Last Updated : 27 Jul, 2018 09:15 AM

 

Published : 27 Jul 2018 09:15 AM
Last Updated : 27 Jul 2018 09:15 AM

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம்

அன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மரங்களுக்காக அந்த ஒரு முழு நாளை ஒதுக்கிக்கொள்வது என்று முந்தைய இரவில் முடிவெடுத்தேன். ஏழு நாள் லண்டன் பயணத்தில், மரங்களுக்காக ஒரு நாள் எனும் திட்டம் யோசித்தபோது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. அது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பது விடுதியை விட்டுக் கிளம்பி சாலையில் கால் வைத்ததும் புரிந்தது. விடுதியைச் சுற்றியே இப்போது ஏராளமான மரங்கள் நின்றன. பெரிய பெரிய மரங்கள். நிறைய வயதான மரங்கள். எப்படி முதல் நாள் முழுமையிலும் கண்ணில் படாமல் போயின!

அன்றைக்கு மழை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. இரவு மழை பெய்த தடம் காற்றில் கலந்திருந்தாலும் மண்  உலர்ந்திருந்தது. வானம் கருநீலம் பூத்திருந்தது. மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. லண்டனிலிருந்து கடல் தூரம். ஆனால், காற்றில் கடல் வாடையடித்தது. ஒருவேளை இதுவரை அறிந்திராத ஏதேனும் ஒரு மரத்திலிருந்து வெளிப்படும் மணமாகவும் இருக்கலாம். அதிகாலைகளை மரங்கள் தங்களுடையதாக மாற்றிவிடுகின்றன. கருத்த, வெளுத்த, பழுப்பேறிய, சாம்பல் பூத்த மரங்களை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இன்னும் வெளிச்சம் முழுவதுமாகச் சூழாத அந்த அதிகாலையிலேயே நகரம் சுறுசுறுப்பாகியிருந்தது.

விக்டோரியா பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்தார் ஹெலன். அங்கிருந்து ஒவ்வொரு பூங்காவாகப் பார்க்கலாம் என்று திட்டம். வாழ்க்கையை எவ்வளவு எளிமையாகத் திட்டமிட்டுவிடுகிறது ஒரு தமிழ் மனம்? மூன்று பூங்காக்களைப் பார்த்த மாத்திரத்தில் திட்டத்தின் அபத்தம் பல் இளித்தது. நகரம் எங்கிலும் மொத்தம் 3,000 பூங்காக்கள். பூங்கா என்பது பெயர்தான். எல்லாம் சிறு, குறு காடுகள். 35,000 ஹெக்டேருக்கு இவை பசுமை போர்த்தியிருக்கின்றன. சொல்லப்போனால், லண்டன் பெரிய நகர்ப்புறக் காட்டைத் தன்னுள்ளே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெருநகரம் என்று அதைச் சொல்லலாம் அல்லது வளர வளரப் பெருக்கும் ஒரு பெருநகரத்தைத் தன்னுள் உள்ளடக்கி  விரித்துக்கொண்டேயிருக்கும் காடு என்றும் அதைச் சொல்லலாம். ஹெலன் சிரித்தார்.

“இங்குள்ள மரங்களைப் பார்க்க உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது சமஸ். லண்டனில் இன்றுள்ள மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 84 லட்சம். இன்றைய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட ஒவ்வொரு லண்டன்வாசிக்கும் ஒரு மரம். மக்கள்தொகை ஏறஏற இந்த எண்ணிக்கையையும் அதிகரிக்க முயற்சி நடக்கிறது. இந்த மரங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் தொகுத்தால் நகரின் 20% இடங்கள் மரங்களால் மட்டும் நிறைந்திருக்கும்.”

