Published : 06 Aug 2018 09:19 AM
Last Updated : 06 Aug 2018 09:19 AM

வரலாற்றை மூடும் தார் சாலைகள்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் இன்றைய நாளும் ஒன்று (ஆகஸ்ட் 6). இன்றோடு இந்திய வரலாறு தனது சான்றாதாரங்களின் முக்கியத்துவத்தைச் சட்டப்படி இழக்க இருக்கிறது அல்லது தப்பிப்பிழைக்க இருக்கிறது. வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தடயங்களின் மீதான திருத்த மசோதாவின் இறுதி முடிவுக்கான நாளாக இன்றைய நாள் இருக்கக்கூடும்.

தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் நாடு முழுவதும் 3,686 இடங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் ‘யுனெஸ்கோ’வால் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியச் சின்னம் என்று அறிவிக்கப்பட்டுள்ள 22 இடங்களும் உள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்பும் இனி கேள்விக்குள்ளாக்கப்பட இருக்கிறது.

வரலாற்றுச் சின்னங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை தடைசெய்யப்பட்ட பகுதி. அதிலிருந்து 200 மீட்டர் தொலைவு வரை பாதுகாக்கப்பட்ட பகுதி. பல்லாயிரம் ஆண்டு பழமையான இந்தத் தடயங்களுக்கும் கட்டுமானங்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்தப் பகுதிகளில் வேறு பணிகளுக்கு அனுமதி கிடையாது. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள எண்ணிலடங்கா ஆதாரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 1958-ம் ஆண்டு சட்டம் இந்நிலத்தைப் பிற பயன்பாட்டுக்குத் தடைவிதித்திருந்தது.

ஆனால், இப்போது, ‘தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் திருத்த மசோதா 2017’ என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 1958-ம் ஆண்டு சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் விதிக்கப்பட்ட தடையை இந்த மசோதா நீக்குகிறது என்பதுதான் நாம் எதிர்கொள்ளவிருக்கும் கொடுந்துயரம்.

‘இவ்வாறு தடைவிதிப்பதால் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் பொதுப் பணிகளுக்கான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் தடை ஏற்படுவதாக உணரப்படுகிறது’ என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது. அதனால், இத்தடைகளை நீக்கி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வகைசெய்யும் புதிய மசோதா மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்ததால் இப்போது தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம்தான் இன்று நடக்கவுள்ளது.

எதிர்கொள்ளவிருக்கும் விபரீதம்

எந்த வரலாறு காக்கப்பட வேண்டும், எந்த வரலாறு அழிக்கப்பட வேண்டும் என்பதை அரசியலே தீர்மானிக்கிறது. வரலாற்றைப் புராணங்களால் நிரப்ப வேண்டுமென்றால், அதற்கான முன்நிபந்தனை வரலாற்றுச் சான்றினை அப்புறப்படுத்துவதுதான். அதனால்தான், அசோகரின் கல்தூணையும் தாஜ்மஹாலின் பேரழகையும்விட சாலைகளும் பாலங்களும் முக்கியம் என்று துணிந்து கூறுகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய இடம். துங்கபத்திரா நதிக்கரையில் கற்கோயில்களின் பேரழகு விரிந்துகிடக்கும் நிலம். ‘யுனெஸ்கோ’வால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று அது. சில ஆண்டுகளுக்கு முன் அவ்விடத்தில் கற்கோயில்களுக்கு மிகத் தொலைவில் துங்கபத்திரா ஆற்றைக் கடக்கும் வகையில் பாலம் கட்டத் தொடங்கினார்கள்.

‘பழமையான கட்டுமானங்களைவிட்டு, மிகத் தொலைவில் வெற்றிடம் இருக்கும் பகுதியில்தான் இப்பாலம் அமைய இருக்கிறது’ என்று மத்தியத் தொல்லியல் துறை அனுமதி கொடுத்தது. ஆனால், யுனெஸ்கோ நிறுவனம் பாலத்தின் கட்டுமானத்தை நிறுத்தியது. கட்டுமானங்கள் இல்லாத வெற்றிடத்தில்தான் பாலம் அமைய இருக்கிறது என்பதை அவர்கள் ஏற்கவில்லை. ‘வெற்றிடம் என்பதும் கட்டுமானத்தின் பகுதியே. அதைச் சிதைப்பது என்பது கட்டுமானத்தைச் சிதைப்பதற்கு ஒப்பானது’ என்று கூறியது. அன்று கைவிடப்பட்ட அப்பாலத்தை இன்றும் காணலாம்.

