Published : 20 Jul 2018 10:06 AM
Last Updated : 20 Jul 2018 10:06 AM

தமிழ்நாட்டு மீன்கள் தமிழ்நாட்டிலேயே கிடைத்தால் பிரச்சினையே இல்லை!

2004 சுனாமியைத் தொடர்ந்து கடல் மீனுணவு குறித்த பெரும் புரளி ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது: ‘மனிதச் சடலங்களைத் தின்ற கடல் மீன்களை வாங்கி உண்ணாதீர்’. மீண்டும் மக்கள் இயல்பான மீனுணவுக்குத் திரும்புவதற்கு ஊடகங்களில் சில கடலறிவியல் அறிஞர்களைப் பேசவைக்க வேண்டியிருந்தது. ‘மீன்கள் மனிதச் சடலத்தை உண்பதில்லை. மேலும், மீன்கள் எதைத் தின்றாலும் அது மீன் புரதமாக மாறிவிடுகிறது’ என்கிற அறிவியல் உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ளச் சில காலம் பிடித்தது.

போர்னியோ உள்ளிட்ட கிழக்காசியக் காடுகளை அழித்து, எண்ணெய்ப் பனை சாகுபடியில் இறங்கியிருந்த பெருமுதலாளிகளின் கைக்கூலிகளாய் மாறிய சில இந்திய அறிவியலாளர்கள், இந்தியப் பாமாயில் சந்தைக்கு ஆதரவாக நின்று தேங்காய் எண்ணெய்க்கு எதிராகப் பீதியூட்டும் பரப்புரையை மேற்கொண்டனர். கேரள தேங்காய்ச் சாகுபடிப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. ‘இதய நோய்க்கும், தேங்காய் எண்ணெய்க் கொழுப்புக்கும் தொடர்பில்லை’ என்னும் எளிய உண்மை மக்களை எட்டுவதற்குள் தென்னை விவசாயிகளின் வாழ்வு சிதைந்துபோனது.

இன்று மீன் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஆந்திராவிலிருந்து வரும் மீன்களைத் தடைசெய்யவும் அதன் உணவுத் தரத்தைத் தணிக்கைசெய்யவும் ஒடிசா, அசாம் அரசுகள் உத்தரவிட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனை கேரள அரசு தடைசெய்துள்ளது. புவனேஷ்வர், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மீன் அங்காடிகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி நன்னீர் / கடல் மீன்களில் ஃபார்மாலின் என்னும் கரிம நச்சுத் திரவம் தடவப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளனர். என்ன நடக்கிறது இங்கே?

பொதுவாக, மீனவர்கள் கரை சேர்க்கும் அறுவடையில் ஃபார்மாலின் நச்சினைத் தடவுவதில்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆழ்கடல் மீனவர்கள்கூட மீன்களை நொறுக்கிய பனிக்கட்டிகளிட்டு சேமிப்பறையில் வைத்து, அப்படியேதான் கரையிறக்குகிறார்கள். அப்படியென்றால், ஃபார்மாலின் நச்சு எந்த நிலையில் தடவப்படுகிறது? என்னுடைய ஆழமான சந்தேகம் மீன் வணிகத்தில் கால் பதித்திருக்கும் பெருநிறுவனங்களை நோக்கியே செல்கிறது.

தமிழ்நாட்டிலேயே பிடிக்கப்பட்டு, அந்தந்த ஊர்க் கரைகளையே வந்தடையும் மீன்களில் எதுவும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அதற்கான தேவையில்லை. மீன்வள அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதுபோல, “தமிழ்நாட்டு மக்களின் தேவைக்குப் போதுமான அளவு கடல் மீன்கள் இங்கே கிடைக்கவில்லை” என்பதே கள நிலவரம். நிறைய நாம் வெளி மாநிலங்களிலிருந்து வாங்குகிறோம். ஆக, வந்த வேகத்தில் விற்கப்படும் மீன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைகள் ஏதும் இல்லை. ஆனால், மாநிலங்கள் கடந்து செல்லும், மாநிலங்கள் கடந்துவரும் மீன்களை நாட்கள் கடந்து விற்க இந்த நிறுவனங்கள் என்னென்ன செய்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.

அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறமிருக்க.. மறுபுறம் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாட்டிலேயே விற்கப்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிப்பதையும் முக்கியமான தீர்வாக இங்கே பார்க்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டு மீனவர்களின் அறுவடையில் கணிசமான ஒரு பகுதி பிற மாநிலங்களுக்குப் போய்விடுகிறது. தவிர, பிடிக்கப்படும் மீன்களை நல்ல முறையில் நுகர்வோரிடம் பாதுகாத்துச் சேர்ப்பதற்கான வசதிகளும் இங்கே குறைவாக இருக்கின்றன.

