Last Updated : 08 Aug, 2018 08:23 AM

 

Published : 08 Aug 2018 08:23 AM
Last Updated : 08 Aug 2018 08:23 AM

தன் கதையைத் தானே எழுதிக்கொண்ட கதாசிரியர்: திருக்குவளையிலிருந்து ஒரு முதல்வர்!

அது 1936-ம் ஆண்டு. தனக்குப் பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொன்ன அந்தச் சிறுவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார். அவரால் அச்சிறுவன் சொன்னதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை; தன்னை அனுமதிக்காத எந்தச் சட்டகத்தையும் உடைத்து உள்ளே செல்ல ஒரே வழி போராட்டம் என்பதைத் தன்னுடைய 12 வயதிலேயே உணர்ந்து, அதை வெற்றிகரமாக நடத்தி, ஐந்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, கருணாநிதிதான்.

திருவாரூர் பக்கத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர்-அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. முன்னதாகப் பிறந்த இருவரும் பெண் பிள்ளைகள் - பெரியநாயகம், சண்முகசுந்தரம் (இவர்களில் சண்முகசுந்தரத்தின் புதல்வர்களே முரசொலி மாறனும், செல்வமும். பெரியநாயகத்தின் மகன் இயக்குநர் அமிர்தம்). எளிய குடும்பம் என்றாலும், கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்க வேண்டும் என்கிற சூழல் இல்லை. விவசாயியான தந்தை முத்துவேலரோ ஏரால் உழுததுபோலவே சொல்லாலும் உழுத கவிஞர்; வித்வான்; பண்டிதரைவிட அழகாய்க் கதை சொல்லக் கூடியவர். தந்தையிடமிருந்துதான் நிறையக் கற்றார் கருணாநிதி.

பள்ளியில் படித்தபோது ‘பனகல் அரசர்’ என்ற சுமார் 50 பக்கங்கள் கொண்ட துணைப் பாட நூல் அவரை ஈர்த்தது. பிராமணரல்லாதார்க்கு அரசியல், பணிகளில் இடஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், கோயில்களைத் தனியாரிடமிருந்து மீட்டது என்ற ஏராளமான நன்மைகளைச் செய்திருந்தது நீதிக் கட்சி. உயர்சாதி ஆதிக்கம் ஓங்கி வளர்ந்திருந்த தஞ்சை மண்ணில் ஒரு வைதீக, ஆனால் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் மனதில் பனகல் அரசரும், திராவிடர்களின் முதல் இயக்கமும் இடம்பிடித்ததில் ஆச்சரியம் என்ன! ஆனால், கருணாநிதியின் நெஞ்சில் நிரந்தர இடத்தைப் பிடித்தது பெரியாரும் அண்ணாவும்தான். பள்ளிப் பாடங்களைவிட பெரியாரின் ‘குடி அரசு’ பதிப்பக வெளியீடுகளே கருணாநிதியை வசப்படுத்தின. பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார் 14 வயது கருணாநிதி. தனது தோழர்களோடு நாள்தோறும் மாலைப் பொழுதுகளில் “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்” என்று முழக்கமிட்டு, ஊர்வலத்துக்குத் தலைமையேற்று நடத்துவது வழக்கம். இந்தி எதிர்ப்புத் துண்டறிக்கையை இந்தி ஆசிரியரிடத்திலேயே கொண்டுசென்று கொடுக்கும் துடுக்கும், “இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!’’ என முழங்கும் துணிச்சலும் கருணாநிதிக்கே உரியவை.