“எனக்கு உண்மையாகவே பெரிய பிரமிப்பாக இருக்கிறது ஹெலன். லண்டனைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில் கூடுதலான பசுமைப் பரப்பைக் கொண்ட நகரங்கள் ஐரோப்பாவில் உண்டு என்பதை அறிவேன். ஆனாலும், லண்டனில் இவ்வளவு மரங்கள் ஆச்சரியம்தான். தொழில்மயமாக்கலை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாட்டின் தலைநகரம். அதன் எல்லாச் சீரழிவுகளையும் பார்த்த நகரம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக வளர்ந்த நகரம். இன்னும் விரிந்துகொண்டேயிருக்கும் நகரம். உங்களால் மரங்களைத் தொடர்ந்து  காக்க முடிகிறது?”

“தொடர்ந்து பாதுகாத்தோம் என்று சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிட்ட விஷயம்தான். தொழில்மயமாக்கல் காலகட்டம் பெரிய நாசத்தை லண்டனில் உருவாக்கியது. கணிசமான மரங்களை இழந்தோம். நீர்நிலைகள் நாசமாயின. சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. லண்டனில் பனி நாட்களில் தொழிற்சாலைப் புகையால் மக்கள் வெளியவே வர முடியாத சூழல் எல்லாம் இருந்திருக்கிறது. நான் சொல்வதெல்லாம் நூறு, இருநூறு வருடங்களுக்கு முன்பு. தொழில்மயமாக்கல் தொடங்கியே இருநூற்றைம்பது வருடங்கள் தொடுகின்றன, அல்லவா? 1950-களில்கூட நிலைமை சீரடைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், மரங்கள் மீது கை வைப்பது என்பது ஏதோ ஒருவகையில் புனிதத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் மரங்களைக் கொண்டாட மட்டும் லண்டனில் 60 நிகழ்ச்சிகள் நடக்கும்.”

“எங்கள் தமிழ்க் கலாச்சாரத்திலும் மரங்களுக்குப் பெரிய இடம் உண்டு. சொல்லப்போனால், தலவிருட்சம் என்ற பெயரில் கோயிலுக்குக் கோயில் தனி மரங்கள் உண்டு. நாட்டார் மரபில் மரங்களே கடவுளாக வணங்கப்படுவதும் உண்டு. நெடிய கிராமியப் பண்பாடு எங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். அதற்கு இணையான இரண்டாயிரம் வருட நகரியப் பண்பாடும் உண்டு. என்னை எடுத்துக்கொண்டால், என்னுடைய சொந்த ஊரான மன்னார்குடி, ஒரு சிறுநகரம். கிட்டத்தட்ட ஆயிரம் வருடப் பழமையான ஊர். கச்சிதமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. சின்ன ஊரில் நூறு குளங்கள் இருந்தன. ஊர் எல்லையில் சிறுவனங்கள் பராமரிக்கப்பட்டன. வரலாற்றின் ஏதோ ஒரு கணத்தில் இவ்வளவும் சடசடவென்று மக்களின் மறதிக்குள் போய்விட்டன. இன்று எல்லாம் மாறிவிட்டது. மரங்களை வெட்டுவது மிகச் சாதாரணமாகிவிட்டது. ‘வளர்ச்சி’, ‘விரிவாக்கம்’ என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் எங்கோ மரங்கள் கீழே வீழ்ந்தபடியே இருக்கின்றன.”

“மேம்பாடு என்பது வேண்டியதுதான். ஆனால், எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம் என்று ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா?”

“மனித வாழ்க்கையில் மிக முக்கியமான கேள்வி அது. எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம்? அது ஒன்றை ஞாபகத்தில் வைத்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தேவையே இல்லையே! காந்தி இதைத்தான் ஆழமாகக் கேட்டார். பிரிட்டனையே இந்த விஷயத்தில் கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார். அதேசமயம், இங்கு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் குடிமைப் பண்பை மெச்சவும் செய்திருக்கிறார். மக்கள்தொகை பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகரத்தை விஸ்தரிக்கும்போது மரங்களை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”