நான் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன். தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிக்குப் பேர் போன பகுதி இது. ஆனால், இங்கு பிடிபடும் பெரும்தொகை மீன்கள் கேரள, மகாராஷ்டிர, குஜராத் கடற்கரைகளுக்குப் போய்விடுகின்றன. காரணம் என்ன? நல்ல சூழல் நம்முடைய கடற்கரையில் இல்லை.

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுடன் குஜராத்தை ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன். குஜராத் மாநிலத்தில் 10% மக்கள் மட்டுமே அசைவர்கள். ஆனால், இந்தியக் கடல்மீன் அறுவடையில் 22% குஜராத் கடற்கரையில் கரையிறங்குகிறது. குஜராத்தில் கரைசேரும் அறுவடையில் 90% பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. காரணம், அதற்கான அடிப்படைக் கட்டுமானங்களையும் மீன்வளத் தொழில் கட்டமைப்புகளையும் நிறுவிக்கொள்ளச் சாதகமான சூழல் அங்கு இருக்கிறது.

குஜராத்தின் போர்பந்தர், மொண்ட்ரெல், விராவல் விசைப்படகு கட்டும் மையங்கள் நம் நாட்டில் பிரசித்தமானவை. விராவலில் மட்டும் 67 மீன் பதனிடு மையங்கள் உள்ளன. சிஐஎஃப்டி, சிஎம்எஃப்ஆர்ஐ மையங்களும், மீன்வளக் கல்லூரியும் அங்கு உண்டு. நாகர்கோவில் நகரத்தின் அளவே உள்ள விராவலில் ஆறு விசைப்படகு அணையும் தளங்கள் உள்ளன. ஏறத்தாழ 5,000 விசைப்படகுகள் அங்கு அணைகின்றன. விராவல் இந்தியாவின் மிகச் சிறந்த உயர் தொழில்நுட்ப மீன்பிடிக் கிராமம் ஆகும். இந்தியாவின் மிகச் சிறந்த மீனவர்கள் வாழும் கன்னியாகுமரிக் கடற்கரையில் இவை போன்ற வசதிகள் இருந்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் வெளியே போகாது. உடனுக்குடன் நம்முடைய கரைகளை வந்து சேரும் அவை வெகுசீக்கிரம் சந்தையையும் வீட்டையும் வந்தடையும். மீனவர்கள் - நுகர்வோர் இடையே மாறும் கைகளைக் குறைக்கவும், அதாவது இப்படியான நிறுவனங்களைத் தவிர்க்கவும் இது உதவும்.

பெருங்கடைகளில் இன்று சிம்லா, காஷ்மீர், சீன ஆப்பிள்கள், ஆஸ்திரேலிய கிவிகள் என்று ஏராளமான காய்கனிகள் தொலைதூரங்களிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இனம் புரியாத அச்சத்துடனேயே அவற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. காரணம் என்ன? அவை நீண்டநாள் கெடாமல் இருப்பதற்கு, பொருளின் அளவை / எடையை / கவர்ச்சியை அதிகரிப்பதற்கு வேதிமங்கள் தடவப்படுகின்றன. பற்பல குயுக்திகள் கையாளப்படுகின்றன என்ற நம் சந்தேகத்தில் உண்மையும் இருக்கிறது. எந்த உணவுப் பொருளுக்கும் இது நடக்க வாய்ப்புண்டு. வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக சில ஆண்டுகளுக்கு முன் வந்த செய்திகள் சிலருக்கேனும் நினைவிருக்கலாம்.

சிறந்த தீர்வு எதுவென்றால், நம்மூர் சரக்கு நம்மை விரைவாக வந்தடையவும் நம்முடைய உணவுத் தேவையை நம்மூரிலிருந்தே முழுமையாக உருவாக்கிக்கொள்வதும்தான். இந்தியர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 15 கிலோ மீன் புரதம் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பதோ 8 கிலோ மட்டுமே. நமக்குப் புரதம் கொடுப்பதிலேயே விலை மலிவானதும் மீன்கள்தான். ஆக, மீன்களை விட்டு நாம் விலகிவிட முடியாது. மீனவர்கள் பிரச்சினையைக் கரிசனத்தோடு கவனிப்பதுதான் நல்ல மீன்களுக்கான தீர்வாக அமையும்!

- வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x