அண்ணாவின் அறிமுகம்

அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் 1942-ல் கருணாநிதி எழுதிய ‘இளமைப்பலி’ கட்டுரை வெளியானபோது அவருக்கு வயது 18. திருவாரூர் வந்த அண்ணா, கட்டுரையாளர் என்ற பெயரில் எதிரே இப்படி ஒரு மாணவப் பிராயத்தனை எதிர்பார்க்கவில்லை. கட்டுரைகள் எழுதுவதை விட்டுவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார் அண்ணா. ஆனால், கலை, இலக்கியம், அரசியல் என்று பொது வாழ்க்கையிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார் கருணாநிதி. இதற்கிடையே காதல் வந்தது; ஆனால் கைகூடவில்லை. ‘சுயமரியாதைக்காரனுக்குப் பெண் இல்லை’ என்றனர் காதலியின் பெற்றோர். சீர்திருத்தத் திருமணத்துக்கு வீட்டில் பார்த்த பெண் இல்லத்தார் ஒப்புக்கொண்டதையடுத்து, 1944-ல் கருணாநிதி - பத்மா திருமணம் நடந்தது. அடுத்த வாரமே 10 நாள் சொற்பொழிவாற்றப் புறப்பட்டுவிட்டார் கருணாநிதி. பத்மாவதி முத்துவைப் பெற்றுவிட்டு 1948-ல் மறைந்துவிட, செப் 15, 1948-ல் தயாளுவைத் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி. இவர்களின் பிள்ளைகளே அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு (துணைவி ராஜாத்தியின் மகள் கனிமொழி). 1948-ல் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் முதல் நாள் கலவரத்தில் முடிந்தது. அதற்குப் பின்னர் நடந்த தாக்குதலில் சுயநினைவு இழந்து, சாக்கடையோரத்தில் வீசப்பட்ட கருணாநிதியை ஒரு மூதாட்டி காப்பாற்றியிருந்தார். பெரியாரே அடிபட்ட இடங்களில் மருந்து தடவியது அவர் நெஞ்சை நெகிழ்த்தியது.

பெரியாரிடத்தில் ‘குடி அரசு’ துணையாசிரியராய் ஓராண்டு பயின்று முடிந்த நேரத்தில் ‘ராஜகுமாரி’ படத்துக்கு எழுத அழைப்பு வந்தது. படத்தின் நாயகன் எம்ஜிஆர். கருணாநிதி- எம்ஜிஆர் என்ற இரு ஆளுமைகளும் திராவிட இயக்கத்தை சினிமா மூலம் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டுசென்றனர். ஆனால், கருணாநிதி எழுதி வெளிவந்த ‘அபிமன்யு’ (1948) படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, திருவாரூருக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி. அதுவும் நல்லதாகவே போயிற்று. முன்னதாக துண்டுத் தாளில் வந்துகொண்டிருந்த ‘முரசொலி’ வார இதழாய் உருவெடுத்தது. இதற்கிடையில் தான் மனைவி பத்மா மு.க.முத்துவைப் பெற்றுத் தந்துவிட்டு மறைந்துவிட்டார். வீட்டில் இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். திருமண நாள் செப்டம்பர் 15, 1948. அண்ணாவின் பிறந்த நாள். தலைமைச் சொற்பொழிவாளராகவும் அண்ணாவின் பெயரே அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது. திருமணமான கையோடு புது மணப்பெண் தயாளுவை விட்டுவிட்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார் கருணாநிதி.

‘கலைஞர்’ கருணாநிதி

தலைவர் பெரியாரோடான பிணக்குக்குப் பிறகு திகவிலிருந்து பிரிந்து, 1949-ல் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று திமுகவை அண்ணா உருவாக்கியபோது கருணாநிதி உற்ற துணையாகியிருந்தார். வெள்ளையனை வெளியேற்றிய காங்கிரஸை எதிர்ப்பதென்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாய் இருந்த காலம். இப்போது காங்கிரஸோடு பெரியாரும், திமுகவைக் கடுமையாக எதிர்த்தார். 25 வயது கருணாநிதியை கட்சியின் பிரச்சாரக் குழு உறுப்பினராக்கியிருந்தார் அண்ணா.

அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’, ‘நல்லதம்பி’, ‘ஓர் இரவு’ போன்ற திரைப்படங்கள் சாதி மறுப்பு, ஏழை பணக்காரன் பேதம் ஒழிப்பு, மூடநம்பிக்கை மீதான சாடல், சமதர்ம சமுதாயத்தின் தேவை போன்றவற்றை முழங்கின. ஆனால், கருணாநிதியின் எழுத்தோ இவற்றோடு அன்றைய அரசியலை விமர்சித்ததுடன் காங்கிரஸையும் வம்புக்கிழுத்தது. இன்னொருபுறத்தில் கருணாநிதி - எம்ஜிஆர் இணையில் வெளியான ‘ராஜகுமாரி’, ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ‘பராசக்தி’ படத்தில் சமூக அநீதிகளை எதிர்த்து நெருப்பைக் கக்கிய கருணாநிதியின் வசனங்கள் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டுபோனது. அப்போதைய காங்கிரஸ் அரசு நெளிந்தது. “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே!” என்ற பகுத்தறிவுப் பிரச்சாரம், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களையும் வசீகரித்தது. இசைத்தட்டுக்கள் ஒலித்த இடங்களில் ‘பராசக்தி’யின் வசன ஒலித்தட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கின. கருணாநிதியையும் ‘பராசக்தி’யையும் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் காங்கிரஸார்.

