Published : 09 Aug 2018 10:57 AM
Last Updated : 09 Aug 2018 10:57 AM

அகில இந்தியத் தலைவர் கருணாநிதி!

மாநில உரிமைகளுக்கு வழிகாட்டி!

கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்.

டெல்லியில் 1969 மார்ச் 17-ல் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் அகில இந்திய அளவில் ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியது. தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை மத்திய–மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் மகாசாசனம். அரசு நிர்வாகம், மாநிலங்களுக்கிடையே நீர்ப் பகிர்வு, பொது ஒழுங்கு, வணிகம், மொழி, பொது ஊழியங்கள் என ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரைகளைத் தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றினார் கருணாநிதி.

மத்திய - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கியக் காரணம். அந்த அறிக்கை அளிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின் ஐதராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து மாநாடு நடத்தினார் என்.டி.ராமாராவ். ஷில்லாங்கில் அசாம் கண பரிஷத் மாநாடு நடத்தியது. நகரில் ஃபரூக் அப்துல்லா நடத்தினார். மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பினார். கருணாநிதி தொடங்கிவைத்த மாநில சுயாட்சிக் குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

சமூக நீதியின் காவலர்!

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

வாழ்நாள் முழுவதும் தன்னை சமூக நீதிப் போராளியாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர் கருணாநிதி. அகில இந்திய அளவில் சமூக நீதி உரிமைக்கான போராட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் மண்டல் குழுவின் பரிந்துரைகள் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதற்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தவர் அவர். அது தொடர்பாக அப்போது திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் அவர் கலந்துகொண்டு அழுத்தம் சேர்த்திருக்கிறார். அகில இந்திய அளவில் சமூக நீதியின் காவலராக விளங்கிய அவர், தமிழகத்தில் சமூக நீதிக்குப் பாதிப்பு வந்தபோது கடுமையாக எதிர்த்துநின்று அதைப் பாதுகாத்தார்.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஆண்டு வருமானம் ரூ.9 ஆயிரத்தும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று உத்தரவு பிறப்பித்தபோது, அதைக் கருணாநிதி மிகத் தீவிரமாக எதிர்த்தார். அவர் முன்னின்று நடத்திய போராட்டங்களின் காரணமாகவே அதையடுத்து நடந்த 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகுதான், எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு உத்தரவை ரத்துசெய்துவிட்டு 31% ஆக இருந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார். திராவிடர் கழகம் முன்னெடுத்த சமூக நீதி சார்ந்த போராட்டங்களுக்கெல்லாம் துணையாக நின்றவர் கருணாநிதி. சமூக நீதிக்கான போராட்டத்தில் கருணாநிதியின் பங்களிப்பு தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணுரிமையின் முன்னோடி!

ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்.

பெண்ணுரிமைக்காக இரண்டு பார்வை களைக் கொண்டிருந்தவர் பெரியார். நாளைய உலகில் பெண்களின் நிலைஎன்னவாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு பெண் விடுதலையை முன்னிறுத்தியது முதலாவது பார்வை. இரண்டாவது பார்வை, இன்று பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதைத் திருமணம், பெண் விடுதலை என்று முன்னெடுத்தார். பெரியாரின் இந்த முன்னெடுப்புகளை, ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் செயல்படுத்தியவர் கருணாநிதி.

சாதி மறுப்புத் திருமணம், பெண் கல்வி போன்றவற்றைக் கருணாநிதி பல்வேறு விதங்களில் ஊக்குவித்தார். ஆண்களின் உலகமாக இருந்த துறைகளிலெல்லாம் பெண்களைக் கொண்டுசேர்த்தார். குறிப்பாக, காவல் துறையில் பெண்களைப் பெருமளவில் பணியமர்த்தியது கருணாநிதிதான். அதேபோல, ஆசிரியர்களுக்கான பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். சமூகத்தில் பெண்களின் மதிப்பை உயர்த்துவதில் ஆசிரியைப் பணி பெரும்பங்கு வகித்தது.

பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். பெண்களுக்கும் சொத்துரிமையில் பங்கு உண்டு என்று சட்டம் இயற்றியது மிக முக்கியமான நடவடிக்கை. பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரத்துக்கு வழிவகுத்தார். குடும்பங்களுக்குள்ளேயே எதிர்மறையான பார்வையோடு, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளான மாற்றுப் பாலினத்தவர்களுக்குத் திருநங்கைகள் என அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார். இத்தகைய விஷயங்களில் இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றால் அதற்கு மிக முக்கியப் பங்காற்றியவர் கருணாநிதிதான்!

மொழியுரிமைப் போராளி!

ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மைச் செயற்பாட்டாளர்.

மொழியுரிமைப் போராட்டம் என்றால் அந்தந்த மாநிலக் கட்சிகள், அமைப்புகள் அவரவர் மொழிக்காகக் குரல் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், தமிழ் உட்பட அரசியல் சட்டத்தின் 8-வது பிரிவில் உள்ள எல்லா மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதி தலைமையிலான திமுகவின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் காரணத்துக்காக திமுக மீதும், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் மீதும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மொழியுரிமைப் போராளிகள், அமைப்புகள் மத்தியில் பெரும் மதிப்பு உண்டு. மொழியுரிமை தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது இதை நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். “கருணாநிதி தமிழர்களுக்கு மட்டுமல்ல; வங்காளிகளுக்கும் தலைவர்” என்று கர்க சாட்டர்ஜி பெருமிதத்துடன் சொல்வார்.  தமிழ்நாட்டில் 1998-1999-ல் தமிழ் மென்

மொருள், இணையத்தில் தமிழ் என்று கணினியுடன் தமிழை இணைக்கும் திட்டங்களைத் திமுக அரசு முன்னெடுத்தது. தமிழில் இலவச மென்பொருட்கள் வழங்கப்பட்டன. தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானபோது தமிழ்நாட்டில் முன்னெடுத்த இதுபோன்ற திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தினார். தமிழ்நாட்டில் உருவாக்கிய ஒரு மொழிக் கொள்கையை நாடு முழுவதும் கொண்டுசென்றது திமுக.  தமிழகத்தில் 1999-2000-ல்

தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கப்பட்டது தொடர்பாகப் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். திமுகவின் கூட்டாட்சி வாதம் என்பது பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையிலேயே இருந்தது. மாநிலக் கட்சிகளின் பொதுப் பிரதிநிதியாகவே செயல்பட்டவர் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x