Last Updated : 17 Jul, 2018 10:52 AM

 

Published : 17 Jul 2018 10:52 AM
Last Updated : 17 Jul 2018 10:52 AM

கும்பல் கொலைகளுக்குக்  காரணம் வாட்ஸப் மட்டும்தானா?

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் கும்பல் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்று 20 கோடி பேரிடம் இருக்கும் செல்போன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. வாட்ஸப்பில் பரவும் குழந்தை கடத்தல், கால்நடைத் திருட்டு வதந்திகளை நம்பும் விவரம் அறியாத கிராமப்புற மக்கள், சந்தேகப்படும் நபர்களைத் தாக்கிக் கொல்வதாகக் கூறப்படுகிறது. இந்த வதந்திகள் மறுக்கப்பட முடியாத உண்மைகளைப் போல பரவுவதுதான் இதில் வேதனை. விவரம் அறியாத மக்களின் தகவல் தொடர்புக் கருவி இப்படி வதந்திகளின் வாகனமாக இருப்பதற்குத் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உண்மையான பிரச்சினையிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் குறுகிய வாதம். மக்களிடையே இந்த அளவுக்குப் பகைமை எண்ணம் ஊடுருவியிருப்பதற்கு அரசியல் தலைமையும் ஒரு காரணம் இல்லையா? சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நாம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமா இல்லையா? இந்த சோக மரணங்களுக்கு, தகவல் அனுப்பும் சாதனமான வாட்ஸப் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே சமயத்தில் ஏராளமானோரைச் சென்றடைவது வாட்ஸப். சமூகப் பதற்றத்தினால் ஏற்படும் கொலைகள்தான் கும்பல் கொலைகள் என்று ஏற்படுத்தப்படும் மாயையிலிருந்து விடுபட மூன்று உண்மைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவது அம்சம், கும்பல்களால் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக தொகுக்கப்பட்ட தரவுகள் அரசிடம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்களின்படி, இதுவரை அப்படி ஏதும் தொகுக்கப்படவில்லை. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் மூலம் சேகரிக்கும் எண்ணமும் அரசுக்கு இதுவரை இல்லை. கும்பல்களின் கோபத்தால் விளையும் சம்பவங்களைக்கொண்டு எந்தவித முடிவுக்கும் வர முடியாது என்பதால் அரசு தொகுப்பதில்லையாம்.

இரண்டாவது அம்சம், இந்தியச் சட்டக் கட்டமைப்புகளின்படி, கும்பல்கள் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வது குற்றச் செயல் என்ற வகைப்பாடும் இல்லை. மக்கள் சேர்ந்து அடித்துக் கொல்வதற்கு எதிராக தனிச் சட்டம் ஏதும் தேவையில்லை என்று இப்போதும் சிலர் வாதிடுகின்றனர்.  “ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகம் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் படுகொலைகள்தான் இந்தக் கும்பல்களின் செயல்கள். இது ஒரு அடையாள அரசியலும்கூட” என்று பால் பிராஸ் போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கும்பல்களின் கொலைகளைத் தடுக்க ‘மானவ் சுரக்ஷா கானூன்’ என்ற பெயரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதலே கோரி வருகின்றனர். இக்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருந்தாலும், இத்தகைய சட்டம் அவசியமில்லை என்றே மத்திய அரசு  கருதுகிறது.

அரசிடம் அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லாததாலும், கொலைகளைத் தடுக்க வலுவான சட்டம் இல்லாததாலும், காவல் துறையினரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தரும் தகவல்கள்தான் மக்களிடையே பரவுகின்றன, கருத்துகளை உருவாக்குகின்றன.