சர்வதேச அமைப்புகளின் வழிமுறைகளும் ஆலோசனைகளும் வரலாற்றுச் சின்னங்களைப் பேண வழிவகை சொல்கின்றன. அதிக மாசு எழுப்பும் வாகனங்களோ, அதிர்வை ஏற்படுத்தும் வாகனங்களோகூட பாதுகாப்புச் சின்னங்கள் இருக்கும் பகுதியில் அனுமதிக்கக் கூடாது. ஆனால், இனி புதிய மசோதா நிறைவேறினால், துங்கபத்திரையைத் தங்க நாற்கரச் சாலை மூலம் கடக்கலாம். விருபாக்ஷர் ஆலயத்தின் எஞ்சிய பகுதியின் மீது பயணிகள் வீசிச்செல்லும் குளிர்பானப் புட்டிகளைக் காணலாம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் அதிகம் இருக்கும் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. இங்கு பாதுகாக்கப்படும் பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களின் எண்ணிக்கை 413. விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலையில் சுமார் 4,000 ஆண்டு பழமையான ஓவியங்கள் உண்டு. அவ்விடத்தைத் தொல்லியல் துறை பாதுகாத்துவருகிறது. ஓவியம் இருக்கும் இடத்துக்குச் சற்று தொலைவில் குவாரிகள் இருந்தன. அங்கு பயன்படுத்தும் வெடிபொருட்களின் அதிர்வினால் ஓவியங்களின் வண்ணப்பக்குகள் உதிரத் தொடங்கின. ஒருசில ஆண்டுகளிலேயே ஓவியத்தின் பொலிவு மறையத் தொடங்கியது.

அதை அறிந்த தொல்லியல் ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் பல முயற்சிகளை எடுத்து அக்குவாரியை நிறுத்தினர். 4,000 ஆண்டு பழமையான ஓவியத்தின் வண்ணங்கள் தடைவிதிக்கப்பட்ட இடத்துக்கும் அப்பால் நடக்கும் செயல்களால்கூட அழியும் ஆபத்தினைத்தான் இந்நிகழ்வு சுட்டுகிறது. இதே ஆபத்துதான் இந்தியா முழுவதும் இருக்கும் தொல்லியல் சின்னங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. திருத்த மசோதாவின் மூலம் கட்டுமானங்களும், ஆதாரங்களும் உதிர்ந்து அழியவிருக்கின்றன.

குத்தகைக்கு விடப்பட்ட செங்கோட்டை

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்குள்ள பாரம்பரியச் சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1904-ல் நிறைவேற்றப்

பட்டது. எண்ணற்ற இடங்களைக் கண்டறிந்தார்கள். கண்களுக்குத் தெரியும் கட்டுமானங்களையும் சின்னங்களையும் மட்டுமல்ல, கண்களுக்குக் காட்சிப்படாமல் நிலத்துக்குள் இருக்கும் தடயங்களையும் ஆதாரங்களையும் பாதுகாக்க நினைத்தார்கள்.

அந்நியர் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட நம் வரலாற்றுச் சின்னங்கள், சுதந்திர ஆட்சியில் கைநழுவ இருக்கின்றன. பிரிட்டிஷாரை வெளியேற்றி சுதந்திரத்தின் முதல் கொடி ஏற்றப்பட்ட செங்கோட்டையை இன்று தனியார் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விட்டாயிற்று. அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் சுதந்திர இந்தியாவில் என்ன இருக்கப்போகிறது?

வரலாறு எப்போதும் முடிந்துவிடுவதில்லை. எந்த ஒரு முடிவையும் தனது அங்கத்தின் இன்னொரு பகுதியாக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான், வரலாறு அச்சமூட்டும் ஒன்றாக சிலருக்குத் தெரிகிறது. அவர்களே வரலாற்றை அழிக்க நினைக்கிறார்கள். இச்செயலுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். மனிதன் வரலாற்றின் குழந்தை மட்டுமன்று; வரலாற்று மீட்பனும்கூட.

- சு.வெங்கடேசன்,
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்.
தொடர்புக்கு: suvetpk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x