே, ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் தன்னுடைய ஆளுமையை நிறுவிக்காட்ட வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்குப் பெரியாரும் அண்ணாவும் பெருந்துணையாக நின்றார்கள். பெரியாரின் பிள்ளை என்பதும் அண்ணாவின் தம்பி என்பதும் கருணாநிதிக்கு வாய்த்த மாபெரும் பாதுகாப்புக் கவசங்களாகும். எனினும், கட்சியைத் தாண்டி அந்த சமூகப் பகையானது அவருக்குரிய அங்கீகாரத்தை மறுத்துக்கொண்டேயிருந்தது. அவரை இழித்தும் பழித்தும் இடறிக்கொண்டேயிருந்தது. மிக ஆழமான – நுட்பமான – வலுவான இந்தச் சமூகப் பகையை, சிலர் கொள்கைப் பகையாகவும் அரசியல் பகையாகவும் வெளிப்படுத்தியபோதும், அதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நேர்மறையாக அணுகி, வெற்றிகரமாக மீண்டு தனது இலக்கைத் தொட்டவர் அவர்.

அவர் போராடினார் – வாதாடினார் – எழுதினார் – பேசினார். இவை, பதவிக்காகவும் புகழுக்காகவும் என்பதைவிட தனது தலைமையை நிறுவுவதற்காகவும் அங்கீகாரத்துக்காகவும்; தனது கொள்கை – கோட்பாடுகளைப் பரப்புவதற்காகவும் செழுமைப்படுத்துவதற்காகவும்தாம் என்பதுவே பொருத்தமாக இருக்கும். அதாவது, அவர் தனது தலைமையை நிறுவுவதற்காகவும் கொள்கையைப் பரப்புவதற்காகவும் பகைமையை வெல்வதற்காகவும் ஒரே நேரத்தில் இடையறாது உழைக்க வேண்டியிருந்தது. தனது எண்பதாண்டு காலப் பொதுவாழ்க்கை நெடுகிலும் அவர் போராடிப் போராடியே தோல்விகளையும் வெற்றிகளாய்ப் பரிணாமம் பெறவைத்தார்.

தனது பேராளுமை வாய்ந்த தலைமையால் புதிய வரலாறு படைத்தார். கருணாநிதி என்பவர் -  வீழ்த்த முடியாத தலைமை.. வெல்ல முடியாத ஆளுமை!

- தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x