மூன்றாவது அம்சம், உண்மைகள் புறக்கணிக்கப்பட்டு, சம்பவங்கள் எளிதாகச் சுருக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்பட்டுவிடுகின்றன. உடல் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்வதற்காகக் குழந்தைகளைக் கடத்துகின்றனர் என்று வாட்ஸப்பில் வெளியான தகவல்களால், சந்தேகப்படும் விதத்தில் நடமாடியவர்கள் மக்களால் மடக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில்கள் பெறாததால் தாக்கப்பட்டதில் இறக்கின்றனர் என்று சம்பவம் முடிக்கப்படுகிறது. இச்சம்பவங்களில் சிக்கி அடிபட்டு இறப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயரும் நாடோடி ஏழைகள் அல்லது மதச் சிறுபான்மையினர் என்ற உண்மை அடக்கி வாசிக்கப்படுகிறது. இச்சம்பவத்துக்கு முன்னால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட பதற்றம், சமூக மூலதனம், செல்வாக்கு ஆகியவற்றில் மக்களின் வெவ்வேறு பிரிவினரிடையே நிலவும் அசமத்துவம், காவல் துறையின் திறமை ஆகியவை புறக்கணிக்கப்படுகின்றன. வாட்ஸப்பால்தான் படுகொலைகள் என்று தட்டிக் கழிக்கப்படுகிறது.

பசுப் பாதுகாப்புச் சட்டத்தால் ஊக்கம் பெற்றுப் பசு குண்டர்கள் தாக்குவதால், கும்பல்கள் அடித்துக் கொல்வதும் அதிகரித்துவருகிறது. 2015-2017 வரையில் நடந்த 24 சம்பவங்களில் 34 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். இதில் 94% சம்பவங்கள் பசு குண்டர்கள் போன்றவர்களால் நிகழ்த்தப்பட்டவை. 91% பசு தொடர்பான தாக்குதல்கள். கும்பல் கொலைகளைத் தடுக்க சட்டம் இல்லை என்பதுடன் காவல் துறை சீர்திருத்தப் பரிந்துரைகள் அமலாகவில்லை என்பதும் இச்சம்பவங்களுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது பிரச்சினைகளின் மூல வேரைக் கண்டறியாமல், வெகு சுலபமாக எதன் மீதோ பழிபோட்டுவிட்டு பொதுக்கொள்கை வகுப்புக்குத் தீமை செய்கிறோம் என்பது புலனாகிறது. நம்முடைய சட்டங்களிலும் காவல் துறையிலும் உள்ள பிரச்சினைகளை அலட்சியப்படுத்துகிறோம். செல்போனில் வாட்ஸப்பைப் பொருத்துவதைப் போலவே அரசின் கொள்கைகளையும் வெகு எளிதாக வகுக்கப் பார்க்கிறோம். பெரும்பாலான இந்தியர்களுக்குப் பாதுகாப்பு உணர்வையும், அந்தரங்கத் தன்மையையும், தகவல்களை அறியும் வாய்ப்பையும் அளிக்கும் வாட்ஸப்பையே வில்லனாகச் சித்தரித்து அதற்குத் தணிக்கையையும் கட்டுப்பாடுகளையும் விதித்து முடக்க முயற்சிக்கிறோம். அதே வேளையில் திட்டமிட்டுக் கும்பல் கொலைகளைச் செய்யும் சமூக விரோதிகளைத் தண்டனையிலிருந்து தப்புவிக்கிறோம். வாட்ஸப் மூலம் பரவும் தகவல்களை அது சரிபார்க்கக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய ஜனநாயக அரசு செய்ய வேண்டிய கடமையை வாட்ஸப்பால் செய்ய முடியாது என்பதே இங்கு முக்கியம். சமூகத்தில் நிலவும் பதற்றங்களையும் சந்தேகங்களையும் போக்கி, வதந்திகளை நம்பக் கூடாது என்று மக்களைத் தயார்படுத்துவதும் அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியதும் முழுக்க முழுக்க அரசின் கடமைதானே தவிர வாட்ஸப்புடையது அல்ல.

- அபர் குப்தா,

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.

தமிழில்: சாரி.  ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x