அண்ணாவைப் போலவே பேச்சால் தன்வயப்படுத்தும் வித்தையையும் கருணாநிதி கற்றிருந்தார். அமைப்புரீதியான ஆற்றலும் கொண்டவர் என்பதால், கட்சியில் குழு மனப்பான்மை, கட்சி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சரிசெய்ய அவரையே அனுப்பினார் அண்ணா.

கல்லக்குடி போராட்டம்

1953-ல் மும்முனைப் போராட்டத்தில், ஒரு முனைக்கு கருணாநிதியைத் தலைவராக அமர்த்தியிருந்தார் அண்ணா. டால்மியாபுரம் ரயில் நிலையப் பெயர்ப் பலகையின் மீது தமிழில் கல்லக்குடி என்ற பெயர் தாங்கிய சுவரொட்டியை ஒட்டுவதே போராட்டத் திட்டம். போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும் வகையில், நான்கு பேருடன் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார் கருணாநிதி. ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்றாலும், கட்சிக்குள்ளும் வெளியிலும் கருணாநிதியின் துணிச்சலைப் பற்றி எல்லோரிடமும் பேச்சு எழுந்தது.

திராவிட இயக்கம் தன்னுடைய வருங்காலத்துக்கு ஊறு விளைவிக்குமோ என்று அஞ்சி 1944-45-ல் அண்ணாவின், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்திலிருந்து எம்ஜிஆர் விலகிக்கொண்டதும், அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்த கணேசன், பின்னர் சிவாஜி கணேசனாக உருவெடுத்ததும் வரலாறு. அதே எம்ஜிஆர் தன்னைத் திராவிட இயக்கத்தோடும் கருணாநிதியோடும் இறுக இணைத்துக்கொண்ட வித்தையும் நடந்தது.

இருவரும் இணைந்து உருவாக்கிய ‘மலைக்கள்ளன்’ (1954) அவர்களின் கூட்டுறவைப் பறைசாற்றியது. ‘உலகத்தில் எல்லாவற்றுக்குமே இலக்கணம் உள்ளது. பிறப்பைப் பொறுத்து அல்ல; சிறப்பைப் பொறுத்து’ எனும் வசனம் புகழ்பெற்றது. அவ்வாண்டு ஒரு நாடக நிகழ்ச்சியில் ‘புரட்சி நடிகர்’ என்று எம்ஜிஆருக்குப் பட்டம் சூட்டினார் கருணாநிதி.

1954-லிருந்து ‘முரசொலி’யும் எம்ஜிஆரின் பிம்பத்தை வடித்துத் தர உதவியது. அவ்வாண்டு ‘மனோகரா’வில் சிவாஜி, கருணாநிதியின் வசனங்களைக் கர்ஜித்தார். ‘‘வசந்த சேனை... வட்டமிடும் கழுகு! வாய்பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு. அவளுக்கு இரக்கமா? முடியாது... கூடாது!’’

முதல் தேர்தல் வெற்றி

1957 தேர்தலில் திமுக போட்டியிட்டது. கருணாநிதி குளித்தலையில் நின்று வென்றார். அப்போது தொடங்கிய வெற்றி 13-வது முறையாக 2016-ல் திருவாரூர் வரை தொடர்ந்துவருகிறது. சட்ட மன்றக் கன்னிப் பேச்சில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகக் குரல்கொடுத்தார். 1957 ஆகஸ்ட் 23-ல் தொடங்கி 1957 செப்டம்பர் 9 வரை சுமார் 20 நாட்கள் போராட்டம் நடத்தி அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார்.

