Last Updated : 19 Jul, 2018 09:38 AM

 

Published : 19 Jul 2018 09:38 AM
Last Updated : 19 Jul 2018 09:38 AM

விபுலானந்தர்:  இரண்டாவது இளங்கோவடிகள்

விபுலானந்த அடிகள் பன்மொழிப் புலவர், வேதாந்த வித்தகர், சித்தாந்தப் பேரொளி, அறிவியல் மாமணி, கணிதப் பேரறிஞர், மொழிபெயர்ப்புத் திலகம், இசைத் தமிழ்ச் சிகரம், பாரதி காவலர் என்று விபுலானந்த அடிகள் பெற்ற புலமையின் அடுக்குகளை எண்ணி முடியாது. முத்தமிழை வளர்க்க இலங்கையில் பிறந்த இரண்டாம் இளங்கோவடிகள் அவர்.

இலங்கையில் மட்டக்களப்பில் காரைத்தீவு என்னும் சிற்றூரில் பிறந்த மயில்வாகனம், ராமகிருஷ்ண திருமடத்தில் துறவியாகச் சேர்ந்து ‘விபுலானந்த அடிகள்’ ஆனார்.

மயிலாப்பூர் திருமடத்தில் இருந்த காலத்தில் ராமகிருஷ்ண பணிமன்றம் நடத்திய ராமகிருஷ்ண விஜயம், வேதாந்தக் கேசரி ஆகிய தமிழ், ஆங்கில இதழ்களுக்கு ஆசிரியராய் அறிவுப்பொழிவாக வரைந்த கட்டுரைகள் என்றும் நினைக்கத் தக்கவை.

மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் விரிவே மதங்கசூளாமணி என்னும் நூலாக வெளிவந்தது. ஆங்கிலப் புலவர்களுள் சூளாமணியாகத் திகழும் ஷேக்ஸ்பியருக்கு  ‘மதங்கசூளாமணி’ எனப் பெயரிட்டார் விபுலானந்தர். மதங்கர் என்பது கூத்தரைக் குறிக்கும் சொல். சூளாமணி என்பது மகுடத்தில் அணியும் மாமணி. அந்நூலில், ஷேக்ஸ்பியர் என்னும் பெயரினை ‘செகசிற்பியர்’ எனவும் மாக்பெத், டன்கன், ஆத்ரே, போரெஸ்டர், ரோமியோ முதலிய பெயர்களை முறையே ‘மகபதி, இடங்கன், ஆதிரை, இரம்மியன்’ எனத் தமிழாக்கினார். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பன்னிரண்டினைத் தாமே விரும்பித் தேர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை ‘எடுத்துக்காட்டியல்’ என்னும் இயலில் ஒப்பீட்டு வகையில் ஆராய்ந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் சுவை மிகுந்த உரையாடல் பகுதிகள் சிலவற்றினைச் செய்யுளிலும் மொழிபெயர்ப்புச் செய்தார்.

விபுலானந்தரின் ஆற்றலுக்குப் பெரிய அணிகலனாகத் திகழ்வது ‘யாழ் நூல்’. தமிழர்கள் இழந்த இசைக் கருவிகளில் யாழின் பெருமையைக் கண்டறிந்து கணக்கியல், இயற்பியல், இசையியல், தமிழிலக்கியப் பரப்பியல் என அனைத்துத் துறைகளிலும் மூழ்கித் திளைத்துப் பண்டைய யாழ் வடிவங்களோடு முத்தெடுத்த முயற்சி அது. பாரதியாரின் பாடல்களைப் பரப்பிய முன்னோடிகளில் விபுலானந்தரும் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதிக் கழகம் நிறுவிய அவர், விழா அரங்குகளில் பாரதியார் பாடல்களைப் பாடச் செய்தவர். கலித்தொகை மட்டுமன்று கண்ணன் பாட்டும் கற்றறிந்தார் போற்றும் கவினுடையது என்று முழங்கியவர் விபுலானந்தர்.

ஜூலை 19: விபுலானந்தர் நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x