Last Updated : 17 Jul, 2018 10:58 AM

 

Published : 17 Jul 2018 10:58 AM
Last Updated : 17 Jul 2018 10:58 AM

ச.செயப்பிரகாசம் (1949-2018) களத்துக்கு வந்த  காந்தியக் கல்வி!

பல்கலைக்கழகங்கள் பாடங்கள் நடத்துவதற்கும் ஆய்வுகள் நடத்துவதற்கும் மட்டுமான இடமல்ல. அவை மக்களோடும் தொடர்புகொள்ள வேண்டும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காந்தியத் துறையின் தலைவராக இருந்த ச.செயப்பிரகாசம், மக்களோடு கல்வி நிறுவனங்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.

80-களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் காந்தியத் துறை, பகலில் வகுப்புகள் எடுப்பது, இரவில் கூட்டங்களுக்குத் திட்டமிடுவது, அழைப்பிதழ் தயாரிப்பது என 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருந்தது. துறைத் தலைவர் ஜேபியின் பணிகளில் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். அதை அவர் ஊக்குவிக்கவும் செய்தார். காந்தியத் துறைக்குப் படிக்க வருபவர்கள் குறைவு என்ற நிலையில், அத்துறையால் நடத்தப்பட்ட எம்எஸ்சி அமைதியாக்கம் என்ற படிப்புக்குப் பல மாணவர்களைச் சேர்த்து அவர்களைக் களப்பணியாளர்களாகவும் உருவாக்கினார். ராஜபாளையத்தில் அப்போது நடந்த கலவரத்தைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை அனுப்பிவைத்தார்.

மதுரையில் உள்ள தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதைப் பற்றி ஆராயவும் களப்பணி மேற்கொள்ளவும் மாணவர்களைத் தயார்படுத்தினார். சமயங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் காந்தியத் துறையில் ‘இன்டர்ரிலிஜியஸ் டயலாக்’ என்னும் உரையாடல் முயற்சியை முன்னெடுத்தார்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியிலும் அவரது பணிகள் விரிந்து பரந்திருந்தன. மதுரையில் சர்வ சமய வழிபாட்டுக்கென தனி அமைப்புகளை நிறுவினார். மதுரை அமைதி விஞ்ஞானக் கழகத்தை நிறுவினார். பாரம்பரிய முறையிலான சிக்கல் தீர்வு முறைகளைக் கண்டறிந்து அதனை ஆவணப்படுத்தியது இந்த நிறுவனம். காந்திய அறிஞர்கள் பலருடனும் அவருக்கு நேரடித் தொடர்பு இருந்ததால், அமைதி விஞ்ஞானம் பற்றிய அவர்களது புத்தகங்களையும் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

 ‘அகிம்சை’ என்ற தமிழ் ஆராய்ச்சி இதழையும், ‘நான்வயலன்ஸ்’ என்ற ஆங்கில இதழையும் தொடர்ந்து நடத்திவந்தார். அவருக்குக் காந்தியத் துறையோடு தமிழ்ப் பின்புலமும் இருந்தது. பேராசிரியர் தெ.பொ.மீ.யின் அன்பைப் பெற்றவர் ஜேபி. அவருடைய மகன் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது காலமானார். அவருடைய நினைவாகத் தமிழில் அறிவியல் ஆய்விதழ் ஒன்றையும் தொடர்ந்து நடத்திவந்தார்.

காந்தியத்தை உயிர்ப்போடு வைத்திருந்த அறிஞர் ஜேபி. எப்போதும் அவர் பேசும்போது கண்களை மூடிக்கொண்டுதான் பேசுவார். அவருடைய இயல்பு அது. கடந்த ஜூலை 11-ல் அந்தக் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x