Published : 06 Aug 2018 09:26 AM
Last Updated : 06 Aug 2018 09:26 AM

ஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை! - உளநல நிபுணர் ஷாலினி பேட்டி

போதைவசப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது செல்போன். குழந்தைகளும் இளைஞர்களும் கவனத்தைச் சிதறவிடுகிறார்கள். பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயமாக செல்போன் மாறியிருக்கிறது. செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் உளநல நிபுணர் ஷாலினி.

செல்போனுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி  அறிந்துகொள்வது?

தனிமையில் இருப்பவர்களுக்கும் அதிருப்தியான உறவுநிலையில் இருப்பவர்களுக்கும் கையில் செல்போன் இருக்கும்போது, அது ஒரு அடிமைப்படுத்தக்கூடிய வஸ்துவாக மாறிவிடுகிறது. ஒரு பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும்போது அந்தப் பயன்பாட்டின் அளவு அதிகரிப்பதைத்தான் அடிமைப்படுத்தும் நிலை என்கிறோம்.

காலையில் எழுந்தவுடனே போனைக் கையில் எடுப்பது, இந்தப் பழக்கத்தைப் பற்றி யாராவது பேசினால் கோபம் வருவது போன்றவை ஒருவர் செல்போனை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறார் என்பதைக் காட்டும். இத்தனைக்குப் பிறகும் ‘நான் செல்போனுக்கு அடிமையாகவே இல்லை’ என்று மறுக்கிறார் என்றால், அந்த நபர் செல்போனுக்கு அடிமையாகிவிட்டார் என்று அர்த்தம்.

அப்படி இந்தக் கருவியில் என்னதான் இருக்கிறது?

ஒரு பொருள் நமது மூளையில் போய் உடனுக்குடன் வினையாற்றுகிறது, வசீகரமாக இருக்கிறது என்றால் அதில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. செல்போனில் எல்லாமே கிடைக்கிறது. எனவே, அது ஒரு அபூர்வமான கருவியாகத்தான் மனித மூளைக்குத் தோன்றும். அதேசமயம், தனிமையில் இருப்பவர்கள், உறவுகளில் சிக்கலை எதிர்கொள்பவர்கள் ஆகியோரே செல்போனுக்கு அடிமையாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

செல்போனின் அதீத பயன்பாடு மனித உறவுகளுக்குள் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இல்லையா?

தாய்-சேய் உறவில், குழந்தை அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறது, தாயிடமிருந்து பிரிந்து விலகிப்போகிறது என்றால், அரவணைப்பும் அன்புப் பரிமாற்றங்களும் குறைந்திருக்கின்றன என்பதே காரணமாக இருக்கும்.

பெற்றோர்கள் குழந்தைகளையோ, கணவன் மனைவியையோ திட்டிக்கொண்டே இருப்பது, அதிக கண்டிப்பு காட்டுவது போன்ற காரணங்களால் அவர்கள் செல்போனுக்குள் முடங்கும் அபாயம் அதிகம். இந்தத் திட்டலுக்குப் பயந்துதானே நான் செல்போனில் உட்கார்ந்துகொள்கிறேன் என்பதுதான் பதிலாக இருக்கும். நிஜ உறவில் அன்பு இருக்கிறது, தொடுகை இருக்கிறது. பேச்சு இருக்கிறது. அது குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!

கணவன்-மனைவி உறவிலும் குழந்தை வளர்ப்பிலும் செல்போன் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

கணவன் - மனைவி உறவின் ஆரம்ப காலத்தில் செல்போன் காதல் போதையேற்றக்கூடிய ஒரு கருவியாக இருக்கிறது. அவர்கள் பேசிக்கொள்வதற்கும் கொஞ்சிக்கொள்வதற்குமான வாய்ப்பாக செல்பேசி இருக்கிறது. திருமணமான சில ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடுகிறது.  மனைவி வீட்டிலிருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொண்டால் போதும் என்று கணவன் நினைக்கிறார். நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைத்தால், மிருகக்காட்சிச்சாலையில் இருக்கும் விலங்கும்கூட மனநிலை பாதிக்கப்படத்தான் செய்யும். யாருடனும் பேசாமலிருப்பது பெண்களுக்கு அலுப்பைத் தருகிறது. அதனால், அவர்கள் யாரிடமாவது பேசுவதற்கு முயற்சிசெய்கிறார்கள்.