“இரண்டாயிரம் வருட வரலாற்றில் லண்டன் எல்லாக் காலங்களிலும் வளர்ந்தபடியே வந்திருக்கிறது. 1750-லேயே பிரிட்டனின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் – 6.75 லட்சம் பேர் - லண்டனில் இருந்தார்கள். உலகில் முதலில் ஒரு மில்லியன் மக்கள்தொகையைத் தொட்ட ஐந்து நகரங்களில் ஒன்று இது. ஐம்பது லட்சம் மக்கள்தொகையைக் கடந்த முதல் நகரமும் இதுதான்.  தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் லீட்ஸ், மான்செஸ்டரில் ஏராளமான மக்கள் குவிந்தார்கள். அவ்வளவு தொழிற்சாலைகள் இங்கிருந்தன என்று சொல்லத்தக்க அளவுக்கு லண்டன் சூழல் இல்லை என்றாலும், லண்டனில் மக்கள் குவிவது நிற்கவே இல்லை. இன்றும் ஒரு சின்ன  அறைக்குள் வாழ்பவர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஆனால், நகரம் காங்கிரீட் மேடாக மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் மக்களிடம் இருக்கிறது. அப்புறம் ஒரு பட்ட மரத்தைக்கூட முன் அனுமதியில்லாமல் இங்கே வெட்டிவிட முடியாது. நீங்கள் அறிந்தே ஒரு மரம் சேதமடையக் காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்றால், 20,000 பவுண்டுகள் வரை அபராதம் உண்டு. ஒருவேளை ஒரு மரத்தை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டாலும் அதற்கு மாற்றாக இன்னொரு மரத்தை வளர்க்க வேண்டும்.”

“இதற்காகவே லண்டன்வாசிகளுக்குப் பெரிய சலாம் போடுவேன் நான்!”

“உங்கள் பாராட்டை நீங்கள் லண்டன் மேயரை நேரில் சந்திக்கும்போது சொன்னால் அவர் சந்தோஷப்படுவார். ஏனென்றால், அடுத்தடுத்து வரும் மேயர்கள் எல்லோருமே மரம் வளர்ப்பில் எவ்வளவு அக்கறையைக் காட்டினாலும், ‘இதெல்லாம் போதாது’ என்றே பெரும்பான்மை லண்டன்வாசிகள் நினைக்கிறார்கள். நான் உட்பட. விளைவாக, காற்று மாசை எதிர்கொள்ள மரம் வளர்ப்பு நீங்கலாக செயற்கை மரங்களை இப்போது நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைக்கிறார்கள்.”

அப்படியான மரம் ஒன்றையும் ஹெலன் எனக்குக் காட்டினார். ‘சிட்டி ட்ரீ’ என்று அந்தக் கட்டுமானத்தைச் சொல்கிறார்கள். நான்கு சாலைச் சந்திப்பு ஒன்றில் அதைப் பார்த்தேன். செங்குத்தான புதர் வேலிப் பலகையை நிற்கவைத்ததுபோல அது காட்சியளிக்கிறது. பார்க்க பச்சைப்பசேலென்று இருக்கிறது. ஒருவகை பாசியில் செய்கிறார்களாம். அதில் உள்ள ஈரப்பசை காற்றில் கலந்து வரும் மாசுத்துகள்களையும் கெடுதல் செய்யும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளுமாம். சுமார் 275 மரங்கள் உறிஞ்சும் அளவுக்கு இணையான மாசை இந்த ‘சிட்டி ட்ரீ’ ஒவ்வொன்றும் உறிஞ்சுகிறதாம். லண்டன்வாசிகளின் மனநலன் சார்ந்து மட்டும் ஆண்டுக்கு 260 கோடி பவுண்டுகளைச் செலவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு நோய்க்கான காரணத்தையும் செலவையும் சுற்றுச்சூழலோடு பொருத்திப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு மரமும் இந்த வகையில் விலைமதிப்பற்றதாக மாறிவிடுகிறது.