1959-ல் சென்னை மாநகராட்சி திமுக வசமானது. அண்ணாவிடம் பிடிவாதமாய் 100-ல் 90 இடங்களில் கழக வேட்பாளர்களை நிறுத்தி 45 இடங்களில் வென்று பரிசாய், அவர் கையாலேயே ‘கணையாழி’ பெற்றுக்கொண்டார் கருணாநிதி. முந்தைய ஆண்டு ‘நாடோடி மன்னன்’ எம்ஜிஆரைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசென்றிருந்தது. 1960-ல் உட்கட்சிப் பூசல்கள் இடையே அண்ணாவே பொதுச்செயலாளர் ஆனார். ஈ.வெ.கி.சம்பத் அவைத் தலைவர். கருணாநிதி பொருளாளர். சம்பத்தின் குடும்பப் பின்னணி இல்லாமலும், நாவலரின் உயர் கல்வி இல்லாமலும் தனது ஆற்றலால், உழைப்பால் பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. அடுத்த ஆண்டு சம்பத் கட்சியிலிருந்து வெளியேறினார். கட்சியில் திரைத் துறையினரின் ஆதிக்கம் அதிகரித்துவருவதையும் வெளியேற்றத்துக்கு அவர் ஒரு காரணமாய்ச் சொன்னார்.

தேர்தல் நிதி 11 லட்சம்

1962-ல் 50 சட்ட மன்ற இடங்களை திமுக பிடிக்க, ‘திராவிட நாடு’ முழக்கம் மேலும் அதிகரித்தது. அடுத்த ஆண்டு பிரிவினை பேசும் கட்சிகளுக்குத் தடை போடும் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது நேரு அரசு. கட்சி முடக்கப்படுவதைத் தடுக்க அண்ணா ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார். தமிழகத்தின் நலன்களுக்காக இப்போது மாநில சுயாட்சி முழக்கத்தை அவர் கையில் எடுத்தார். 1965-ல் இந்தி ஆட்சி மொழியாக இருந்த பேராபத்தைத் தடுக்கவும், 1967 தேர்தலைச் சந்திக்கவும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டது திமுக.

1963 ஜூலை 7-ல் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் கருணாநிதியே, 1967 தேர்தலுக்கான வியூகத்தின் ஒரு பகுதியை வகுத்துத்தந்தார். 200 தொகுதிகளில் போட்டி, ஒரு தொகுதிக்கு ரூ.5,000 செலவுத்தொகை; ஆக மொத்தம் ரூ.10 லட்சம். அவரே அந்தத் தொகையைத் திரட்டும் பணியையும் ஏற்றுக்கொண்டார்.

1963-லிருந்து இந்தி எதிர்ப்புப் போர், கழகத்தைப் பம்பரமாய்ச் சுழல வைத்தது. 1965 ஜனவரி 26-ஐத் துக்க நாளாகக் கொண்டாட முடிவெடுத்தது திமுக. மாணவர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1965 பிப்ரவரி 16 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாநிதி. 1965 மார்ச் 25-ல் சிறையில் கருணாநிதியைப் பார்த்துவிட்டு பின் அன்று மாலை நெல்லையில் சொன்னார் அண்ணா: “என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் இந்த இடம்தான், யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி”.

முதல்வர் கருணாநிதி!

1966 டிசம்பர் 29-ல் விருகம்பாக்கம் திமுக தேர்தல் சிறப்பு மாநாட்டில் ரூ.11 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட அண்ணா சொன்னார்: “உன் தாயார் உனக்கு நிதி என்று பெயரிட்டார்களே, உன்னை நாட்டு மக்கள் நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்றுதான்”. வேட்பாளர்களை அறிவிக்கும்போது சைதாப்பேட்டை என்று நிறுத்தி “11 லட்சம்” என்றார் அண்ணா. பெரும் ஆரவாரம்! பரங்கிமலை தொகுதிக்கு எம்ஜிஆர் நிறுத்தப்பட்டிருந்தார். அந்தத் தேர்தலில் திமுக வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார்.

1967-ல் நாவலருக்கு அடுத்து அண்ணா அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்ற கருணாநிதி, பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் வீராணம் திட்டத்துக்கு வித்திட்டதும் முக்கியமான செயல்பாடுகளாகப் பேசப்பட்டன.

1969-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு, “அண்ணாவுக்குப் பிறகு யார்?” என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதியே முன்னால் நின்றார். எம்ஜிஆரின் உதவியும் சேர்ந்துகொள்ள 45 வயதிலேயே முதல்வரானார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x