செல்போன் இல்லாத காலத்தில் தொலைபேசியில் ஒரு பெண் தனது தாயுடன் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். இப்போது செல்போன் வந்துவிட்டதால் யார் யாருக்கோ மெசேஜ் அனுப்புவது, சமூக ஊடகங்களில் ஆர்வமாக இருப்பது, அதில் வரும் பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பது என்று மாறிவிடுகிறார். தொடக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தாலும், போகப் போக அதில் விழுந்துவிடுகிற தன்மையைத்தான் நிறைய பெண்களிடம் பார்க்கிறோம்.

எந்தப் பெண்ணும் நான் செல்போனுக்கு அடிமையாவேன் என்று திட்டமிட்டு அப்படி ஆவதில்லை. நிராகரிப்பு அல்லது புறக்கணிப்புதான்  பெண்களை செல்போனை நோக்கித் தள்ளுகிறது. இது குழந்தை வளர்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றால், ஆண்களுக்குப் பொறுப்புணர்வு இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்! செல்போன் உரையாடல்களைப் பதிவுசெய்யும் வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இது பின்பு அச்சுறுத்தலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது…

செல்போன் உரையாடலைப் பதிவுசெய்ய முடியும் என்கிற தொழில்நுட்பம் பலருக்குத் தெரியாது. குறிப்பாகப் பெண்களுக்கு! எச்சரிக்கையாகப் பேச வேண்டிய வார்த்தைகள் என்னென்ன என்பதை மட்டுமல்ல, ஒரு நபரிடம் பேச வேண்டுமா என்பதையும்கூட பெண்கள் முடிவெடுக்க வேண்டும். செல்போன், உரையாடலைப் பதிவுசெய்யக்கூடிய கருவி என்பதால், எந்தவொரு உரையாடலிலும் கவனம் தேவை. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எந்தவொரு இணையதளத்தையும் செல்போன் வழியாக எளிதாகப் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டற்ற சுதந்திரம் இயல்பு வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது?

இன்றைக்கு வீடுகளின் அமைப்பு பெருமளவு மாறிவிட்டது. குழந்தைகளுக்குத் தனிப் படுக்கையறை தர வேண்டும், அந்தக் குழந்தைக்கு என்று  ‘பிரைவஸி’ தர வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மாறிக்கொண்டு வருகிறோம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு தனிப் படுக்கையறை கொடுக்கிற கலாச்சாரம் இருக்கிறது. நம்முடைய கலாச்சாரம் வேறு. குழந்தைகளுக்குத் தனிமையைக் கொடுப்பது, இளைஞர்களுக்குத் தனிப் படுக்கையறை கொடுப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு நாம் செய்கிற துரோகம்.

தனிமையில் என்னவெல்லாம் செய்யலாம் என்ற சுதந்திரம் பக்குவப்படாத மனதைத் தேவையில்லாமல் தூண்டக்கூடும் என்பதால் கல்லூரிப் படிப்பை முடிக்கிற வரைக்கும் தனியறை தருவது தவிர்க்க வேண்டிய விஷயம். முன்கூட்டியே அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்தால், அவர்கள் செல்போனில் எதைப் பார்க்கிறார்கள் என்பதை யாராலும் கண்காணிக்க முடியாது. சில சமயங்களில் அது ஆபத்தில் கொண்டுபோய்விடக் கூடும்.

வதந்திகள் பரவ, கலவரங்கள் உருவாக செல்போன் வழிவகுக்கிறது. மேலும், பாலியல் குற்றங்களுக்கான மனநிலையை உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

செல்போன் உலக இலக்கியங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவும் உதவும். உலகின் வக்கிரமான பாலியல் காட்சியைத் தேடவும் உதவும். எதைக் கேட்பது என்பது மனதைப் பொறுத்துதான் அமையும். குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு,  தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள், ‘யாரோடும் பேச முடியவில்லை, செல்போனாவது இருக்கிறதே’ என்று அதில் எதையாவது நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கண்காணிப்பு இல்லை என்கிறபோது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உருவாகிறது.  பெற்றோர்களின் வழிகாட்டுதல் இருந்தால் அந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம். நேர்மறையாக அதை மாற்றிக்கொள்ளலாம். இந்தக் கருவி இப்படிப்பட்டதுதான். நாம்தான், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x