பசுமை லண்டனுக்காகக் குரல்கொடுப்பவர்கள் சிலரைப் பற்றி ஹெலன் என்னிடம் சொன்னார். அவர்களில் டேனியல் ரேவன் எல்லிசன் என்னை ஈர்த்தார். புவியியல் ஆசிரியரான இவர், குழந்தைகள் – மாணவர்களிடம் ஏன் ஒரு நகரம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன வழிகளில் எல்லாம் லண்டனை மேலும் பசுமையாக்கலாம் என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.

“மரங்களால் நகரின் பொருளாதாரத்துக்கு மறைமுகப் பலன் அதிகம். காற்றில் கலக்கும் கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை மரங்கள் வாரி வழங்குகின்றன. நகரில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் காக்கின்றன. நகரின் வெப்பத்தைத் தணிக்கின்றன. மேய்ச்சல் நிலங்களைக்காட்டிலும் மரங்கள் அடர்ந்த பகுதியின் நிலம் மழை நீரை அறுபது மடங்கு அதிகம் உறிஞ்சிக்கொள்கிறது. முக்கியமாக நச்சுக்காற்றால் மோசமாகாமல், மக்களுடைய சுகாதாரம் பாதிக்கப்படாமல் மரங்கள் தணிக்கின்றன. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு 1,327 லட்சம் பவுண்டுகள் என்று சொல்வேன். குழந்தைகளிடம் நான் முக்கியமாகச் சொல்வதே லண்டனில் 13,000 வகை ஜீவராசிகள் இருக்கின்றன. இந்த 13,000 ஜீவராசிகளில் மனிதனும் ஒன்று என்ற புரிதல் நமக்கு வேண்டும் என்பதைத்தான். இன்று உலகில் இறக்கும் ஏழு பேரில் ஒருவர் காற்று மாசினால் இறக்கிறார்; பிரிட்டனை எடுத்துக்கொண்டால் வருடத்துக்கு 40,000 பேர் காற்று மாசினால் இறக்கிறார்கள். மரங்களை வெட்டுபவர்கள் ஒருவகையில் கொலையாளிகள்” என்கிறார் ரேவன் எல்லிசன்.

ஆயிரம் வருடங்களைக் கடந்த பல மரங்கள் லண்டனில் இருப்பதாகச் சொன்னார் ஹெலன். டாட்டரிட்ஜ் யியூவில் உள்ள மரம் மிகப் புராதனமானது என்றார். அந்திரேயர் தேவாலய வளாகத்தில் உள்ள இந்த மரம் 2,000 வருடங்கள் பழமையானதாம். “ஐயாயிரம் வருடப் பழமையான மரங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நாங்கள் ஏழைகள்” என்றார்.

“ரொம்ப ஏழைகள்தான்”  என்றேன்.

அன்று மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே ஹெலன் விடைபெற்றுக்கொண்டார். நன்கு இருட்டியும் விடுதிக்குத் திரும்ப மனமில்லாமல் வீதிகளில் சுற்றிக்கொண்டேயிருந்தேன். அநேகமாக எல்லா வீடுகளை ஒட்டியும் மரங்கள் நிற்கின்றன. வீட்டின் வாசலில், மாடி பால்கனியில் கொடிகளைப் படரவிட்டிருக்கிறார்கள். வீட்டுக்குப் பின்புறம் சின்ன தோட்டம். சாலைகளில் மரங்கள். மழைத் தூறல்கள் விழுந்தன. குடையை விரிக்க மனமில்லை. உடலும் குளிரவில்லை. இலக்கின்றி நடந்துகொண்டிருந்தேன். நெஞ்சமெல்லாம் குற்றவுணர்வு அப்பிக்கொண்டிருந்தது. எதை வாங்க இப்படி எல்லாவற்றையும் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்?

- சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

(வெள்ளிதோறும் பயணிப்போம்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x